இறுதிப்படியிலிருந்து
(சிறுகதைகள் தொகுப்பு)
ஆசிரியர்: ஜீவகாருண்யன்
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், சென்னை.
செல்பேசி: 89393 87296/76
பக்கங்கள் 194 / ரூ. 200
எழுத்தாளர் ஜீவகாருண்யன் மகா பாரத இதிகாசத்தை மறுவாசிப்பு செய்வதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார். “கிருஷ்ணன் என்றொரு மானு டன்” என்று பத்து ஆண்டுகளுக்கு முன் புதின மாக எழுதியதில் இது தொடங்கியதாக நான் நினைக்கிறேன். அந்த நூலினைத் தீக்கதிர் ‘இலக்கியச் சோலை’யில் அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியானது. மகாபாரதத்தின் சூத்திரதாரியான கிருஷ்ணன் பாத்திரத்தை முன்வைத்து எழுதி னாலும் அதற்குள் அவரது சமூகப் பார்வை பொதிந்திருந்தது. கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் அல்ல ஆயர்குலத் தலைவன் என்பதை இப்புதினத்தில் நிறுவியிருந்தார். புராண கருத்தையும் புதிய பார்வையையும் அதில் இணைத்திருந்தார்.
இன்னொரு மறுவாசிப்புப் புதினம் “குந்தி”. இதனைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. தொடர்புகளை முடக்கிய கொரோனா பெருந்தொற்றுக் காலம் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போது என் கைகளுக்குக் கிடைத்துள்ள “இறுதிப்படியிலிருந்து” என்ற சிறுகதைகள் தொகுப்பு, மறுவாசிப்பு உத்தி முறையை மேலும் மெருகேற்றியிருக்கிறது. மகாபாரத பாத்திரங்கள் வித்தியாசமானவை. தியாகம், வஞ்சகம், ஆணவம், நட்பு, சகோதரத்துவம், தன்மானம், தந்திரம் என்று பல குணாம்சங்களைக் கலவையாகக் கொண்டது அந்த இதிகாசம். அவதாரம் என்று நம்பவைத்தாலும் விஷ அம்புக்கு இரையாகிப்போகும் மானுடன் என்றே கிருஷ்ணன் சித்தரிக்கப்படுகிறான். இப்படியான பல முக்கிய பாத்திரங்களின் மரணம் முக்கியத்துவம் இழந்து நிற்கிறது. இவற்றைப் புராணிகர்கள் மனம்போன போக்கில் திரித்துரைப்பதைக் கேட்டிருப் போம். ஆனால், உச்சத்தில் நிறுத்தப்படும் இவர்கள் உருண்டு விழும்போது என்ன ஆகி றார்கள், அந்த நிலையில் கடந்த காலத்தை நினைத்து என்ன பேசி இருப்பார்கள் என்பதை நிதானமாக சிந்தித்து, இதிகாசம் முழுவதை யும் உள்வாங்கி, ஒரு புனைவாளனுக்கே உரித்தான உரிமையோடு ஜீவகாருண்யன் பேசிப்பார்க்கிறார்; பேசியதை எழுதியும் காட்டியிருக்கிறார்.
மாத்ரி, பீஷ்மன், சகுனி, கர்ணன், துரியோ தனன், விதுரன், குந்தி, திருதராஷ்டிரன், காந்தாரி, கிருஷ்ணன், யுதிஷ்டிரன், பீமன், அர்ச்சுனன், திரௌபதி ஆகிய 14 பாத்தி ரங்களோடு சார்வாகன் என்ற 15ஆவது பாத்திரமும் சேர்ந்துகொள்கிறது. சார்வாகன் இறக்கவில்லை; கொல்லப் படுகிறான். “பேரரசன் யுதிஷ்டிரனிடம் பிச்சை பெற மந்தையெனத் திரண்டிருக்கும் பிசுக்கு பிராமணர்களே” என்ற அவனது விளிப்பே கொலைக்குத் தொடக்கப்புள்ளி ஆகிவிடு கிறது. பிராமண எதிர்ப்பு என்பது வேத மறுப்பு, சடங்கு மறுப்பு என்பதன் மறுவடிவம்தானே! பஞ்சபாண்டவர்களின் பட்டாபிஷேக மண்டபத்திற்குள் நுழையும் சார்வாகன் யாகத்தையும், உயிர்கள் பொசுக்கலையும், விளைபொருள்கள் எரிப்பையும் கேள்வி கேட்கிறான். “அபத்தப் பொய்ச் சிருஷ்டி களான பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களால் கூட தனது வினாக்களுக்கு விடைசொல்ல இயலுமா” என்று சவால் விடுக்கிறான். பாரதப் போருக்குப் பின் பிராமணர் களுக்கு தானம் செய்யும் நிகழ்வில் “ரத்த வாடை இல்லாத பொற்காசுகள் இருக்கிறதா” என்ற கேள்வியாலும் வாக்குவாதத்தாலும் பிராமணக் கூட்டம் கொதிப்படைகிறது. சார்வாகனைக் குடம் குடமாக நெய்யால் நனைத்து எரியூட்டிக் கொல்கிறது.
“ஆக சார்வாகனுக்கு எதிரான பிராமண வன்மம் வென்றுவிட்டது” என்று அர்ச்சுனன் கூறுகிறான். இதனை ஆமோதிக்கும் கிருஷ்ணன் “நான் பாவியாகிவிட்டேன்” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறான். சார்வா கனுக்கு ஏற்பட்ட கதி இன்று வேறு வேறு வடி வங்களில் பகுத்தறிவாளர்களுக்கு, முற்போ க்காளர்களுக்கு ஏற்படுவது கண்கூடு. சார்வாகன் கொலைக்குப்பின் அவன் “தரையில் ஊன்றிய தண்டம் (கோல்) யாரா வது என்னுடன் வாதிட வருகிறீர்களா என்பது போல் விறைத்து நின்றிருந்தது” என்பதாகக் கதை நிறைவு பெறுகிறது. நாவலந்தீவில் சார்வாகனின் நாவற்கிளைகள் துளிர்த்துக் கொண்டேதான் இருக்கும் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. சார்வாகன் தவிர்த்த 14 பாத்திரங்களும் இறுதிப் படியில் நின்று பேசுவது அனைத்தும் மிக முக்கியமானவை. தலைமைப் பண்பு உள்ளவர், வழிகாட்டி என்போரை பீஷ்மரின் தமிழாக்கமாகப் பிதாமகர் என்பர். அந்தப் பிதாமகரின் உடல் இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கையில் கிடந்தது. ‘நியாயம் இல்லாத மனிதன்’ என்று அவர் தன்னைத்தானே கூறிக் கொண்டு கழிவிரக்கம் ஏற்படுத்த முயற்சிக் கிறார். அர்ச்சுனனிடம் மனம் திறந்து பேசுவ தாக எண்ணி அனைத்தையும் பீமனிடம் பேசு வதும் கடைசியில் அது தெரிய வருவதும் ஒரு நாடக உத்திபோல் கதையை நகர்த்தி யிருப்பது சிறப்பு.
கணவன் திருதராஷ்டிரன் பார்வையற்ற வன் என்பதால் தாமாகவே கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவள் காந்தாரி. “வஞ்சனை க்கு ஆட்படுகின்ற பலவீனமான மனிதர் யாரும் தன்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்படும்படி யான காரியங்கள் ஏதேனும் செய்து விடு வார்கள் போலிருக்கிறது.” கதையின் இந்தத் தொடக்க வரிகள் பொருள்பொதிந்தவை. அதேபோல் கடைசி காலத்தில் கண் கட்டி னை அகற்றி கண்களை மூடித் திறந்த முயற்சி யில் அரும்பு மலர்வது போன்று அதிசயமாகக் காடும் மலைகளும் தோன்றுகின்றன. “அடடா கண்ணில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்ட காரணத்திற்காக கண்களைக் கட்டிக் கொண்டு எத்தனை கோடி (காட்சி) இன்பங் களை இழந்து போனேன்” என்று காந்தாரி தன்னைத்தானே நொந்துகொண்டதாக எழுதப்பட்டுள்ளது. கண்களைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் மனங்களை இறுகக் கட்டிக்கொண்டு ஆதிக்கக் கணவர்களுடன் வாழும் இக்காலப் பெண்களின் புழுக்கக் குறியீடாகவும் இதனைக் கொள்ளலாம். “பிதாமகர் பீஷ்மர் பெண்ணை எதிர்த்துப் போர் புரிய மாட்டார் என்பது தெரிந்து பெண் ணும் ஆணுமற்ற சிகண்டியை அவர் முன் நிறுத்தி அந்த நேரிய மனிதரை நிலை குலைய வைத்து அர்ச்சுனன் மூலம் அம்புப் படுக்கையில் கிடத்தியது..... மல்யுத்த சாஸ்திர முறை மீறி துரியோத னனைத் தொடையில் அடித்து பீமன் வீழ்த்தியது...... வெல்லவே முடியாதவராக வீறு கொண்டு நின்ற ஆச்சாரியர் துரோணரை, அஸ்வத்தா மன் என்னும் யானை இறந்ததை சாதகமாக வைத்து ‘அஸ்வத்தாமன் இறந்தான்’ என்று யுதிஷ்டிரனைச்
சொல்லவைத்து மகன் இறந்து விட்டானே என மனம் கலங்கவைத்து எளிதாக மரணக்குழியில் தள்ளியது.... அர்ச்சுனனுக்கு நிகரான சிறந்த வில்லாளி கர்ணன் அத்தையின் தலைமகன் எனத் தெரிந்த பிறகும் பாண்டவர்களிடம் அவன் சகோதரன் என்பதை மறைத்து களத்தில் அர்ச்சுனன் மூலம் கர்ணனைக் கொன்றது..... இவை எல்லாம் போர்க்கள சாகசங்கள் தான் என்றாலும் அதனையும் மீறிய சதிப் பின்னல்கள்தானே சூழ்ச்சிகள்தானே” என்று கிருஷ்ணனிடமே மரண வாக்குமூலம் வாங்கு கிறார் எழுத்தாளர் ஜீவகாருண்யன். மகாபாரதத்தின் வஞ்சகமான, நெறி தவறிய போர் முறையை இது அம்பலப்படுத்து கிறது. ராமன் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தாலும் ‘வஞ்சகன் கண்ணனைப்’ போன்று சூழ்ச்சிகளையே இன்றைய ஆட்சி யாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
“திரௌபதி என்னும் நான் எனது கணவர் களாலும் மற்றும் அனைவராலும் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டவள் என்பதில் கொஞ்ச மும் சந்தேகமில்லை. ஆனால் இந்த அங்கீ காரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இதுவரை யான வாழ்க்கையில் நான் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல” என்று ஐவருக்கும் பத்தினியான திரௌபதி கூறுவது மிகவும் சிந்திக்கத்தக்கது. மதிப்பு எனும் கற்பி தத்திற்காகத் தங்களை வருத்திக்கொண்டு வாழ்பவர்களாகவே பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத் திரௌபதியின் கூற்றாகப் புரிந்து கொள்ளலாம். துரியோதனனின் பாழும் மண்ணாசை யால்தான் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலி யான இந்தப் பெரும்போர் நிகழ்ந்தது என்று குற்றம் சுமத்துகின்றவர்களைப் பார்த்து, “என க்கு மண்ணாசை இல்லை என்று என் எதிர் நின்று யாரேனும் ஒருவர் கூற முடியுமா?” என்று துரியோதனன் சவால் விடுகிறான்.
மண்ணாசை என்பதே மனித சமூ கத்திற்கு மிகப்பெரிய கேடாக அமைந்தது என்பதைக் காலம் காலமான வரலாறு நமக்கு நிரூபிக்கிறது. நில உடைமைச் சமுதாயம்தான் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தை தகர்த்தெறிந்தது. இங்கிருந்துதான் மன்னர் கள், மாமன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்லோ ரும் பிறப்பெடுத்தார்கள். இன்றைக்கும் நிலத்தைப் பங்கீடு செய்யும் பிரச்சனையே பெரும் பிரச்சனையாக உள்ளதை மறுக்க முடி யாது. நிலச் சீர்திருத்தம் என்கிற நிலப்பகிர்வு நடக்கிறபோதுதான் மனித குலம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை இதில் ஜீவகாருண்யன் உள்ளட க்கிக் கூறுவதாக நாம் பரிந்துகொள்ளலாம். ‘நோயாளி இறக்கும் தருவாயிலும் மருந்து பிடிக்காது கசக்கிறது என்பான்’ என்று கூறுவதும், “விதைக்க வேண்டிய காலத்தில் வெறுமனே இருந்துவிட்டு அறுவடை காலத்தில் அய்யோ இழந்தேனே என்று அழுவ தால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பு வதும் சிந்தனைகளைத் தூண்டுபவை. இதுபோன்று நூல் முழுவதும் ஏராள மான வழக்காறுகளை, சொலவடைகளை அழகாக ஆங்காங்கு அமைத்து நூலினை சிறக்கச் செய்துள்ளார் ஜீவகாருண்யன். நூலின் பொருளடக்கத்தை அடுத்து, “உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி, ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம், உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது உள்ள மறைகள் கதை யெனக் கண்டோம்” என்று தொடங்கும் பாரதியின் பாடல் வரிகளைப் பதிவிட்டு கதை களைச் சொல்லத் தொடங்கி இருப்பது ஆசிரியரின் உள்ளொளியை உணர்த்தும். மறு வாசிப்பின் சிறந்த வடிவமாக “இறுதிப்படி யிலிருந்து” சிறுகதைகள் தொகுப்பு வந்துள் ளது. காலப் பழமையான பாத்திரங்கள் என்றா லும் அவற்றை விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளுக்கு வெளிச்சமிடலாம் என்பதை எடுத்துரைக்கும் நூல்; படித்து அனுபவம் கொள்ளவேண்டிய நூல்.