வீடுகளை இடிக்காமல் நகர்ப்புற விரிவாக்கம் மேற்கொள்க! சிபிஎம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- திருச்சி மாநகராட்சி 25 ஆவது வார்டுக்குட்பட்ட உய்யக்கொண்டான் பகுதியில் உள்ள ஆதிநகர், சாந்த ஷீலா நகரில் 40 வருடத்திற்கு மேல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தங்கள் வீடுகளுக்கு மின், குடிநீர் இணைப்பு பெற்றும் வீட்டு வரி செலுத்தியும் வருகின்றனர். மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கிய இப்பகுதியில், நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில், வீடுகளை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆதிநகர், சாந்தஷீலாநகர் பகுதி மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், பட்டா வழங்கிய பகுதியில் உள்ள வீடுகளை இடிக்காமலும் நகர்ப்புற விரிவாக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில், செவ்வாய் அன்று உய்யக்கொண்டான் கால்வாய் கிழக்கு கரை பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஹரிபாஸ்கர் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக் அகமத், மூத்த தோழர்கள் சம்பத், நடராஜன், பழனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்வர் உசேன், சீனிவாசன், சீதா வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். உண்ணாவிரதத்தை முடித்து வைத்து மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் சிறப்புரை ஆற்றினார். பகுதிக்குழு உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.