உள்நாட்டில் மதிப்பிழந்த ரப்பர் விலை வெளிநாட்டுச் சந்தையில் அதிகரிப்பு
கேரளாவில் ரப்பர் தொழில் பிரசித்தி பெற்றது ஆகும். ஓணம் பண்டிகையின் போது ஏற்பட்டுள்ள இந்த விலைச்சரிவு ரப்பர் விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மழை குறைந்து உற்பத்தி மேம்பட்டு வந்த நேரத்தில் இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. “ஆர்எஸ்எஸ் - 4” ரகம் ரப்பருக்கு, ரப்பர் வாரியத்தின் விலை ரூ.189 ஆக உள்ளது. கடந்த ஜூலை 30 அன்று சந்தை விலை ரூ.201ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து சரிந்தது. அதாவது ஒரு மாதத்திற்குள் ரூ.20 ஆக சரிந்தது. தற்போது ரூ.181 ஆக உள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டுச் சந்தையில் விலைகள் உயர்ந்து வருகின்றன. ஆர்எஸ்எஸ் 4 ரகத்தின் பாங்காக் விலை ரூ.191 என்ற நிலையில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா மீது விதித்த பழிவாங்கும் வரிகள் ரப்பரை மோசமாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டில், இந்தியா 4,563.31 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரப்பர் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இருப்பினும், இன்றுவரை தொடரும் கட்டுப்பாடற்ற இறக்குமதிகள் ரப்பரின் உள்நாட்டு விலையை கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த விலை வீழ்ச்சி தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மற்றும் கேரளம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள விவசாயிகளை கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.