tamilnadu

img

தில்லையாடியில் தமிழிசை மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் அருணாசலக்கவிராயர் மன்ற விழாவில் வலியுறுத்தல்

தில்லையாடியில் தமிழிசை  மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்  அருணாசலக்கவிராயர் மன்ற விழாவில் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூலை 13-  தமிழிசை மூவருள் ஒருவரும், ராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட பல்வேறு தமிழிசை கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக்கவிராயர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில், தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் சார்பில் ஆண்டு தோறும் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 27 ஆம் ஆண்டு இசை விழா, சான்றோர் பெருமக்கள் ஐவருக்கு விருது வழங்கும் விழா, சாதனையாளர் ஐவருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.  மன்றத்தின் தலைவர் பாவலர் சு. ராசமாணிக்கம் தலைமை வகித்தார். பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஜெகதீசன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற நிறுவனர் நா.வீராசாமி விழாவை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் வீ.தமிழன்பன் வரவேற்றார். விழாவின் தொடக்கமாக தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயற்றிய தமிழிசை கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து அருணாசலக்கவிராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாவலர் சு.ராசமாணிக்கத்துக்கு சமூக நல சாதனையாளர் விருது, மூத்த மருத்துவர் கே.பாலகிருஷ்ணன், நாதஸ்வர கலைஞர் டி.ஆர்.அன்பழகன், நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை கே.லட்சுமி ஆகியோருக்கு அருணாசலக்கவிராயர் விருது, அய்யப்பன் ஹோட்டல் அதிபர் வி.அன்பழகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, மயிலாடுதுறை எம்.பி ஆர்.சுதாவுக்கு தியாகி தில்லையாடி வள்ளியம்மை விருது ஆகியவற்றை வழங்கினார். எம்.பி சுதா சார்பில் தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் விருதினை பெற்றுக் கொண்டார். நூறு சதவீத தேர்ச்சி பெற்றமைக்காக தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைமையாசிரியர் வி.முருகன் மற்றும் ஆசிரியர்கள், அரசுப்பள்ளி மேம்பாட்டுக்கு உதவிகள் செய்த தொழிலதிபர் ஆர்.தர்மராஜன், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் என்.பிரபாகரன், 55 ஆண்டு காலத்துக்குப் பிறகு தில்லையாடி மாரியம்மன் கோவில் தேரோட்டம், மீண்டும் நடைபெற முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஏ.சி.ஆனந்தன் ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கிப் பேசினார். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சு.தமிழ்வேலு,  செம்பனார்கோயில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி முதுநிலை முதல்வர் மா.வேதகிரி, முன்னாள் எம்எல்ஏ என்.விஜயபாலன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று தமிழிசைக்கு அருணாசலக்கவிராயரின்  பங்களிப்பு குறித்துப் பேசினர். சிறார்களின் இசை, பேச்சு நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் ஐவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் 38 ஆண்டு காலமாக நிறுத்தப்பட்டுள்ள மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையேயான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். தமிழிசை மூவருள் ஒருவரான தமிழிசை வேந்தர் தில்லையாடி அருணாசலக்கவிராயர் நினைவாக தில்லையாடியில் தமிழிசை மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். தமிழக முன்னாள் முதல்வரால் கட்டப்பட்ட தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதனை  உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.