சென்னை தொழிலாளர் இயக்கத்தில் ஒரு முன்களப் போராளி
களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் - ஜி.ராமகிருஷ்ணன்
தமிழ்நாட்டின் தலைநகரத் தொழிலாளர்களுக் கான ஒரு முன்களப் போராளியாக நின்றவர் தோழர் எம்.வி.கிருஷ் ணன். இன்றளவும் சங்கப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். 1948இல், சிறிய அளவில் இனிப்பு காரம் கடை வைத்திருந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர். சென்னை, பூக்கடை பகுதியின் பச்சை யப்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது 1965ஆம் ஆண்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். மற்ற மாணவர்களோடு கைது செய்யப்பட்டவர் மூன்று நாட்களுக்குப் பிறகே விடுவிக்கப்பட்டார். இதனால் பள்ளியிறுதித் தேர்வை எழுத முடியவில்லை. அக்டோபர் மறு தேர்வில் வெற்றிபெறவில்லை. தந்தை இவரைக் கடுமையாகத் திட்டி அடித்துவிட்டார். கோபத்துடன் கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறினார். வட சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலைசெய்தார். 1966ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் தினமும் ரூ.2.50 கூலிக்கு வேலையில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிய 269 தற்காலிகத் தொழி லாளர்களுக்கு நிர்வாகம் பி.எஃப் கட்டவில்லை. தொழிற்சங்கத் தலைவரின் ஆலோசனையுடன் அத்தனை பேரிடமும் கையெழுத்துப் பெற்று வைப்பு நிதி அலுவலகத்திடம் அளித்தார். அதன் பின் நிர்வாகம் அவர்களை பி.எஃப் பதிவில் சேர்த்தது. இந்தத் தொடக்க வெற்றி இவருக்குள் சங்க உணர்வை விதைத்தது.
கோபமும் பாசமும்
1968ல் தனக்கு வழங்கப்பட்ட 110 ரூபாய் போனஸ் தொகையில் ஒரு சவரன் மோதிரம் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் கொடுத்தார். வீட்டைவிட்டுக் கோபத்தோடு வெளியேறியவர், மூன்றாண்டுகளில் பாசத்தோடு குடும்பத்தில் மீண்டும் இணைந்தார். ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற அடிப்படை யில் யூனியன் கார்பைடு வளாகத்தில் இயங்கி வந்த ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி சங்கங்கள் 1971இல் கலைக்கப்பட்டு ஒரு சுயேச்சை சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கத் தேர்தலில் குசேலர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். நல்ல ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே ஆண்டில் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரி வேலைநிறுத்தம் தொடங்கியது. 12 நாள் போராட்ட வெற்றியாக அனைவரும் நிரந்தரமாக்கப்பட்டனர். 1972இல் சங்கத்தின் பொருளாளராகத் தேர்வானார். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாத பின்னணியில் 1978இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெற்றது. நிர்வாகம் அடாவடியாக ஆலையை மூடியது. 114 நாட்கள் லாக் அவுட். முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் முன்னிலை வகித்த எம்.வி.கிருஷ்ணன் (எம்.வி.கே.,) முன்னதாக 1970ஆம் ஆண்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தார். திருவொற்றியூர் பகுதியில் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஞானசாமி, என்.கிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்களோடு ஏற்பட்ட தொடர்பு தூண்டுதலாக இருந்தது. அப்போது தோழர் ஏ.கே.பத்மநாபன் லேலண்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில், அவருடன் நடத்திய அரசியல் உரையாடல் கட்சியில் இணைவதற்கு அடிப்படை யாக அமைந்தது என்கிறார் எம்.வி.கே. 1980 சங்கத் தேர்தலில் தோழர் வி.பி.சிந்தன் தலைவராகவும், எம்.வி.கே. பொதுச்செய லாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1971இல் பணி நிரந்தரம் பெற்ற எம்.வி.கே., நிறுவனத் தொழிலாளர்களிடையே கட்சியைக் கட்டுவதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொண்டார். அந்தப் பின்னணியில்தான் வி.பி.சி. தலைமையிலான அணியில் போட்டியிட்டு பொதுச் செயலாளரானார் எம்.வி.கே.
மற்ற தொழிலாளர்களுக்காகவும்...
முனைப்புமிக்க பணிகள், இவரை இதர பல நிறுவனங்களின் தொழிலாளர் சங்கங்களிலும் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கச் செய்தன. ஜீவன்லால், மெட்ராஸ் கிளாஸ், சௌத் இண்டியா ஃபிளவர் மில் ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர் சங்கங்களிலும் இவர் தலைவர் பொறுப்பில் செயல்பட்டிருக்கிறார். 1992இல் மெட்டல்பாக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவரானார். வடசென்னையை மையப்படுத்தி செயல்பட்டு வந்த சூழல் சென்னை துறைமுகத் தொழிலாளர் சங்கத்திலும் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் துணைத் தலைவர் பொறுப்பில் பணியாற்ற வைத்தது. யூனியன் கார்பைடு தொழிலாளியாக வேலை செய்துகொண்டே இதர நிறுவனங்கள் சார்ந்த சங்கங்களின் பொறுப்புகளில் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அக்காலத்தில் கணிசமானோர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அச்சங்கத்தின் தலைவராக தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் இருந்த போது எம்.வி.கே. பொதுச் செயலாள ராக இருந்தார். தொடர்ந்து பல ஆண்டுகள் இச்சங்க த்தின் துணை நிர்வாகியாக செயல்பட்டிருக்கிறார். மேலும் பீடித் தொழிலாளர் மாநில சம்மேள னத்தின் பொருளாளராக 5 ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார். அப்பளத் தொழிலாளர் சங்கத் துணைத் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். 1970களில் சென்னையிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல நிறுவனங்களில் தீரமிக்க பல போராட்டங்கள் நடந்துள்ளன. சிம்சன், எம்.ஆர்.எப், விம்கோ, மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ், மெட்ராஸ் ரிஃபைனரி உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் போராடியபோதெல்லாம் அவர்களுடன் ஒருமைப்பாடு தெரிவித்து யூனியன் கார்பைடு தொழிலாளர்களைத் திரட்டி வேலை நிறுத்தங்கள் நடத்தியிருக்கிறார்.
தடியடிகளைத் தாங்கி…
மெட்ராஸ் ரிஃபைனரி, மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி வீரஞ் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை யினர் தடியடி நடத்தினார்கள். அதில் தோழர்கள் எம்.வி.கே., ராஜமாணிக்கம் உள்ளிட்டு பலரும் காய மடைந்தார்கள். தொழிற்சங்கத்தின் முழுநேர ஊழியரான ராஜமாணிக்கத்தை காவல்துறை யினர் கைது செய்து அரசு மருத்துவமனையில் விலங்கிட்டு வைத்திருந்தினர். வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தொடுத்த வழக்கில்தான் அவ ருக்கு விடுதலை கிடைத்தது. இத்தகைய பல போராட்டங்களில் தோழர்கள் வி.பி.சி, ஹரிபட், பி.ஜி.கிருஷ்ணன், எஸ்.வெங்கட்ராமன் சிறப்பாக வழிகாட்டியதை எம்.வி.கே. பசுமையாக நினைவு கூர்கிறார். யூனியன் கார்பைடு நிர்வாகம் 1974ல் ஒரு மூத்த தொழிலாளிக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தது. அதை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 131 நாட்கள் நீடித்த போராட்டத்தின் ஒரு கட்டத்தில் 33 பேர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 7 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது. பேச்சுவார்த்தையில் அவர்கள் ஏழு பேரும் விருப்ப ஓய்வில் செல்வதென்றும், ஊதியம் உள்ளிட்ட நிலுவைத் தொகையை நிர்வாகம் முழுமையாக வழங்குவதென்றும் உடன்பாடு ஏற்பட்டது. அடுத்துக் கூடிய சங்க நிர்வாகக்குழு கூட்டம் இதைப் பரிசீலித்ததுடன், ஒரு சிறிய பிரச்சனையில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்ட விவகாரத்தை வேறு வழிகளில் கையாண்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார் எம்.வி.கே. யூனியன் கார்பைடிலும் இதர நிறுவனங்களி லும் நடந்த வேலைநிறுத்தங்களை ஆதரித்துத் தொழிலாளர்களைத் திரட்டுவதில் எம்.வி.கே. அரும்பணியாற்றியிருக்கிறார். யூனியன் கார்பைடு போராட்டங்களில் முன்னணியில் நின்ற தோழர்களைக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து கிளைகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கிளைகளின் இணைப்புக் குழு செயலாள ராகப் பங்களித்தார் என்.கிருஷ்ணன் (இத்தொடரில் ஏற்கெனவே அவரைச் சந்தித்திருக்கிறோம்). தொழிற்சங்க அரங்கிலும் கட்சி இயக்கங்களி லும் முனைப்பாகக் கலந்துகொண்ட எம்.வி.கே. கட்சியின் ஆர்.கே.நகர் பகுதி மாநாட்டில் பகுதிக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1996இல் துறைமுகம் பகுதிக்குழு மாநாட்டில் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, 2022 வரையில் அந்தப் பொறுப்வை நிறைவேற்றி வந்தார். 1996ல் 5 கிளை களைக் கொண்டிருந்த துறைமுகம் பகுதிக்குழு வில் இன்று 16 கிளைகள் இயங்குவதைப் பெரு மிதத்தோடு குறிப்பிடுகிறார்.
கட்சிக் குழுக்களில்...
கட்சியின் சென்னை மாவட்ட மாநாட்டில் தோழர் வே.மீனாட்சிசுந்தரம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவர் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987இல் வடசென்னை, தென்சென்னை என்று இரண்டு மாவட்டக்குழுக்களாக அமைக்கப்பட்டபோது வடசென்னை மாவட்டச் செயற்குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். மத்திய சென்னை மாவட்டக்குழு உருவாக்கப்பட்டபோது அதன் மாவட்டக்குழு உறுப்பினராக இயங்கிவந்தார். 2022இல் வயது வரம்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட இவர் 42 ஆண்டுகள் மாவட்டக்குழு உறுப்பின ராக பணி யாற்றியிருக்கிறார். சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட பல சங்கங்களின் தலைவர், பொதுச் செயலாளர், துணைத்தலைவர் என இயங்கிய தோழர் எம்.வி.கே. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். இப்போதும் சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் துணைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காஸ்மோபாலிடன் ஊழியர் சங்கம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் துணைத் தலைவராகச் செயல்படுகிறார். நடைபாதை வியாபாரிகளுக்கென சென்னை யில் தனித்தனியே இருந்த 54 அமைப்புகளை இணைத்து சென்னை பெருநகர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு 2012ல் உருவானது. 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இக்கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் இப்போதும் இவர்தான். சென்னை சிஐடியு உறுப்பினர்களில் முறைசாரா தொழிலாளர்கள் கணிசமான எண்ணி க்கையில் உள்ளனர். அவர்களைத் திரட்டுவதிலும் எம்.வி.கே. முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
முன்னுதாரணத் தோழர்
1970ல் எம்.வி.கிருஷ்ணன் - மாலதி திருமணம் நடைபெற்றது. கட்சி உறுப்பினரான தோழர் மாலதி மாதர் சங்கக் கிளைச் செயலாளராகப் பங்களித் திருக்கிறார். இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகன் மதுசூதனன் யூனியன் கார்பைடு மின்சாரத் தொழிலாளியாக இருந்தார். அந்த நிறுவனத் தொழிலாளர்களுக்கான கட்சிக் கிளை செயலாளராகவும் பணியாற்றினார். அந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுசூதனன் 2013இல் காலமானார். அவரது மனைவியும் இரண்டு மகன்களும் குடும்பத்தோடு உள்ளனர். மகனை இழந்த எம்.வி.கே., மாலதி இருவரும் நிலைகுலைந்தார்கள். இயக்க ஈடுபாடு அவர்களை மீட்டெடுத்தது. மதுசூதனன் அகால மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் பேரி ழப்பு. இயக்க வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கை யிலும் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி நடந்து கொள்வார் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் இவர். சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறினாலும், பெற்றோருக்கும் உற்றாருக்கும் வாழ்ந்து காட்டிய அதே மன உறுதியோடு 55 ஆண்டுகளாக தோழர் எம்.வி.கிருஷ்ணன் ஆற்றிவரும் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.
பீடித் தொழிலாளர் சங்கத்திற்காக வண்ணாரப்பேட்டையில் ஒரு குடிசை இருந்த இடம் வாங்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது. அக்கட்டடத்தின் முதல் தளத்தில் கட்சியின் ஆர்.கே.நகர் பகுதிக்குழு அலுவலகமும் செயல்பட்டது. அந்தக் கட்டடத்தை எழுப்புவதற்கு, சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.எஸ்.ருக்மணி அம்மாள் தனக்கு வந்துகொண்டிருந்த தியாகிகள் உதவித்தொகையிலிருந்து சேமித்த 38,000 ரூபாயை நன்கொடையாக அளித்தார். இந்தக் கட்டிடத்தில் ஒரு அறையில்தான் ருக்மணி அம்மாள் இறுதிவரை வாழ்ந்தார். ருக்மணி அம்மாள் 1940இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். 1964இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் இணைந்து, 1998 இறுதி மூச்சு வரை உறுதியுடன் செயல்பட்டார்.