tamilnadu

img

எப்.ஆர்.எஸ் முறையைக் கைவிட வேண்டும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

எப்.ஆர்.எஸ் முறையைக் கைவிட வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள்,  உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஆக.22-  அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்டாரத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.  செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். மையப் பணிகளை செய்வதற்கு 5 ஜி செல்போன், 5 ஜி சிம் கார்டு அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்குக்கு ஏற்ப சிம் கார்டுகளை வழங்கி அங்கன்வாடி மையத்திற்கு வைபை இணைப்பை வழங்க வேண்டும், ஆதார் எண் ஓடிபி மற்றும் எப்ஆர்எஸ் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக, அகில இந்திய கருப்பு தின போராட்டம் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் பேசினார்.  அரியலூர்  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், திருமானூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் விஜயா முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட தலைவர் ராஜாமணி கண்டன உரை நிகழ்த்தினார்.  ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிகளை மேற்கொள்ளும் விதமாக 5ஜி சிம் கார்டுடன் கூடிய செல்போன் வழங்க வேண்டும். அந்தந்த கிராமத்தில் தொலை தொடர்பு சேவையை கருத்தில் கொண்டு சிம்கார்டுகள் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் இணையதள சேவை ஏற்படுத்திட வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும். ஆதார் எண் பதிவிடும் போது தரப்படும் ஓடிபி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க நிர்வாகி சுமதி நன்றி கூறினார்.  இதேபோல், தா.பழூர் அங்கன்வாடி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் எஸ். உஷாராணி, செயலாளர் செல்வி, பொருளாளர் வசந்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சகுந்தலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ..ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருமானூர், ஆண்டிமடத்திலும் அங்கன்வாடி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்டத்தில் 15 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாவட்டப் பொருளாளர் ராணி, தொட்டியத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி, புள்ளம்பாடியில் மாவட்டச் செயலாளர் சித்ரா, மணப்பாறையில் மாவட்டத் தலைவர் மல்லிகாபேகம், அந்தநல்லூரில் மாவட்டத் துணைத்தலைவர் பரிமளா, துறையூரில் மாவட்ட துணைத் தலைவர் சுதா, திட்டம் 1-ல் மாவட்ட துணைத் தலைவர் அகி லாண்டேஸ்வரி, மணி கண்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சித்ரா, லால்குடியில் மாவட்ட இணைச் செயலாளர் மேரி லூர்துராணி, திட்டம் 2 -ல் மாவட்ட இணைச் செயலாளர் அர்ச்சனா, மண்ணச்சநல்லூரில் வட்டார தலைவர் ஜெயந்தி, முசிறியில் வட்டாரத் தலைவர் தவசு, உப்பிலியபுரத்தில் வட்டாரத் தலைவர் முத்துலட்சுமி, தா.பேட்டையில் வட்டாரத் தலைவர் புவனேஸ்வரி, திருவெறும்பூரில் வட்டாரச் செயலாளர் கலாவதி ஆகியோர் தலைமையில், கருப்பு உடை அணிந்து, நிர்வாகிகள், ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பெரம்பலூர் பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.  மன்னார்குடி அங்கன்வாடி ஊழியர்களின் அகில இந்திய கருப்பு தினம் வியாழக்கிழமை மன்னார்குடியிலும் கடை பிடிக்கப்பட்டது. ஐசிடிஎஸ் அலுவலகம் முன்பு கிளை தலைவர் லதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.