tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஆவணத்தில்  11 ஆம் ஆண்டு ரத்ததான முகாம் 

தஞ்சாவூர், ஜூலை 13-  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை  சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆவணம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜுமுஆ பள்ளிவாசலில் 11 ஆம் ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். இம்முகாமை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுதா மற்றும் மருத்துவக் குழுவினர், கொடையாளர்களிடம் 25 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் யூசுப், அப்துல்லாஹ், ஜியா, கரீம் ஆகியோர் செய்திருந்தனர்.

இலவச கண் விழித்திரை பரிசோதனை

பாபநாசம், ஜுலை 13-  வாஸன் கண் மருத்துவமனை மற்றும் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தின.  இதில் ஆப்தோ மெட்ரிஸ்ட் வேதாத்மிகா, சண்முகப் பிரியா, ஸ்கேன் டெக்னீசியன் சக்திவேல், கோ ஆர்டினேட்டர், கவுன்சிலர் இப்ராகிம், 107 பேரை பரிசோதனை மேற்கொண்டனர். 16 பேருக்கு கண் புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.  47 பேருக்கு நரம்பு சோதனை, கண் விழித் திரை பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு, அட்சயம் லயன்ஸ் கிளப் தலைவர் சிவக்குமார், செயலாளர் சாந்த குமார், பொருளாளர் ராம்குமார், வட்டாரத் தலைவர் முரளி, சாசனத் தலைவர் சரவணன், முதலாம் துணைத் தலைவர் வீரமணி, சேவைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் செல்வம், தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், இயக்குநர்கள் பங்கேற்றனர்.

சிறார் கதைகள் சொல்லி  அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை, ஜூலை 13-  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட வாசிப்போர் மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குநர் ரா.சுதர்சன், துணை முதல்வர் சு.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாணவ, மாணவிகள் கன்னி கோவில் ராஜா எழுதிய சப்போட்டா, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி, விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கயிறு, வானத்துடன் டூ, எலியின் வேட்டை, வேட்டை ராஜா,  எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள், மு. முருகேஷ் எழுதிய  வினோதினியும் விடுகதை தாத்தாவும், அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை, உதயசங்கர் எழுதிய ஏணியும் எறும்பும், ஏகாதசி எழுதிய பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும், காட்டில் ஒரு பட்டாம்பூச்சி ஆகிய கதைகளை பகிர்ந்தனர்.  நிகழ்வில், பங்கேற்ற தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் ராசி பன்னீர்செல்வன் பேசும்போது, இங்கே மாணவர்கள், எழுத்தாளர்களைவிடவும், கதைகளை காட்சிப்படுத்தி வெளிப்படுத்திய விதம் கதைக்கான வெற்றியைப் பெற்றுத் தந்தது என்றார்.  முன்னதாக மாணவி சிவானி வரவேற்க, மாணவி அஸ்மிட்டா ரிபானா நன்றி கூறினார். நிகழ்வை மாணவி மதுஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

இலவச  இதய பரிசோதனை முகாம்

பாபநாசம், ஜூலை 13-  தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் இணைந்து, இலவச இதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தின.  இதில் மருத்துவர்கள் குருநாதன், ஆசிக் மீரான், ஜெயஸ்ரீ ஆகியோர் 145 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டனர். 20 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டனர். ஈ.சி. ஜி, எக்கோ, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக கண்டறியப்பட்டது. பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு, அட்சயம் லயன்ஸ் கிளப் தலைவர் சிவக்குமார், செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் ராம்குமார், வட்டாரத் தலைவர் முரளி, சாசனத் தலைவர் சரவணன், முதலாம் துணைத் தலைவர் வீரமணி, சேவைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் செல்வம், தலைமைப்பண்பு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், இயக்குநர்கள் பங்கேற்றனர்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஜூலை 13-  தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில், 2024-25 ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்புகளில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ.மாதவன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழா குழுத் தலைவர் து. செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் சிறப்புரையாற்றினார். பின்னர், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 10 மற்றும் 12 ஆம் அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற 78 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.