புதுதில்லி:
கோவிட்-19 வைரஸ் தொற்றை முறியடித்திட கேரளம் காட்டிய வழியில் மத்திய அரசு துல்லியமான நடவடிக்கைகளை எடுத்திட, இப்போதாவது முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கோவிட்-19 குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் நாட்டில் கேரளாவில்தான் ஜனவரி 30ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டார். அவர், சீனாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த இடமான வுஹான் என்னுமிடத்திலிருந்து வந்த ஒரு மருத்துவமாணவராவார். அதன்பின்னர், பிப்ரவரி 2ஆம் தேதி மேலும் இருவருக்கு இந்தத் தொற்று இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் கேரளாவில்,மாநில அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டபின் கோவிட்-19 தொற்று சம்பந்தமாக மேற்கொள்ளப் பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரக்குழுமம் மற்றும் சுகாதாரத் துறை ஆகிய இரண்டும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, நன்கு திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக, கேரள மாநில அரசாங்கம் முதலில் இந்நோய் பரவுவதை வெற்றிகரமான முறையில் தடுத்து நிறுத்தியது. இதனை உலக சுகாதார ஸ்தாபனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஏன், மத்திய சுகாதார அமைச்சகமும்கூட பாராட்டின.
அனைவரும் பொறாமைப்படக்கூடிய விதத்தில் இந்த சாதனை எப்படி ஏற்பட்டது. எப்படியென்றால், முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் சக்திவாய்ந்த தலைமையும், அவருக்கு உறுதுணையான முறையில் மிகவும் திறமையாகச் செயல்பட்ட சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சரின் ஆதரவும், முதல்வரின் தலைமையில் இயங்கிய உயர்மட்டக்குழுவும்தான் காரணங்களாகும்.எங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல் (tracing),அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்தல் (guarantine and isolation), மருத்துவ சிகிச்சை அளித்தல், நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் கட்டுப்பாடு என திட்டமிட்டமுறையில் செயல்பட்டு இந்நோய் பரவுவதைத் தடுத்தோம்.
கேரளா, அதிகமான அளவில் அந்நிய நாடுகளில் பணிபுரிவோரைக் கொண்ட மாநிலம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கையாகவே பல லட்சக்கணக்கானவர்கள் நாட்டிற்கு உள்ளேயிருந்தும், வெளியேயிருந்தும் கேரளாவிற்குத் திரும்பினார்கள். இதன் விளைவாக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் இயற்கையாகவே அதிகரித்தது.
இறப்புவிகிதம் மிகக்குறைவு
மாநில அரசும் கோவிட்-19 சோதனைகளை படிப்படியாக அதிகரித்தது. இவற்றின் விளைவாக, கோளாவில்தான் இறப்போர் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. அதாவது நாட்டின் சராசரி இறப்பு விகிதம் 1.61 சதவீதமாக இருந்த அதே சமயத்தில், கேரளாவில் 0.4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சோதனை செய்ததிலும்கூட நாட்டில் மற்ற மாநிலங்களைவிட கேரளாவில்தான் அதிகமானவர் களுக்கு சோதனைகள் செய்யப்பட்டன. நாட்டின் சராசரியில், பத்து லட்சம் பேரில் 3,102 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட அதே சமயத்தில், கேரளாவில் இது வெறும் 2,168 பேராக இருந்தது.
இறந்தோர் எண்ணிக்கையிலும்கூட கேரளாவில் மிகவும் குறைவு. நாட்டின் சராசரியில் பத்துலட்சம் பேர்களில் 48 பேர் இறந்தார்கள் என்றிருந்த அதேசமயத்தில், கேரளாவில் அது வெறும் 8.4 மட்டுமேயாகும். தமிழ்நாட்டில் இது 11 மடங்காகவும், கர்நாடகாவில் 12 மடங்காகவும் இருந்தன.நாங்கள் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின்கீழும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு ஒவ்வொரு வார்டிலும் ‘ஜாக்ரதா சமிதி’ என்னும் அமைப்பை அமைத்து, தொற்றுக்கு எதிரான நடவடிக்கை
களை எடுத்தோம். இந்த அமைப்பில் டாக்டர்கள்,செவிலியர்கள், இதர சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர் முதலானவர்கள் இடம்பெற்றிருந்தனர்.இவ்வாறாக மிகவும் போற்றத்தக்கவிதத்தில் சாதனைகள் புரிந்ததன் விளைவாகத்தான் ஐ.நா. ஸ்தாபனம் கேரள சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா டீச்சரை, முன்னணியில் நின்று செயல்பட்டதற்காக கௌரவித்தது.
பசிப்பிணி போக்கினோம்...
இவ்வாறு கேரள அரசு மத்திய அரசாங்கத்திற்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்று வழிகாட்டியது. கேரளாவில் நாங்கள் கோவிட்.19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக சோதனைகள் செய்து, சிகிச்சைகள் அளித்தோம். இத்துடன், சாமானிய மக்களின் அனைத்துப் பிரச்சனைகள்மீதும் நடவடிக்கைகள் எடுத்தோம். மத்திய அரசாங்கம் நிவாரண தொகுப்புஅறிவிப்பதற்கு வெகு முன்பாகவே, கேரள மாநிலஅரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்புஅறிவித்தது. சமூக முடக்கக் காலத்தின்போது அனைத்து மக்களுக்கும் - அவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தாலும் சரி அல்லது வறுமைக் கோட்டுக்கு மேலே இருந்தாலும் சரி - இலவசமாக ரேஷன் பொருள்கள் அளிக்கப்பட்டன. உணவு தானியங்கள், எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட உணவுப் பைகள் (food kits) அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதத்தில் இரு தடவைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்தது. இது சாமானிய மக்களில் 80 சதவீதத்தினரைச் சென்றடைந்தது. நல ஓய்வூதியம் (welfare pension) பெற்று வந்தவர்கள் அனைவருக்கும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கூடுதலாக உயர்த்திக் கொடுக்கப்பட்டது. இதனால் 60 லட்சம் பேர் பயன் அடைந்தார்கள்.பல்வேறு ஊழியர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த 80 லட்சம் ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை அளிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பை உயர்த்திட, ‘சுபிக்ஷா கேரளம்’ திட்டத்தின்கீழ் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது. சமூக முடக்கக் காலத்தின்போது அனைத்து உள்ளூர் அரசாங்க நிறுவனங்களிலும் இலவச சமூக சமையலறை ஏற்படுத்தப்பட்டு, உணவு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு வஞ்சனை
இவ்வாறு நாங்கள் கூறும் அதே சமயத்தில், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதற்காக, மத்திய அரசு இதுவரைசெய்தது என்ன? மார்ச் 23 அன்று இதற்கு முந்தையநாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்னர், கேரளாவிலிருந்து வந்த அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிதித் தொகுப்பை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆயினும் இந்த அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் 1.7 லட்சம் ரூபாய் நிதித்தொகுப்பை அறிவித்தது. அதையும்கூட அதிகமான அளவில் பலமுனைகளிலிருந்தும் கடும் விமர்சனங்கள் வந்த பின்தான் அறிவித்தது.மத்திய அரசாங்கம் திடீரென்று, எவ்விதத் திட்டமிடலுமின்றி, நாடு தழுவிய அளவில் சமூக முடக்கத்தைத் திணித்தது. இதனால் பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல நாட்கள் நடந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். இவ்வாறு அவர்கள் நடந்துபோகும்போதே உணவு இன்றி, தண்ணீர் இன்றி வழியிலேயே பலர் இறந்து போனார்கள்.
பாஜகவினரின் வெட்ககரமான செயல்கள்
ஆனால் மத்திய அரசு என்ன செய்தது? கேலிக்கூத்தான முறையில் விளக்கேற்றுங்கள், கைகளைத் தட்டுங்கள், தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்புங்கள், புறாக்களையும் பட்டங்களையும் பறக்கவிடுங்கள் என அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகளை செய்யச்சொன்னது. இதன்மூலம் கோவிட்-19 தொற்றை நாட்டைவிட்டே துரத்தி அனுப்பிவிடலாம் என்றது. பாஜகவின் அமைச்சர்களில் சிலரும், தலைவர்களில் சிலரும் பசுவின் கோமியம் குடியுங்கள், சிறப்பு அப்பளம் சாப்பிடுங்கள் என்றெல்லாம் அறிவுரை பகன்றார்கள். இது நம் ஜனநாயகத்தின் மீதான வெட்ககரமான செயல்கள் இல்லையா? ஏனெனில், அரசாங்கம் என்பது அறிவியல் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய ஒன்று. அதுஇவ்வாறு மிகவும் மலினமான விளம்பரத்தில் ஈடுபட்டது. உண்மையில், மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களுக்கு இதன்மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்குக் கொடுக்க மறுப்பதோடு, பிரதமர் தேசியப் பேரிடர் நிதியத்திலிருந்தும், பிஎம் கேர்ஸ் என்னும் தனியார் அறக்கட்டளை பெயரில் வசூலித்துள்ள நிதியிலிருந்து மாநில அரசாங்கங்களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி வழங்க மறுத்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு இந்த அவசரநிலை காலத்திலும்கூட உதவிட முன்வருவதில் தோல்வி அடைந்திருக்கிறது.நாட்டில் சாமானிய மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள இந்த அரசு முன்வர வேண்டும் என்றுகேட்டுக்கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்சம் இப்போதாவது கேரள மாநிலம் காட்டியவழியில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்திட துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ஏ.எம்.ஆரிப் பேசினார். (ந.நி.)