tamilnadu

img

விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க அவசரப்படுவது ஏன்?

புதுதில்லி:
விமான நிலையங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட இந்த அரசாங்கம் அவசரப்படுவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்பி.ஆர். நடராஜன் கூறினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் வெள்ளிக்கிழமை மாலை ஏர்போர்ட் எகனாமிக் ரெகுலேடரி அத்தாரிட்டி சட்டமுன்வடிவின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவானது விமானப்போக்குவரத்து துறையையே (Aviation sector) ஒட்டுமொத்தமாக தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கான ஒன்றேதவிர வேறல்ல. தனியார் மயம் என்பது இந்தஅரசாங்கத்தின் தாரக மந்திரமாக இருக்கிறது.2008ஆம் ஆண்டு ஏர்போர்ட் எகனாமிக் ரெகுலேடரி அத்தாரிட்டி சட்டத்தின் 2ஆவது பிரிவின்கீழ், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்துசெல்லும் விமான நிலையங்களின் பல்வேறு கட்டணங்களும் முறைப்படுத்தப்படுகிறது.இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமுன்வடிவு நாட்டிலுள்ள பெரியவிமான நிலையங்களுக்கு இந்த எண்ணிக்கையை 35 லட்சமாக உயர்த்தி இருக்கிறது.நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட இருக்கிறது. ஐந்து விமான நிலையங்கள்அதானி குழுமத்திடம் விற்கப்பட்டிருக்கின்றன.  இவற்றின்மீது அரசாங்கத்திற்குக் கடந்தஐம்பது ஆண்டுகளில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இத்தகைய வணிகத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அனைத்து பி-பி-பி மாடல்களுக்கான விதிமுறைகளும் இவற்றை ஏலம் விடும் சமயத்தில் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு டெண்டர் விடுவதற்கு முன்பு இவ்விமான நிலையங்கள் குறித்து எவ்விதமான ஆய்வினையும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப்இந்தியா நிறுவனமோ அல்லது விமானப்போக்குவரத்து அமைச்சகமோ செய்திடவில்லை.டெண்டருக்கு விடும் சமயத்தில் குறைந்தபட்ச டெண்டர் விலை நிர்ணயம் செய்வதுபோன்ற அடிப்படை நியதிகளைக்கூட இவற்றில் பின்பற்றிடவில்லை. இந்தப் பேரத்தில் நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் பரிந்துரைகள் மிகவும்கந்தலாக இருக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் உலக அனுபவம் என்ன என்று இந்த அரசாங்கம் பார்க்க வேண்டியதுஅவசியமாகும். உலகின் பல நாடுகளில்விமான நிலையங்கள் அரசின் கட்டுப்பாட்டில்இருக்கும்போது, இந்தியாவில் இவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்திட ஏன் அவசரப்படுகிறீர்கள்? இதனால் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்குக் கிடைக்கக்கூடியது என்ன? இந்த அரசாங்கம் மக்களின்காவலனா (சவுகிதாரா) அல்லது கார்ப்பரேட்டுகளின் காவலனா (சவுகிதாரா) என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.