கரூர் மாவட்டத்தில் 10 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு
கரூர், செப். 21- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் காணொலி வாயிலாக முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 10 வகுப்பறை கட்டிடங்கள் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தி. திருநாவுக்கரசு மற்றும் வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார், தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.