india

img

மாநிலங்களின் கையை கட்டிப் போடும் சட்டம் - ஜி.ராமகிருஷ்ணன்

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டில் இருந்து மூன்று சதவிகிதத்திற்குள்தான் நிதிஒதுக்கீடு வருகிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.

உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்துமே தங்களுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்தப் பெருந்தொற்றை உலகப் பேரிடர் என்றே குறிப்பிட லாம்.

இந்தியாவில் 1897 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தொற்றுநோய் சட்டத்தைப் பயன்படுத்தி, மத்திய, மாநில அர சாங்கங்கள், ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள் ளன; மத்திய அரசாங்கம் வருகிற ஏப்ரல் 14 வரை ஊரடங்கு தொடர வேண்டும் என அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவித்த பிறகு, மத்திய அரசாங்கம், கொரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவச் செலவுக்காக, 15,000 கோடி ரூபாய் அறி வித்தது. நாடு முழுவதும் தொழில்கள் முடங்கி, மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கி வரும் சூழ்நிலையில், நிவாரணத்துக்காக மத்திய அரசு 1.75 கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளது. இந்த நிதி போதுமானதல்ல. 

மிகக் குறைவான அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபியில்) 10 சதவிகிதத்தை கொரோனா கட்டுப்படுத்தல் நட வடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளது. அமெரிக்கா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 22.32 ட்ரில்லியன் டாலர்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அது தற்போது அறிவித்துள்ள நிதி 2.2 ட்ரில்லியன் டாலர்கள். இங்கிலாந்து அரசு, தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.5 சதவிகிதத்தை ஒதுக்கி யுள்ளது. இந்திய அரசு, முதற்கட்டமாக கொரோனா உபகரணங்களுக்காக ஒதுக்கிய 15000 கோடியை யும், அடுத்தகட்டமாக உற்பத்தி முடங்கிய காலத்தில் நிவாரணத்துக்காக ஒதுக்கிய 1.75 கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்பு களையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இரண்டில் இருந்து மூன்று சதவிகிதத்திற்குள்தான் நிதிஒதுக்கீடு வருகிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது. 

கையைக் கட்டிப் போடும் சட்டம்

இவ்வளவு மோசமான ஒரு பேரிடரை எதிர்த்த போராட்ட நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என வரும்போது, மத்திய அரசாங்கம் நிதிப்பற்றாக்குறை (Fiscal deficit) பற்றிக் கவலைப்படாமல், நிதி திரட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2003 ஆம் ஆண்டின், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FRBM சட்டம்), நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சவரம்பை நிர்ணயிக்கிறது. என்றாலும், போர், தேசியப் பேரிடர், விவசாய நெருக்கடி போன்ற நெருக்கடிகள் ஏற்படு கிறபோது, மத்திய அரசு 3 சதவிகித நிதிப்பற்றாக் குறை உச்சவரம்புக்கு மேலேயும் நிதிதிரட்டி செலவு செய்யலாம் என்ற விதிவிலக்கைப் பயன்படுத்து வதற்கான ஏற்பாடும் இந்தச் சட்டத்தில் உள்ளது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட போது, சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சி கள், நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டிய காலங்களில், இந்தச் சட்டம் நம் கையை நாமே கட்டிப்போடுவது போலாகி, கடும்பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறி எதிர்த்தன. 

எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தின் விதிவிலக்கு அம்சத்தை மத்திய அரசு கடந்த காலத்தில் பயன்படுத்தியும் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டில், மேலை நாடுகளில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மத்திய அரசு விதிவிலக்கைப் பயன்படுத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 6.2 சதவிகிதம் போகுமளவுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது. மனித வளத்தைப் பாதுகாப்பது தான் தேசத்தைப் பாதுகாப்பது. மனித வளத்தை இழந்துவிட்டு நாம் எதையுமே பாதுகாக்க முடியாது. இதன் அடிப்படையில், எஃப்.ஆர்.பி.எம் சட்ட விதிவிலக்கு ஏற்பாடுகளைப் பயன்படுத்தி, மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

தமிழக - கேரள கோரிக்கைகள்

மாநில அரசுகளைப் பொறுத்தவரையில், கேரளா முதன்முதலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.3800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், மருத்துவச் செல வினங்களுக்காகவும், நிவாரண உதவிகளுக்காக வும் 20,000 கோடி ஒதுக்கிய கேரள அரசு, ‘இந்த நிதி ஒதுக்கீடு போதாது; சந்தையில் இருந்து பத்திரங்கள் மூலமாக நிதிதிரட்ட (அதுவும் ஒரு வகையில் கடன் தான்.) வேண்டியுள்ளது. எஃப்.ஆர்.பி.எம் சட்டப்படி 3 சதவிகித உச்சவரம்புக்கு உட்பட்டு, கேரளா 2020-21 ஆம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 25000 கோடிதான் நிதிதிரட்ட முடியும்; இந்த ஏப்ரல் மாதத்திற்குள்ளேயே கேரள அரசு 12,500 கோடி நிதிதிரட்டியாக வேண்டும்;

ஆகையால் எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தின் விதிவிலக்கு ஏற்பாட்டைப் பயன்படுத்த தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசும், தான் தற்போது ஒதுக்கியுள்ள 3800 கோடி பத்தாது என்ற சூழலில், மத்திய அரசிடம் 9000 கோடி நிதிஉதவி கோரியுள்ளது. மேலும், மொத்த மாநில உற்பத்தி யில் ஏறத்தாழ 33 சதவிகித நிதிப்பற்றாக்குறை என்ற அளவுக்கு, எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தின் விதி விலக்குப் பலனைப் பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இது போக, மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் மாநிலங்க ளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. ஏற்கனவே 2008-2009 ஆம் ஆண்டு நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தியில் 3.5 சதவிகிதமாகவும், 2009-10 ஆம் ஆண்டில் 4 சதவிகிதமாகவும் இருப்பதற்கு அனுமதியளித்தது. 

மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகாலமாக, கார்ப்ப ரேட்டுகளுக்கு அளித்து வரும் வரிச் சலுகைகளும், வராக்கடன் தள்ளுபடிகளும் ரூ.7 லட்சம் கோடி யைத் தாண்டுகின்றன. இவையெல்லாம் நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பில் தாக்கத்தை செலுத்தும். இந்த ஆண்டுகூட கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளித்த சமயத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், சென்ற 2019-20 ஆண்டின் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையான 3.3 சதவிதத்துக்கும் மேலாக நிதிப்பற்றாக்குறை 3.8 சதவிதமாகவும், நடப்பாண்டின் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக் கறையான 3 சதவிகிதத்தில் இருந்து 3.5 சதவிகித மாகவும் ஏறக்கூடும் என்றார். எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தின் 3 சதவிகித உச்சரவரம்பை நாம் ஏற்கனவே மீறிவிட்டோம் என்பதையே இது காட்டுகிறது. 

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் சூழலில், மாநிலங்கள் சந்தித்து வரும் நெருக்கடி என்பது முன்னெப்போதும் கண்டிராத கொடுமை யான நெருக்கடி. எனவே கேரளா, தமிழகம் மட்டுமல்லாது, அனைத்து மாநில அரசுகளும் எஃப்.ஆர்.பி.எம் சட்டதின் 3 சதவிகித உச்சவரம்பை மீறி, கடன் வாங்கிச் செலவழித்தால் தான், கொரோனா வைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற முடியும். எனவே, மத்திய அரசு எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தின் விதிவிலக்கைப் பயன்படுத்தி கூடுதல் நிதி ஒதுக்கியும், மாநில அரசுகளுக்கும் விதிவிலக்கு ஏற்பாட்டைப் பயன்படுத்த அனுமதி அளித்தும், மக்களின் துயர்துடைக்க ஆவன செய்ய வேண்டும்.