தயார் நிலையில் 1,353 ஆம்புலன்ஸ்கள்
சென்னை, அக்.19 - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1,353 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழ்நாட்டில் காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரையிலான நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தீபாவளி என்பதால் கூடுதல் பணியாளர்கள், கூடுதல் ஆம்புலன்ஸ்களை நியமித்து பாதிக்கப்பட்ட இடத்தை 4 நிமிடத்தில் அடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என்று அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடிய பகுதிகளில் அக்.20 முதல் 120 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்திற்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.