அரசுப் பணிகளில் கூடுதல் இடம் ஒதுக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, அக்.16 - நூறு சதவீதம் ஊனமுற்ற, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில், அனைத்து இடங்களிலும் பணிபுரிய முடியாத சூழலில் வங்கிப் பணியிலும், கல்விப் பணியிலும் கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து வருகை குறித்து ஸ்பீக்கர் மூலம் அறிவிப்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான திருச்சி மண்டலம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபால், சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மாலதி, புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
