தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு வாழைத்தார் பரிசு வழங்கி விழிப்புணர்வு
தஞ்சாவூர், அக். 12- தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக் கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் அனு மருத்துவமனை ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தினர். நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அனு மருத்துவமனை முதன்மை இருதய மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.சிவகுமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அனு மருத்துவமனை எதிரில் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு விருந்தினரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணிந்து அணிந்து வந்தவர்களுக்கு, திருவையாறு முன்னோடி வாழை விவசாயி மதியழகன் ஒரு தார் வாழைப்பழங்களை வழங்கினார். இதில் போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார், பாபநாசம் பெனிபிட் ஃபண்ட் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
