tamilnadu

img

உழவடை விவசாயிகளுக்கு உடனே  பட்டா வழங்க நடவடிக்கை தேவை விவசாயத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் எம்.சின்னதுரை கோரிக்கை

உழவடை விவசாயிகளுக்கு உடனே  பட்டா வழங்க நடவடிக்கை தேவை 
விவசாயத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் எம்.சின்னதுரை கோரிக்கை

புதுக்கோட்டை, செப். 23-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வார்பட்டு ஊராட்சி தேவன் பட்டியில், தேவன்பட்டி, பொய்யாமணிப்பட்டி, எஸ். புதூர் ஒன்றியம், வேலம்பட்டி உழவடை விவசாயிகளுக்கு, உழவடை பட்டா வழங்காததை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கிளைச்செயலாளர் முத்தழகன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சலோமி, தலைவர் சண்முகம், பொருளாளர் நல்லதம்பி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.  சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை பேசுகையில், “மன்னராட்சி முறையை ஒழித்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும் என 1936 ஆம் ஆண்டில் `உழுதவனுக்கே நிலத்தை கொடு மன்னரிடமிருந்து நிலத்தை எடு’ என்கிற முழக்கத்தை கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மன்னர்களை பாதுகாத்த ஆங்கிலேய அரசின் குண்டுகளுக்கு இரையானார்கள். நில பிரபுத்துவ மன்னராட்சி முறையை மாற்ற வேண்டும் என மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்ற போதுதான் 1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் இந்த போராட்டத்தை துவங்கினார்கள்.  அப்போது இந்த பகுதியில் நிலப் பிரபுக்களிடம் நிலங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு ஆயிரம் ஏக்கர், இரண்டாயிரம் ஏக்கர் என நிலங்கள் இருந்திருக்கிறது. யார் கொடுத்தது எனப் பார்த்தால் மன்னர்கள் சீதனமாக கொடுத்ததாக சொல்கிறார்கள்.  ஏன் சீதனமாக கொடுத்தார்கள்? வரிவசூல் செய்து தர சீதனமாக கொடுத்தார்கள்! நிலம் அவர்களுக்கு உரிமை கிடையாது, அந்த நிலத்தில் சாகுபடி செய்பவர் யாரோ அவர்களிடத்தில் இருந்து காசை, தானியத்தை வசூல் செய்து, மன்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டியே நில பிரபுக்களிடம் நிலங்களை ஒப்படைத்தனர். அப்படி ஒப்படைக்கப்பட்ட சில நிலப்பிரபுக்கள் படிக்காத பாமர மக்களை அடித்து துன்புறுத்தி பசி பட்டினிக்கு ஆட்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வந்தனர். இங்கே உழவடை விவசாயிகளின் வசிப்பிடம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்திலும், விவசாய நிலங்கள் சிவகங்கை மாவட்டத்திலும் வருவதால், எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என பொன்னமராவதி வட்டாட்சியர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூறாமல் மாவட்டத்தில் எங்கெல்லாம் நிலப்பிரச்சினை உள்ளதோ, அதையெல்லாம் நாங்கள் மேற்கோள் காட்டி உள்ளோம்.  புதுக்கோட்டை ஆட்சியர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  48 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நிலம் எங்கள் உரிமை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டம் முழுவதும் நிலப்பிரச்சனை உள்ள கிராம மக்களை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெறுகிறது’’ என்றார்.