tamilnadu

img

பன் பட்டர் ஜாம் திரைப்பட விமர்சனம்

பன் பட்டர் ஜாம் திரைப்பட விமர்சனம்

“பன், பட்டர், ஜாம்” -  இது இன்றைய இளைய தலைமுறையில் – குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியரின் ஓய்வு  நேரச் சிற்றுண்டி.  இந்தத் தலைப்பில் கடந்த வெள்ளியன்று (ஜூலை 18) வெளியிடப்பட்டுள்ளது ஒரு திரைப்படம். வழக்க மாகத் திரைப்படங்களில் அமையும் ‘மசாலா’க்கள், தேவையற்ற பிரம்மாண்டங்கள், பண்பாட்டுக்கு முரண்பட்ட கருத்துக்கள், நுட்பவியல் (technology) என்ற பெயரில்  நம்பத் தகாத காட்சிகள் என்பன வற்றை யெல்லாம் தவிர்த்து இயல்பான நிகழ்வு களைத் திரைப்பட நுட்பத்தில் செம்மையயாகத் தந்துள்ள திரைப்படம்  “பன், பட்டர், ஜாம்”.

நட்பு, காதல் இரண்டையையும்  நோக்க   நட்புத் தான் மேலானது. காதல் பற்றிக் கவிஞர்களும் புலவர் களும் பலவாறாகப் பாராட்டியுள்ளர்: போற்றியுள்ள னர். அக் காதல் நட்புக்கு அடுத்துத்தான் என்பதை இத்திரைப்படம் தெளிவுபட வெளிப்படுத்தியுள்ளது. காதல் கடந்து  செல்லத் தக்கது. நட்பு அவ்வாறன்று: வாழ்நாள் இறுதிவரை கட்டிக்காக்க வேண்டிய ஒன்று என்பதை துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ள இயக்கு நர்  ராகவ் மிர்ததின் பாராட்டுக்குரிய பண்பாளர்..

“பிரம்மாண்டம்”  என்ற பெயரில்  கனவுக்காட்சி களுக்காக காஷ்மீரோடு நிற்காமல் கடல் கடந்து கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா  எனக் கீழ்த்திக்குகளிலும்   கலிபோர்னியா, அரிசோனா  என  மேற்கு நாடுகளிலும்  படப்பிடிப்பு நடத்துகின்றனர். பார்ப்பதற்கு வியப்பு, கிடைத்தற்கரிய வாய்ப்பு என  இவையிருப்பினும் இவற்றால் ஏற்படுகின்ற சமுதாயப் பொருளியல் சீரழிவினை இன்றைய திரைப்படத் துறையினர் கருதுவதில்லை. “பன், பட்டர், ஜாம்”இல்   இத்தகைய சீர்கேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக் கருவினைத் திரைப்பட நுட்பத்தின் மேன்மையினை வெளிப்படுத்துகின்றன. இளமையின் எழும் உணர்ச்சி கள்,  உணர்ச்சிவயமான மெய்ப்பாடுகள் என இவற்றிற்குப் பொருந்துமாறு   இவர் அமைத்துள்ள பின்னணி இசை மனத்தைத்  தொடுகிறது. மேலும் ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. எடிட்டர் ஜான் ஆபிரகாமின் காட்சிப் பதிவுத் தொடர்ச்சிப்  படம் பார்ப் போரை எப்போதும் எண்ணக் கிளர்ச்சியில் திளைக்கச் செய்கிறது. (எ-டு: கோலப்பொடி வாங்க வரும் காட்சி).  

திரைப்பட வெற்றி கருதிச்  செல்வாக்குப் பெற்ற  நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு கதையோடு தொடர்பில்லாத  காட்சிகளை ஒட்டியிருத்தலைத்   திரைப்படங்கள் பலவற்றில்  காணலாம்.  இதற்கு  மாறானது    “பன், பட்டர், ஜாம்”. இதன்    நகைச்சுவை பதிவுகள் கதைக்கு வலுவூட்டுகின்றன: வளப்படுத்து கின்றன. கதை இயக்க மாந்தர்களே இயல்பான நகைச்சுவை மாந்தர்களாக அமைந்துள்ளமை தயாரிப்பு மேன்மைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு. 

மோ.இராஜு  கதைத் தலைவராகத்   தமது இரண்டாம்  படத்திலேயே இயல்பான நடிப்பினாலும், நகைச்சுவையும் உணர்வையும் கொண்ட நடிப்பினாலும்  அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.  

அதே போல் கதைத் தலைவியர்களாக  நடித்துள்ள ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிகா இருவருமே தங்களது கதைப்பாத்திரங்களுக்கு மிகப் பொருந்திய அளவில்  பங்களித்துள்ளனர்.

இராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினி ஆகிய இருவரும்  நடிப்பில் வல்லவர்கள் என்பதை இப்படத்தி லும் நிறுவியுள்ளனர்.  இருவரையும் பிள்ளைகள் மீதுள்ள தாய்மார்களின் உணர்ச்சியையும் அக்கறை யையும்  வெளிப்படுத்துமாறு  சிறப்புறக் காட்டியதில் இயக்குநர் வெற்றிகண்டுள்ளார்

இராஜு, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி நடிப்போடு, கல்லூரிக் காட்சிகள், உணர்ச்சி வெளிப்பாட்டுக் காட்சிகள், பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியன படத்தின் சிறப்புக் கூறுகளாகக் கருதத்தக்கன. 

இராஜுவின் தந்தை ( சார்லி) - இராஜு  சிகரெட் பற்றிய உரையாடல் சிறிது நெருடலை ஏற்படுத்துகிறது. பண்பாட்டுச் சிதைவுக்கு வழி வகுக்கும் அவ்வுரையாடல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

“பன், பட்டர், ஜாம்”  ஓர் எளிய ஓய்வுநேரச் சிற்றுண்டி.  கதைத் தலைவன் வாயிலாக அதைக் கொண்டு ஓர் அரிய தகவல் தரப்படுகிறது.  “ ‘பன்’ (Bun) எகிப்து நாட்டினரால் முதன்முதலில்  உருவாக்கப்பட்டது.  நாக ரிகத் தொட்டில் என்று கருதப்படுகின்ற  மெசபடோமியா வின் அமைவிடமான ஈரான் நாட்டிலிருந்து முதன்முதலாகப் பெற்றப்பட்டது தான் ஜாம்.”   - இந்த அரிய தகவல், கதைத்தலைவன் இராஜு வாயிலாகத் தெரிவைக்கப்படுகிறது. 

பொதுவில், “பன், பட்டர், ஜாம்” கதைக் கருவாலும்,  கதைப் போக்காலும், கதை நிகழ்ச்சிகளை வெளிப்படுத்திய நடிகர்களாலும்  தமிழ்த் திரைப்பட வரலாற்றில்  ஒரு திருப்புமுனைச் சிந்தனைப்   படைப்பாகக் கொள்ளப்படுகிறது.

இத்திரைப்படத் தயாரிப்பின் ஈடுபட்ட அனைவரும் பாரட்டிற்குரியவராவர். அவர்களின் திரைப்படப் பயணம் வீறுடன் தொடர்ந்திடப் பாராட்டுகள். - பேராசிரியர் பி.இரத்தினசபாபதி

e-mail: prsabapathy@gmail.com