சென்னை, ஜன.20- ஆன்லைன் ரம்மி முதலாளிகளுடன் ஆளுநர் ரவிக்கு ரகசிய தொடர்பா என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநராக நீடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை தவிர ஆளுநருக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அம்பேத்கர், அரசியல் சாசன சபையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவின்படி செயல்படுவதுதான் அவருக்கு உள்ள வேலை. அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதோடு, சனாதன கருத்துக்களை பகிரங்கமாக பரப்பி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, ‘ஒரு மதச்சார்பற்ற நாடு என்று உலகில் கிடையாது’ என்கிறார். ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த விளையாட்டை தடை செய்து கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு அனுமதி தராமல், ஆன்லைன் ரம்மி முதலாளிகளுடன் ரகசிய பேச்சு நடத்துகிறார்.
சட்டமன்ற கூட்டத்தில் தரம்தாழ்ந்து நடந்து கொண்டார். அமைச்சரவை கொடுக்கும் அறிக்கையை, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும். இதற்கு மாறாக ஆளுநர் சில பகுதிகளை நீக்கி, சேர்த்து வாசித்துள்ளார். கூட்டாட்சி, சமூகநீதி, பெண்உரிமை போன்ற வார்த்தைகளை தவிர்த்த அவர், பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கரின் பெயரைக் கூட உச்சரிக்க மறுத்துள்ளார். தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு கசக்கிறது. மக்களின் கொந்தளிப்பையடுத்து, தமிழகம் என்று பேசியதற்கு, அவர் கொடுத்துள்ள விளக்கம் அதை விட மோசமாக உள்ளது. அவர் பேசியதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்கிறார். இந்த விளக்கம் ஏற்புடையதல்ல; பொங்கல்விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என அச்சடிக்க மறுத்தது ஏன்? சட்டமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் என்பதை உச்சரிக்க மறுத்தது ஏன்? தமிழ்நாடு, தமிழ்மொழி, திருக்குறளை, மதச்சார்பின்மையை அங்கீகரிக்க மறுக்கும் அவர் ஆளுநராக இருப்பதற்கு அறவே தகுதி இல்லை. எனவே, ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வேண்டும். ஒன்றிய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மனுநீதி கொள்கையை ஏற்கமாட்டோம்!
முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாடு பெயர் வைக்க சங்கரலிங்கனார் மேற்கொண்ட போராட்டம், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகளை விளக்கினார். ‘‘பாஜக அல்லாத அரசுகளை கவிழ்ப்பது அல்லது ஆளுநர்கள் மூலம் பாஜக சீர்குலைத்து வருகிறது. புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜக தனது திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடாக உள்ள தமிழ்நாடு என்பதை ‘தமிழகம்’ என்று ஆளுநர் அழைத்துள்ளார். நாட்டின் வரலாறு, அரசியல், சட்டம் தெரியாமல், ஒரேநாடு, ஒரேமொழி என்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மனுநீதி கொள்கையை பேசி வருகிறார்’’ என்றார்.
ஆளுநர் பதவி தேவையா?
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, ‘‘மக்களின் உணர்வுகளுக்கு மாறாக ஆளுநர் செயல்படுகிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி தராவிடில், அரசு எப்படி செயல்பட முடியும்? பாஜக வெற்றி பெற முடியாத இடங்களில், ஆளுநர்களை வைத்து ஆட்சி நடத்த பாஜக முயற்சிக்கிறது. ஆளுநர்கள் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர். ஆர்எஸ்எஸ்-பாஜக, ஆளுநர்களை ஆயுதங்களாக பயன்படுத்துகிறது’’ என்று குற்றம் சாட்டினார். ‘‘ஆளுநர் பதவியே தேவையற்றது என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி’’ என்றும் அவர் கூறினார். ‘‘தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் வெளியேற வேண்டும் அல்லது ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அதுவரையிலும் போராட்டம் தொடரும்’’ என்று மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் கூறினார்.