மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி! பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு நகரப்பேருந்து இயக்கம்
தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூரில் இருந்து, கழுமங்கலம் வரை வந்து கொண்டிருந்த அரசு நகரப்பேருந்தை, பழையபடி 5 நடைகள் இயக்கவும், பள்ளிக்குழந்தைகள், பணிக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி திருவையாறு ஒன்றியம் வரகூரில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, திருவையாறு வட்ட அலுவலகத்தில், வட்டாட்சியர் முருகவேல் தலைமையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீஜா, தஞ்சாவூர், திருவையாறு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர்கள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ராம், எம்.பழனி அய்யா, ஆர்.பிரதீப் ராஜ்குமார், கே.மதியழகன், எம்.கதிரவன் மற்றும் அம்மையகரம், கழுமங்கலம், கார்ப்பட்டி கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்தில் பேருந்து இயக்கப்படும் என அலுவலர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன் அடிப்படையில், திங்கட்கிழமை காலை 6 மணி முதல் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா கலந்து கொண்டு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சால்வை அணிவித்தார். அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.