tamilnadu

img

எல்ஐசி பங்குகளை விற்றால் 40 கோடி குடும்பங்களின் பாதுகாப்பு சிதைந்துவிடும்... எல்ஐசி முகவர் சங்க தலைவர் எச்சரிக்கை

புதுதில்லி:
இந்திய அரசாங்கத்தால் நேரடியாக தர முடியாத பொருளாதாரப் பாதுகாப்பை எல்ஐசி மூலம் பெற்றிருக்கும் 40கோடி மக்களின் குடும்பப்  பாதுகாப்பு எல்ஐசியின் பங்குகளை விற்பதால் சின்னாபின்னமாகிவிடும் என்று எல்ஐசி முகவர் சங்கம் - லிகாய் (LICAOI) குற்றம்சாட்டியுள்ளது. 

பாலிசிதாரர்களுக்கு இந்தப் பாதுகாப்பை கடந்த 64 ஆண்டுகளாக எல்ஐசி வழங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார் அதன் பொதுச்செயலாளர் பி.ஜி.திலீப்.   எல்ஐசியின்  பங்கு விற்பனைக்கு சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பிறகு எல்ஐசி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். திருத்த மசோதா சட்டமான பின், அது பங்குச் சந்தை(SEBI) மற்றும் காப்பீடு (IRDA) ஆகிய  ஒழுங்காற்றுக்குழுக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.  பின் அது எல்ஐசி ஆட்சிமன்றக் குழுவிற்கு அனுப்பப்படும். அந்தக் குழு அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதற்குப் பிறகுதான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். முதல் தொகுதி விற்றபின் அடுத்தடுத்த விற்பனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதலே போதுமானது.   

எல்ஐசி தொடங்கப்பட்டபோது மத்திய அரசு போட்டமூலதனம் வெறும்  ஐந்து கோடி ரூபாய் தான். இன்றைக்கு அதன் சொத்து மதிப்பு ரூ. 31.5 இலட்சம் கோடிகள். பாலிசிதாரார்கள் நிதி ரூ. 29.8 இலட்சம் கோடிகள். கடந்தஒரு ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ. 2418.98கோடிகளும். 17 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 26008 கோடிகளும் அரசுக்கு எல்ஐசி வழங்கியுள்ளது.  ‘மக்கள் பணம் மக்கள் நலனுக்கு’ என்பதே எல்ஐசியின் அடிப்படையான முழக்கமாக இருந்து வருகிறது. அதனுடைய உபரித் தொகையில் 95% போனசாக லிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள ஐந்து சதவீதம்தான் அரசுக்கு ஈவுத்தொகையாகக் கொடுக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார் திலீப்.  எல்ஐசியின் முதலீடுகள் அரசுப் பத்திரங்களில் ரூ.10.34 இலட்சம் கோடிகள், மாநில சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ரூ. 8.44 இலட்சம் கோடிகள், மத்தியசமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ரூ. 2.61 இலட்சம் கோடிகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டு வசதி ரூ. 54,285 கோடிகள், சாலை, துறைமுகம்,பாலங்கள், ரயில்வே ஆகிய துறைகளில் ரூ. 65,620 கோடிகள், மின்சாரத் துறைக்கு ரூ. 1.08 இலட்சம் கோடிகள், நீர்ப் பாசனம், குடிநீர் வழங்கல், வடிகால் வசதிகள் ஆகியதுறைக்கு ரூ. 1,500 கோடிகள் ஆகியவை எல்ஐசியின் பிற முக்கிய முதலீடுகள் ஆகும். ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக நீண்ட கால அடிப்படையில் மிகக்குறைந்த வட்டியில் ரூ.70,000 கோடிகள் வழங்குவதற்கு எல்ஐசி முன்வந்துள்ளது. கடந்த 15 வருடங்களாக 98.35 சதவீதம் முதல் 99.99 சதவீதம் வரை உரிமத் தொகை பட்டுவாடா செய்துஉலகிலேயே ஒரு முன்மாதிரிகாப்பீட்டாளராக  விளங்குகிறது.

(இந்து பிசினஸ் லைன் 11-02-2020)

;