tamilnadu

img

சாலையில் பரப்புரை நடத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும்

சாலையில் பரப்புரை நடத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு  துயரகரமான அத்தியாயமாக செப்டம்பர் 27ஆம் தேதி பதிவாகியுள்ளது. கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் 40 அப்பாவி உயிர்கள் பலியாகி யுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அவலத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் “சாலையில் பரப்புரை நடத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்” என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களின் ஆறுதல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சம்பவம் நடந்த உடனேயே கரூர் விரைந்தனர்.  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கந்தவர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாதர் சங்க பொதுச் செயலாளர் அ.ராதிகா, கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எம்.ஜெயசீலன், எஸ்.பாலா,  மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கே.சக்திவேல், ராமமூர்த்தி, மாநகர செயலாளர் தண்டபாணி, வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் கே.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.  இவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நடந்த சம்ப வத்தைப் பற்றி கேட்டறிந்து ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.  “தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத துயர சம்பவம்” இந்நிலையில் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை யும் மனவேதனையையும் ஏற்படுத்தக்கூடிய சம்பவமாக இருக்கிறது. தமிழக வரலாற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடிய பெரிய அரசியல் கூட்டங்கள் நடந்தபோது கூட இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்ததே கிடையாது” என்று கூறினார்.  “40 பேர் உயிரிழப்பதும், நூற்றுக்கணக்கா னோர் கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெறு வதும் உண்மையிலேயே மிகப்பெரிய துயர சம்பவம்.  இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா வையே இன்று உலுக்கியிருக்கிறது” என்றார்.  மரணமடைந்த 40 பேரின் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து தமது ஆறுதலைத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார்.  சாலையில் பரப்புரை - அவலத்தின் மூல காரணம்  “ஏன் இவ்வளவு நாட்களில் இல்லாமல் இன்று  மட்டும் இந்த சம்பவம் நடந்தது என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று வலியுறுத்திய கே.பாலகிருஷ்ணன், “பொதுவாக அரசியல் கட்சி கள் பெரிய மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத் தும்போது ஒரு மைதானத்தில் முறையான ஏற்பாடுகள் செய்து, மக்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்து,  எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கூட்டங்கள் நடத்தும்போது பல லட்சக்கணக்கான மக்கள் கூடி னாலும் ஒரு சிறு சம்பவம் கூட நடப்பதில்லை” என்று  சுட்டிக்காட்டினார்.  “ஆனால் இப்போது ஒரு பெரிய சாலையை மறித்து அந்த சாலையில் பரப்புரை கூட்டம் நடத்து வதுதான் இந்த சம்பவத்திற்கு அடிப்படையான காரணமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.  “பொதுவாக காவல்துறையிடம் கூட்டம் நடத்த, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் குறிப்பிட்ட இடத்தில்தான் அனுமதிப்பார்கள். இப்போது எப்படி இந்த சாலையை மறித்து பரப்புரை நடத்து வதற்கு சில கட்சித் தலைவர்களுக்கு அனுமதி கொடுக் கிறார்கள்? ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர் அந்த இடத்தில்தான் பேசியிருக்கிறார், கேட்டிருக்கிறார். இன்று தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் அங்கு வந்து பேசுகிறார்” என்று கேள்வி எழுப்பினார்.  மக்களின் அவதி  “ஒரு குறுகிய சாலையில் போக்குவரத்தை தடுத்து, காலை 9 மணி, 10-11 மணிக்கு வந்தவர்கள் மாலை 6 மணி வரை, 7 மணி வரை அங்கேயே நிற்கி றார்கள். குடிக்கத் தண்ணீர் இல்லை, சாப்பிடுவதற்கு வசதி இல்லை. எந்த வாய்ப்பும் இல்லை” என்று மக்களின் அவலநிலையை எடுத்துரைத்தார்.  “12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு கடைசியில் பார்த்தால் 7 மணிக்கு வந்திருக்கிறார். ஒரு பெரிய காலதாமதமும் ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்துதான் இந்த சம்பவம் நடந்தது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.  அரசியல் கட்சிகளின் பொறுப்பு  “இனிமேல் இந்த மாதிரி சாலையில் பரப்புரை கூட்டங்களை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் கட்சிகளே கேட்கக் கூடாது. தனி ஏற்பாடு செய்து, தனியாக மைதானம் ஏற்பாடு செய்து, முறை யான எல்லா ஏற்பாடுகளும் செய்து, மக்கள் கூடும்போது, வரும்போது அவர்களுக்கு எந்தக் குறைபாடும் இல்லாமல் அவர்களது ஏற்பாட்டில் செய்ய வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.  “அப்படி செய்யாமல் ஏதோ வேனிலேயே இருந்து பேசிவிட்டுப் போவது சரியல்ல. அந்த வேனைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும்போது இன்று இங்கு 40 பேர் உயிரிழந் திருக்கிறார்கள். நாமக்கல்லில் நடந்ததைப் பார்த்தீர்களானால் பலர் மயங்கிவிட்டனர். எனவே இந்த மாதிரியான அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டுமானால், பொதுச் சாலையை மறித்து பரப்புரை கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு இதில் பொறுப்பு இருக்கிறது” என்று கடுமையாக கண்டித்தார்.  விசாரணை கமிஷன் குறித்த கோரிக்கை  “உண்மையிலேயே பாதுகாப்பு ஏற்பாடு என்ன இருந்தது; வரக்கூடிய,  மக்களுக்குக் குடிநீர் ஏற்பாடு எல்லாம் இருந்ததா என்பதெல்லாம் இன்னும் முழுமையாக விசாரித்தால்தான் தெரியும்.  ஏற்கனவே பல விசாரணை கமிஷன்கள் கொடுத்த அறிக்கைகள் எல்லாம் நெடுங்காலம் கடந்துவிடு கின்றன. ஒன்றும் நடவடிக்கைக்கு வந்த மாதிரி தெரியவில்லை. எனவே சம்பவம் நடந்ததும் அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைப்பதும்  நல்ல நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். ஆனால் அந்த விசாரணை கமிஷன் நெடுங்காலம் கடந்து விசாரணை அறிக்கையைக் கொடுப்பது, இரண்டு ஆண்டு, ஒரு ஆண்டு கழித்து விசாரணை முடிப்பது, தேவையற்ற காலதாமதத்தைக் கொடுப்பது, அதற்குள் மக்கள் அதை மறந்துபோய் விட்டால் அந்த விசாரணை கமிட்டி அறிக்கையும் அப்படியே போய்விடும்” என்று கவலை தெரிவித்தார்.  “அதுபோல இல்லாமல் ஒரு மாத காலம் - ஒரு  மாதமே அதிகம் - ஒரு இரண்டு வாரம், மூன்று, வாரத் திற்குள் இந்த விசாரணை கமிஷன் அறிக்கை வர வேண்டும். அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.  “அது மட்டுமல்ல, இப்போது உயிரிழந்தவர் களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறார்கள். எங்க ளைப் பொறுத்தவரையில் அந்தக் குடும்பத்தில் வேலை செய்வதற்குத் தகுதியாக இருக்கும் ஒரு வருக்கு அரசு வேலையும் அரசு அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.  எதிர்காலத்திற்கான எச்சரிக்கை  “எதிர்காலத்தில் இதை ஒரு அனுபவமாக ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி சம்பவங்கள் எப்போதுமே நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் இதைப் படிப்பினையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவே  உடனே வந்து, ஆணையம் அமைத்து, மக்க ளுக்கு, உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி  அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். முன்னதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி னர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1  லட்சமும் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  கரூரில் கடை அடைப்பு -  மக்களின் அஞ்சலி  இந்நிலையில், ஞாயிறன்று உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் மாவட்ட வர்த்தகச் சங்கம் சார்பில் ஒரு நாள்  கடை அடைப்பு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப் பட்டன. டீக்கடை, உணவகங்கள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.  காயமடைந்தவர் களில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 50 நபர்களும், அமராவதி, அக்சயா, அப்போலோ, நாதன், ரஜினிகாந்த், சஞ்சனா ஆகிய தனியார் மருத்துவமனைகளில் 61 நபர் களும் அனுமதிக்கப்பட்டு உயர்சிகிச்சை வழங்கப் பட்டு வருகிறது.