பெரம்பலூரில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர், செப். 25- பெரம்பலூரில் மகப்பேறு மரணத்தை குறைப்பது மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் “கலைடாஸ்கோப்’’ திட்ட தொடக்க விழா நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கிராமப்புற மகளிர் சமூகக் கல்வி மைய செயல் இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, பெண்கள் பாதுகாப்பான வகையில் மகப்பேறு நல சேவைகளை பெற மற்றும் மகப்பேறு நல சேவைகள் குறித்து, முழு தகவலறிந்து முடிவெடுக்கும் திறன் மற்றும் இனப்பெருக்க உரிமைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்த கலைடஸ்கோப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பெண்கள் மகப்பேறு நலனுக்கான ஒரு பாதுகாப்பான மற்றும் சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தின் முயற்சியாகும் என தெரிவித்தார். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலா, குடும்ப நலம் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு மகப்பேறு மரணத்தை குறைப்பது மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்துப் பேசினர். பின்னர் பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுக்கும் பொருட்டும், பெண்களுக்கு இருக்கும் மகப்பேறு (இனப்பெருக்க) நல சேவைகளை பெறுவது குறித்தும் கலந்துரையாடல் நடந்தது. முன்னதாக திட்ட மேலாளர் பாரதி வரவேற்றார்.