tamilnadu

img

பெண்களுக்காக போராடக் கூடிய ஒரே அமைப்பு ஜனநாயக மாதர் சங்கம் தான்: ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி:
எத்தனை பெண்கள் அமைப்புகள் இருந்தாலும், பெண்களுக்காக போராடக் கூடிய ஒரே அமைப்பு ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரியை உருவாக்கிட மேற்கொண்டுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நடைபயணம் புதுச்சேரிக்கு வந்தது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் வந்த பயணக்குழுவிற்கு லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக்குழு செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அரசியல்அமைப்பு சட்டம் நிறைவேற்றி 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கான சம உரிமை என்பது இன்னும் எட்டாக்கனியாகத்தான் உள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை என்றால் அரசியல் சட்டம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது என்றார்.

“கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்களால்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்றைக்கு பட்டி தொட்டி எல்லாம் பரந்து விரிந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்களால் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடியபோது வேலுச்சாமி என்ற தோழர் பலியானார். எத்தனை பெண்கள் அமைப்புகள் இருந்தாலும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டு போராடியது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமே. எனவேதான் பெண்களுக்கான ஒரேஇயக்கம் என்றால் ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமே. பாரதி, பாரதிதாசன் வாழ்ந்து புரட்சி கண்ட புதுச்சேரியில் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அனைத்து பெண்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.இந்தகூட்டத்தில் சிபிஎம் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் மாதர் சங்க நடைபயணக்குழு
பெண்கள் மீதான  வன்முறைகளை தடுத்திட வேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைத்து வன்முறையற்ற தமிழகம் போதையற்ற தமிழகம்  உருவாகிட வேண்டும் என  கடந்த டிசம்பர் 25 அன்றுதிருவண்ணாமலையில் தொடங்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணக்குழு வெள்ளியன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டது. ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமையிலான குழு போளூர், ஆரணி வழியாக வியாழனன்று (நவ.28) வேலூர் மாவட்ட எல்லையான தாமரைப்பாக்கத்தை வந்தடைந்தது. அங்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரகுபதி தலைமையிலும்  திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையிலும் எழுச்சிமிகு  வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு திமிரி பேருந்து நிலையம் அருகில் மாதர்சங்க மாவட்டச் செயலாளர் இந்துமதி தலைமையில் பொதுக்கூட்டத்துடன் நான்காம் நாள் நடை பயணம் நிறைவு பெற்றது. இதையடுத்து வெள்ளியன்று காலையில் துவங்கிய ஐந்தாம்நாள் நடை பயணத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திமிரி பஜார் பகுதியில் வரவேற்பளிக்கப்பட்டது.விளாப்பாக்கம் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரி அருகில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  தலைவர் வெங்கடேசன் தலைமையிலான தோழர்கள்தேநீர் வழங்கி வரவேற்பளித்தனர். ஆற்காடு வந்தடைந்த தோழர்களுக்கு பெரியார் நகர் மற்றும் அண்ணா சாலையில்  சிஐடியு சார்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மாவட்டத் தலைவர் எம்.கோவலன் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.ஆற்காடு பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் ஆண்டாள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நவயுக கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் உரை யாற்றினர்.இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக சாதியற்றவர் என்று சான்று பெற்ற வழக்கறிஞர் சினேகா  கலந்துகொண்டு பேசினார்.   பின்னர் பயணக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நடைபயணத்தில் பங்கேற்றார். ராணிப்பேட்டை வந்தடைந்த பயணக்குழுவினரை பெண்கள் முன்னேற்றத்திற்கான  தென்றல் இயக்கத்தின் டாக்டர் வேதா தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வரவேற்றனர்.

;