விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக! சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 27- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட 4 ஆவது மாநாடு ஞாயிறன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. தோழர் சங்கிலிதுரை தலைமையில், துறையூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை தோழர்கள் சிவானந்தம், ஆனந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மண்ணச்சநல்லூரில் இருந்து விவசாயிகள் சங்க முருகேசன் தலைமையில் கொண்டுவரப்பட்ட தோழர் பூமாலை நினைவு ஜோதியை, தோழர்கள் கனகராஜ், சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநாட்டிற்கு சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் பிரபு வாசித்தார். மாநிலச் செயலாளர் குமார் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் சம்பத் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். பிஎச்இஎல், என்எல்சி, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கன்வீனராக எஸ்.சம்பத், நிதி காப்பாளராக எம். பன்னீர்செல்வம் மற்றும் ஆர். பரமசிவம், யு.பிரபு, பி.தியாகராஜன், ஜெ. மரியபுஷ்பம், எம். ஆனந்தன், ஏ. கனகராஜ், எஸ். சிவானந்தம் உள்பட 9 பேர் கொண்ட அமைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளர் கோபிகுமார் நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் நவமணி வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.