tamilnadu

img

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி:
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று மக்களவையில் உணவுப் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசுகையில், நாட்டில் மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்கள்  உணவு பாதுகாப்புச் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறது. சமீப காலங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து சங்கங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஏதேனும் குறைகளை அரசு பெற்றுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதுதொடர்பாக அரசால் எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினர்.இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தன்வீ ராவ் சாஹேப் டடராவ் அளித்த பதில்கள் வருமாறு: 

இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையின் கீழ் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்காக சுமார் 80 கோடி நபர்களை உள்ளடக்கிய, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013,   அனைத்து  மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக அமைப்பின்  ஒழுங்கற்ற செயல்பாடுகள் -  உணவு தானியங்களின் கசிவு/ உணவு தானியங்களை திசை திருப்புதல், உணவு தானியங்கள் தேவைப்படும் பயனாளிகளை சென்று சேராமை,  தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்குதல் போன்ற குறைபாடு கள் பற்றிய புகார்கள் சில மாநிலங்கள் / பகுதிகளில் உள்ளன. 

பொது விநியோகத் திட்டமானது,  மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேசங்களின், அரசாங்கங்களின் கூட்டுப் பொறுப்பின் கீழ் இயக்கப்படுகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பகுதிகளுக்குள், பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தி இயக்கும் பொறுப்பு, அந்தந்த மாநில/யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள் கையில் உள்ளது.அதனால், இது சம்பந்தமான புகார்கள், தனிமனிதர்கள், அமைப்புகள், மற்றும் பத்திரிக்கை பிரசுரங்கள் வாயிலாக எப்போதெல்லாம் மத்திய அரசால்  பெறப்படுகிறதோ அப்போதே அவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு விசாரணை மற்றும் தக்க நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் தன்வீ ராவ் சாஹேப் டடராவ் தெரிவித்தார்.