திருவெறும்பூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி படுத்து உருளும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 41 ஆவது வார்டில் அனைத்து தெருக்களிலும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டும். உயிர்பலி வாங்க காத்திருக்கும் திருவெறும்பூர் - நவல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிக்குழு சார்பில் திங்களன்று நவல்பட்டு ரோட்டில் படுத்து உருளும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் நாகூர் மைதீன், ஜெயச்சந்திரன், லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, பகுதிச் செயலாளர் மணிமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன், பகுதிக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் ஆகியோர் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.