tamilnadu

img

சுய உதவி குழு சேமிப்பு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி கண்டித்து சிபிஎம் முற்றுகை போராட்டம்

சுய உதவி குழு சேமிப்பு பணத்தைகொள்ளையடிக்க முயற்சி கண்டித்து சிபிஎம் முற்றுகை போராட்டம்

கடலூர், செப். 22 –  சுய உதவிக்குழு சேமிப்பு பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. கடலூர் வட்டம், வாண்டியம்பள்ளம் ஊராட்சி ரெட்டியார் பேட்டை, அன்னப்பன்பேட்டை, வாண்டியம்பள்ளம், நயினார் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 27 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 320க்கு மேற்பட்டோர் இதில் உறுப்பினராக உள்ளனர். வாழ்வாதார துயர் துடைப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், முதலமைச்சர் காலை உணவு திட்டம் போன்ற திட்டப்பணிகள் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த குழுக்களின் வங்கி கணக்கில் ரூ.35 லட்சம் உள்ளது. இந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்கு வெளி நபர்கள் மற்றும் திட்ட அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, தீர்த்தனகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரிகளின் துணையோடு காசோலைக்கு பதிலாக பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே பெண்கள் சுய உதவி குழுக்களில் வெளி நபர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சுந்தரமூர்த்தி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி, மனு கொடுக்க செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகவாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றார். இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், நிர்வாகிகள் ஏ.வைத்திலிங்கம், பி.அல்லி முத்து, வி.ஆறுமுகம், பி.ஏழுமலை, பி.பாலு, ஜி.ராஜி, கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.