சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் வெறிச்சோடிய சென்னை
சென்னை,அக்,19 தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் சென்னை மாநகரமே கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை (அக்.20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வார விடுமுறையை தொடர்ந்து திங்கட்கிழமை வருவதால் மக்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை வேலை மற்றும் படிப்புக்காக தங்கி இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுவரை சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 9.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமும், 6.15 லட்சம் பேர் அரசு பேருந்து மூலமும், 2 லட்சம் பேர் வரை ஆம்னி பேருந்துகள் மூலமும், 1.5 லட்சம் பேர் சொந்த வாகனங்களிலும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். குறிப்பாக, வெள்ளிக்கிழமை முதலே மக்கள் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட தொடங்கினர். அந்தவகையில் அக்.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மொத்தமாக 6,920 பஸ்கள் இயக்கப்பட்டன. சனிக்கிழஐம (அக்.18) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,926 பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் மட்டும் பேருந்து மூலம் 6,15,992 பயணிகள் பயணித்துள்ளதாகவும், குறிப்பாக நேற்று மட்டும் 2,56,152 பயணிகள் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சொந்த வாகனங்களில் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிமாக இருந்தது. அதனால், சென்னையின் முக்கிய பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் சாலைகளில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்றன. அதனால், மக்கள் மெல்ல மெல்ல தங்களது வாகனங்களில் நகர்ந்து சாலையை கடந்து சென்றனர். சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் சென்னையே அமைதி பூங்காவாக காட்சியளிக்கிறது. முக்கியமான சாலை சந்திப்புகளில் வழக்கமான கூட்டத்தை காணமுடியவில்லை, திநகர் ரங்கநாதன் தெருவிலும் வழக்கமான கூட்டம் இல்லை. நகரின் இதர வர்த்தக பகுதிகளான புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம்,பூக்கடை பகுதிகளில் மட்டும் ஒரளவு கூட்டத்தை காண முடிந்தது.
