tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

தேக்கம்

திரிபுராவில் பழங்குடி மக்களுக்கென தனி அதிகாரங்கள் கொண்ட கவுன்சில், இடது முன்னணியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் வரும் ஏப்ரலில் மீண்டும் நடைபெற விருக்கிறது. மாநில அரசில் ஆளும் கூட்டணியான பாஜக-திப்ரா மோதா கட்சிகள் இந்தக் கவுன்சிலில் எதிரெதிர் நிற்கின்றன. பாஜகவுக்கு பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்று திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் தேப்பர்மா கூறி யுள்ளார். படுமோசமான ஊழல் கவுன்சிலில் நடந்துள் ளது என்று திப்ரா மோதா மீது பாஜக குற்றம் சாட்டி யுள்ளது. ஆனால், மாநில அரசில் அதிகாரப்பகிர் வில் மோதலைக் காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு கட்சிகளும் நாடகம் ஆடுகிறார்கள். மக்கள் பிரச்சனைகள் தேங்கிக் கிடைக்கின்றன என்று பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது.

பக்கம்

“கேரளம்” என்ற பெயர் மாற்றத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கை திடீரென்று மம்தா பானர்ஜிக்கு நினைவு வந்துள்ளது. எட்டாண்டுகளுக்கு முன்பாக, மேற்கு  வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பினார்கள். ஆனால், அதற்குப்பிறகு மம்தா பானர்ஜியும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அதன் பக்கமே போகவில்லை. ஒன்றிய அரசும் அந்தத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு விட்டது. கேரளா வைப் போன்று மீண்டும் சட்டமன்றத் தீர்மானத்தைப் போடுவது, பெயர் மாற்றம் பற்றித் தொடர்ந்து தில்லி யில் பேசுவது என்று எதையுமே மம்தா செய்யவில்லை. கேரளப் பெயர் மாற்றத்தால், இதை மறந்து விட்டோமே என்று புலம்புகிறார்.

கலக்கம்

மார்ச் 15 அன்று பகுஜன் சமாஜ் கட்சி யின் நிறுவனர் கன்ஷிராமின் பிறந்த நாள் வருகிறது. இதைப் பெரிய அளவில் கொண்டாட அகிலேஷ் யாதவ் தலைமை யிலான சமாஜ்வாதிக் கட்சி முடிவு செய்துள்ளது. பெரும்பான்மை மக்களுக்கான நலன்களுக்கா கத் தொடர்ந்து போராடிய கன்ஷிராமின் கொள்கை களைத் தங்கள் அரசு நடைமுறைப்படுத்தும் என்று  அகிலேஷ் அறிவித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மை யினர் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வரும் சமாஜ்வாதிக்கட்சி, அடுத்த ஆண்டுத் தேர்தலில் கன்ஷிராமையும் முன்னிறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் போகிறது. கடந்த சில  ஆண்டுகளாகவே அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடாத மாயாவதி, அகிலேஷின் முயற்சிகளால் கலக்கமடைந்துள்ளார்.

நோக்கம்

இந்திய ரயில்வே நிதிக்கழகத்தின் பங்குகளை மேலும் விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேக்குச் சொந்தமான அந்தக் கழகத்தில் ஒன்றிய அரசுக்குத் தற்போது 86.36 விழுக்காடு பங்குகள் உள்ளன. அதில் 2 விழுக்காடு பங்குகளை முதலீட்டாளருக்கு அடுத்த இரண்டு நாட்களில் விற்கப் போகிறார்கள். அந்த முதலீட்டாளரின் அணுகுமுறை யைப் பார்த்து, மேலும் 2 விழுக்காடு பங்குகளையும் தரப் போகிறார்கள். சிறிது, சிறிதாக அந்தக்கழகத்தை தனியார் மயமாக்கும் பாதையில் ஒன்றிய அரசு அழைத்துச் செல்கிறது. முதலீட்டைத் திரட்டுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கையில் பங்குகள் விற்பனை தேவையில்லாத ஒன்று என்று நிதித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இது நிதி திரட்டுவதற்கான ஏற்பாடு இல்லை. கொஞ்சம், கொஞ்சமாகப் பங்குகளை விற்று, தனியார் கைகளில் ஒப்படைப்பதுதான் நோக்கம் என்றும் சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.