tamilnadu

img

கரும்பலகை யுத்தம் - எம்.ஜே.பிரபாகர்

ஒரு மாணவி, ஒரு ஆசிரியை, ஒரு கரும்பலகை, ஒரு எழுது கோள்…. உலகையே மாற்றும் சக்தி கொண்டவர்கள். 12 வயது சிறுமியான மலாலா, குல் மக்காய் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு இணையத்தில் தனக்கென ஒரு பிளாக்கை உருவாக்கி வெளி உலகில் பேசத் தொடங்குகிறார். இதிலிருந்து தொடங்குகிறது கரும்பலகை யுத்தம். பாடப்புத்தகம் கையில் இருந்தால் மரணம், எழுதுகோல் பிடித்தால் சிரச்சேதம், பள்ளிக்கூடம் திறந்தால் குண்டு மழை என்றிருந்த தலிபான்களின் பூமியில் இணையத்தின் வழியே மலாலா எழுதியவை உலகையே உலுக்கின. இஸ்லாமிய பெண்களின் விடுதலைக்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார் சிறுமி மலாலா.  பெண்களாகிய நாங்கள் பொதுப்பள்ளியில் கல்வி கற்கக் கூடாது என்று உத்தரவிடவும் தடை சொல்லவும்  தலிபான்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று முழங்கியதோடு கல்விக்கான போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார் மலாலா. மலாலாவைச் சுற்றி நடந்த அடக்குமுறைகள் மற்றும் கொடுமைகளை கண்காணித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.  எளிமையான வாழ்வு, பெண்களை சமமாக மதித்தல், உழைத்து உண்ணுதல், எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி, எதிரியாய் இருந்தாலும்  மன்னித்தல், பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கம் பேணுதல், குழந்தைகளிடம் அன்பும் கருணையும் காட்டுதல்,  

உலகிற்கே சகோதரத்துவத்தை போதிப்பது என்ற கொள்கைகளைத் தான் நபிகள் நாயகம் கொண்டிருந்தார். அவர் வழியில் சிறுமி மலாலாவும் விளங்கி பெண்களின் உரிமைகளுக்காகவும், பெண் கல்வியின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். இந்த நூலில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை,  ஸ்வாட் பள்ளத்தாக்கின் இயற்கை வளம், ஜின்னா காண விரும்பிய அனைவருக்கும் பொதுவான பாகிஸ்தான், இரு தேசத்து பெண்களின் கல்வி,  லஸ்கர் -இ-தொய்பா முதல் தலிபான் வரையுள்ள மத அடிப்படை வாதக் குழுக்களின் வளர்ச்சி, முகலாய சாம்ராஜ்யம், ஆப்கன் அரசியல் சூழல், அமெரிக்காவின் அராஜகம்,  நபிகள் நாயகமும் குர்ஆனும், மலாலா தொடங்கிய கரும்பலகை யுத்தம் - என ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது இந்த அருமையான வரலாற்று நூல். மலாலாவின் வரலாற்றை மட்டும் பேசவில்லை இந்த நூல்.  உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்கள் கல்வி உரிமையைக் கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வரலாற்றைக் கொண்டதாகும். இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  வாசிக்க வேண்டிய சிறந்த நூல்.  “மலாலா  கரும்பலகை யுத்தம்” நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன்  விலை : ரூ.40/- வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை - 600018 தொடர்பு எண்: 044 - 24332424

;