tamilnadu

‘150 கோடி ரூபாய் ஊதியத்தை இழந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி வர்க்கம்’

‘150 கோடி ரூபாய் ஊதியத்தை இழந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி வர்க்கம்’

சென்னையில் நடந்த போராட்டத்தின்போது சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்புகள், வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகள் இணைந்து பொதுவேலைநிறுத்தம் செய்கிறோம். அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் இந்தப்போராட்டத்தில் 25 கோடிப் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசின் கொள்கையால் அனைத்து பொருட்களின் விலைகளும் ஏற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானை விட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 21 ரூபாய் அதிகமாக உள்ளது. சுங்க கட்டணம், ஜிஎஸ்டி கொள்ளை போன்றவை விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவது ஒன்றிய அரசாங்கத்தின் திட்டத்தில் இல்லை. வேலைவாய்ப்பை சுருக்குதல், வேலையை பறித்தல், நிரந்தர வேலை உள்ள இடங்களில் காண்ட்ராக்ட்டை புகுத்துதல் என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியுள்ளனர். இது தொழிலாளர்களுக்கு எதிரானது.  விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். தொழிற்சங்க உரிமை, குறைந்தபட்ச கூலி, வேலைநேரம் போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். திட்டப்பணியாளர்களை அரசுப்பணியாளர்களாக மாற்ற வேண்டும். இந்தியாவின் உற்பத்தி மதிப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு செய்யும் முறைசாரா தொழிலாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். முதலாளிகளுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் கோடி சலுகை வழங்கும் அரசால் இதை செய்ய முடியாதா? ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் விடுக்கும் எச்சரிக்கைதான் இந்த வேலை நிறுத்தம்.  இந்த வேலைநிறுத்தம் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராகவும் எதிரொலிக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அதற்காக அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் மாதம் அறிக்கை தர அரசு கோரியுள்ளது. அதன்பேரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு என்ற வகையில் தமிழகத்தில் 150 கோடி ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.