ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்
கோயம்புத்தூர், செப்.27- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 16ஆவது மாநில மாநாடு கோவையில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டையொட்டி, ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கை மாநாடு வெள்ளியன்று கோவையில் நடை பெற்றது. கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கை மாநாட்டிற்கு, சிஐடியு மாவட்டத் தலை வர் கே.மனோகரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஜான் அந்தோனிராஜ் வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, மாநில மாநாட்டு வர வேற்பு குழு தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், நிரந்தரமற்ற தொழி லாளர்களின் எண்ணிக்கை தற்போது பெருகி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களும் இந்த வகையிலே வேலை செய்து வருகிறார்கள். காண்ட் ராக்ட், கேஸுவல், பயிற்சியாளர் என பல பெயர்களில் பணி புரியும் தொழி லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். குடிநீர், மின்சாரம், டாஸ்மாக், போக்கு வரத்து, அங்கன்வாடி, மக்களை தேடி மருத்துவம், ஊரக வளர்ச்சி, சிவில் சப்ளை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர் களாக பணிபுரியும் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனை, ஜவுளிக்கடை, தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உணவு விடுதி, வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ரூபாய் 26 ஆயிரத்தை குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும். மற்றும் சட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சர வணன் நன்றி கூறினார். முன்னதாக இம்மாநாட்டில் தீக்கதிர் நாளிதழுக்கு 169 சந்தாக் களுக்கான தொகை ரூ.3,83,600 மூத்த தலைவர் அ.சவுந்தரராசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் தீக்கதிர் பொறுப்பாளர் வி.இராம மூர்த்தி வழங்கினார்.
