tamilnadu

img

புதுக்கோட்டை நகர்மன்றக் கட்டிடத்தை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் தமுஎகச வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகர்மன்றக் கட்டிடத்தை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்  தமுஎகச வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 4-  1899 இல் கட்டப்பட்ட புதுக்கோட்டை நகர் மன்ற கட்டிடத்தை, அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகர கிளையின் 16 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் சு.பீர்முகமது, பொருளாளர் க.உஷாநந்தினி ஆகியோர் அறிக்கைகளை வாசித்தனர். ‘உள்ளங்கை உலகம்’ என்ற தலைப்பில் எஸ்.இளங்கோ பேசினார். மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், பொருளாளர் மு.கீதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் கிளைத் தலைவராக க.உஷாநந்தினி, செயலாளராக கஸ்தூரிரங்கன், பொருளாளராக இதயம் ஹமீது, துணைத் தலைவர்களாக காசாவயல் கண்ணன், மைதிலி, துணைச் செயலாளர்களாக புதுகை புதல்வன், ரேவதி ராம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 1899 இல் கட்டப்பட்ட புதுக்கோட்டை நகர் மன்ற கட்டிடத்தையும், அதன் சுற்றுப்புறத்தையும் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில், தொல்லியல் வட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, புதுகை புதல்வன் வரவேற்க, க.மாதவன் நன்றி கூறினார்.