உங்களுடன் ஸ்டாலின் திட்டம் விண்ணப்பப் படிவம் வழங்குவதை ஆய்வு செய்த ஆட்சியர்
தஞ்சாவூர், ஜூலை 13- தமிழக முதல்வர் ஜூலை 15 அன்று தொடங்கவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் திட்டம் குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விழிப்பிணர்வு கையேடுகளை, தஞ்சாவூர் மாநகராட்சி கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில், பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மொத்தம் 353 சிறப்பு முகாம்கள், 15.07.2025 அன்று தொடங்கி பல்வேறு கட்டங்களாக 30.09.2025 வரை நடைபெற உள்ளன. இந்த முகாம்களின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், முகாம்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் செல்லும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 நலத்திட்டங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில், 15 துறைகள் சார்ந்த 46 நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதனை நேரில் ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், கரந்தை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பணிகளை பார்வையிட்டு, தன்னார்வலர்கள் வழங்கும் தகவல்களைப் பற்றியும், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.