tamilnadu

img

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

புதுதில்லி:
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச்சட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம்எவ்வாறு வழங்கப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பி யிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது, பி.ஆர். நடராஜன், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச்சட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்றும், இத்தகைய தொழிலாளர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருப்பதாலும், கிராமங்கள் பலவற்றில் பொதுத்துறை வங்கிகளோ, அஞ்சலகங்களோ இல்லாததாலும் இவர்களுக்கு ஊதியங்கள் வழங்கப்படுவதில் சிரமங்கள் இருப்பது அரசுக்குத் தெரியுமா? அவற்றைக் களைந்திட  அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார்.இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கூறியதாவது: இத்திட்டத்திற்கு நேரடிப் பயன்பாடு மாற்றல் (DBT-Direct Benefit Transfer) முறை மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம், 24 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக அவர்கள் கணக்கில் ஊதியத்தைச் செலுத்துவதற்காக தேசிய எலக்ட்ரானிக் நிதி மேலாண்மை முறையை (National ElectionFund Management System) தொடங்கி இருக்கிறது.பொதுத்துறை வங்கிகள் மூலமாகவும், அஞ்சலகங்கள் மூலமாகவும் இவ்வாறு ஊதியம் வழங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும்  அஞ்சலகங்கள் இல்லாத கிராமங்களில் தொழிலாளர்கள் ஊதியம் வாங்குவதற்கு நேரடிப் பயன்பாடு மாற்றல் முறை தளர்த்தப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். (ந.நி.)

;