மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
பாபநாசம், அக் 13- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, பசுபதிகோவிலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் முன்னிலை வகித்தார். போட்டியை பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். 19 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில், 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் உமையாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடமும், 17 வயது மாணவிகள் பிரிவில் கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் பள்ளி முதலிடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் பசீர் அகமது சான்றிதழ் வழங்கினார். இதில், காவல்துறை ஆய்வாளர்கள் உஷா, சகாய அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
