தூரப்பார்வை
நாம் கண் பரிசோதனைக்காக செல்லும்போது சில அடி தூரத்தில் இருக்கும் சிறிய எழுத்துக்களை சிரமப்பட்டு படிப்போம். அப்படி இருக்கும்போது ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சிறிய உருவங்க ளையும் பார்க்க முடியுமா? சாத்தியம் என்கிறார்கள் சீனாவிலுள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள். இவர்கள் கண்டுபிடித்துள்ள ஒளி குறுக்கீட்டு அளவு கருவியானது(Intensity interferometry) வழக்க மான காமிரா செயல்பாட்டிலிருந்து மாறுபடுகிறது. நேரடி யாக ஒளியை அளவிடாமல் அது பிரதிபலிக்கும் முறை யையும் அதனுடனே அது குறுக்கீடு செய்வதையும் அளவீடு செய்கிறது. அந்த தரவுகளிலிருந்து ஒரு பிம்பத்தை உண்டாக்குகிறது. இலக்குப் பொருள் எட்டு லேசர் ஒளிக்கற்றைகள் மூலம் ஒளிரச் செய்யப்படுகிறது. அதிலிருந்து பிரதிபலிக்கும் ஒளி, இரண்டு தொலை நோக்கிகளில் பிடிக்கப்பட்டு இரண்டுக்கும் உள்ள வேறு பாட்டிலிருந்து பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. சோதனைச்சாலைக்கு வெளியே நடத்தப்பட்ட ஆய்வுகளில், 1.36 கி.மீக்கு அப்பால் உள்ள மில்லி மீட்டர் அளவேயுள்ள பொருட்கள் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டன. சாதாரண தொலைநோக்கிகளில் பிடிக்கப்படுவதைவிட 14 மடங்கு தெளிவான பிம்பங்கள் கிடைத்தன என்கிறார்கள் இந்த ஆய்வா ளர்கள். விண்வெளி தொலைநோக்கிகள் முதல் ரிமோட் சென்சார் வரை பல இடங்களில் இந்த கருவிகள் பயன்படுமாம். வளிமண்டல கொந்தளிப்புகள் மற்றும் கேமிரா அமைப்புகளிலுள்ள செம்மைக் குறைபாடு களை சரி செய்தல் போன்றவற்றிற்கும் பயன்படுத்த லாம். இந்தக் கருவியில் அகச்சிவப்புக் கதிர்களை கட்டுப்படுத்துதல் போன்ற மேம்பாடுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட எழுத்துக்களையும் வடிவங்களை யும் துல்லியமாக பகுப்பாய்வு செய்ய, செயற்கை நுண்ணறிவு அல்கோரிதம்களை பயன்படுத்தவும் சாத்தி யம் உள்ளது. சுயமாக ஒளிவீசாத தொலைதூர பொருட் களை படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தில் இந்த ஆய்வு ஒரு முக்கியமான முன்னேற்றம் என்கிறார் பிரான்ஸ் நாட்டிலுள்ள ஷாபான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒளி ஆய்வாளர் ஷ்வர்யா ஆரவ். இந்த ஆய்வு பிசிக்கல் ரிவியூ லெட்டர்ஸ் (Physical Review Letters) என்கிற இதழில் வந்துள்ளது.
சூரிய ஒளியும் நோய் எதிர்ப்பு சக்தியும்
நமது உடலினுள் சிர்க்கேடியன் கடிகாரம்(circadian rhythm) எனும் ஒழுங்கமைவு உள்ளது. இது சூரிய ஒளி இருக்கும்போது நாம் விழித்திருப்பதையும் இரவானால் தூங்குவதையும் உறுதி செய்கிறது. இரவு தாமதமாக உறங்கச் செல்வது அல்லது இரவுப் பணி போன்றவைகளால் இது பாதிக்கப்படுவதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் தொடர்பு உள்ளது. எனவே நமது உடல் சூரிய ஒளியில் தினம் தோறும் இருப்பது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்துகிறது என சயின்ஸ் இம்யூனாலஜி (Science Immunology) இதழில் வந்துள்ள ஒரு ஆய்வு கூறுகிறது. சிர்கேடியன் ஒழுங்கமைவு 2.5 பில்லியன் ஆண்டு களுக்கு முன் உருவானது என்று கூறப்படுகிறது. சூரி யனை அடிப்படையாகக் கொண்ட 24 மணிநேர நாளு டன் இணைந்த சவால்களை எதிர்கொள்ள உயிரி னங்களுக்கு இது உதவுகிறது. நோய் எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நியூட்ரோபில் எனும் வெள்ளை அணுக்கள் மீது இந்த ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி னர். இவை குறுகிய நேரமே இயங்குவதால், மனித உட லிலிருந்து பிரித்து சோதனை செய்வது கடினம். ஆனால் ஸெப்ரா மீன்களின் உடல், ஒளி ஊடுருவக்கூடிய வகையில் இருப்பதால் அவை உயிருடன் இருக்கும் போதே அவற்றின் செல் இயக்கங்களை படம் பிடிக்க இயலும். ஆக்லாந்து பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் உடல்நல துறையை சேர்ந்த கை வார்மன், ஜேம்ஸ் சீஸ்மேன், லூசியா தூ மற்றும் பிரமுக் கீர்த்திசிங்கே ஆகியோர் நடத்திய ஆய்வில் செப்ரா மீன்கள் எனும் வளர்ப்பு மீன்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மரபணுவும் நோய் எதிர்ப்பும் மனிதர்களோடு ஒத்திருக்கின்றன. தொற்று ஏற்படுத்திய பேக்டீரியாக்களை வெள்ளை அணுக்கள் ஒரு நாளின் பல்வேறு நேரங்களில் அழிப்பதை பதிவு செய்தபோது, அவை இரவை விட பக லில் அதிகம் அழிப்பதை காண முடிந்தது. இந்த வெள்ளை அணுக்களில் உள்ள சிர்கேடியன் அமைப்பின் சில பகுதிகளை மரபணு மாற்றம் செய்த போது அவை செயலிழந்தன. எனவே இந்த நோய் எதிர்ப்பு செல்களில் சூரிய ஒளியின் அடிப்படையில் இயங்கும் காரணிகள் இருப்பது தெரிய வந்தது. வீக்கம் போன்ற நோய் அறிகுறி களுக்கு முதலில் செயல்படுத்தப்படுவது நியூட்ரோ பில் வெள்ளை அணுக்களே. எனவே அவற்றை குறிவைத்து மருந்துகள் தயாரிக்க இந்த கண்டுபிடிப்பு உதவும். இந்த நோய் எதிர்ப்பு செயல்பாடு நாம் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பேக்டீரியாக்களுக்கு மட்டுமா அல்லது எல்லாவித தொற்றுகளுக்கும் எதிர்ப்பானதா என்பதை ஆய்வு செய்யவேண்டும் .
டால்பின்களின் சமூக ஊடாட்டம்
மனிதர்களைப் போலவே, பிற உயிரினங்களும் பிழைத்திருப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் சமூக ஊடாட்டங்களை சார்ந்திருக்கின்றன. அதிலும், சமூக அமைப்பு மேலோங்கியிருக்கும் விலங்கினங்கள் சிக்கலான தகவல் தொடர்புகளை அதிகம் கொண்டி ருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு குழுவாக இருக்கும் சிம்பன்சிகள் கைகால் அசைவின் மூலமும் குரலொலி மூலமும் தொடர்பு கொள்கின்றன. குடும்ப மாக இருக்கும் யானைகள் தொடுதல் மூலமும் குறைந்த அதிர்வு அலை அழைப்பின் மூலமும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. குப்பி மூக்கு டால்பின்கள் சிறிய எண்ணிக்கை யில் நெருக்கமான நபர்களைக் கொண்டும் அதிக எண்ணிக்கையில் லேசான தொடர்பு உள்ளவர்களைக் கொண்டும் வாழ்கின்றன. ஆரோக்கியமான சமூக சமன் நிலையை பேணுவதற்கு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதை அவை அதிகம் சார்ந்திருக்கின்றன. தனித்துவமான விசில் மூலம் அவை தங்களை அடை யாளப்படுத்திக் கொள்கின்றன என்பதே இதுவரை அறி வியலாளர்கள் அறிந்திருந்தது. இப்போது செய்யப்பட்ட ஆய்வில் இந்த விசில்கள் வெறும் அடையாளம் மட்டு மல்ல; அதில் தகவல்களும் அடங்கியுள்ளன என்பது தெரியவந்துள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த சூழலியல் துறையாளர் எக்டேரினா அவசைனிகோவா குழுவினர் 2017- 18ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா கடல் பகுதிகளில் குப்பிமூக்கு டால்பின்களின் ஓசை களை பல முறை பதிவு செய்தனர். அதற்கு 15 ஆண்டு கள் முன் சேகரிக்கப்பட்ட தரவுகளையும் பயன்படுத்தி னர். டால்பின்கள் எழுப்பும் விசில்கள் இரண்டு வகை யாக உள்ளன. ஒன்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள சிறு வயதிலிருந்தே அவை கற்றுக்கொண்டது. அது வாழ்நாள் முழுவதும்தொடரும். இரண்டாவது தக வல் தெரிவிப்பதற்கானது. அவை எழுப்பும் ஒலியின் அதிர்வெண் நிலையாக இருந்தாலும் அதில் சிறு மாற்றங்கள் காணப்பட்டன. அதாவது அடையா ளத்தோடு, உணர்வுகள், சூழல் ஆகியவை குறித்த தகவல்களும் அதில் இருக்கின்றன. டால்பின்களின் விசில்களை மனிதர்களின் முகத்திற்கு ஒப்பிடலாம். சில அம்சங்கள் நிலைத்து நம் தனித்துவமான அடையாளத்தை காட்டுகின்றன. அதே சமயம் நமது உணர்வுகளையும் முகத்தின் மூலம் காட்டுகிறோம். இதைத்தான் டால்பின்கள் விசில் மூலம் செய்கின்றன. ஆண் டால்பினின் விசில் பெண் டால்பினின் விசிலிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது. குழுவில் அவை வகிக்கும் வேறுபட்ட பங்கின் காரணமாக இருக்கலாம். தனிநபர் விசில்களுடன் குழுவுக்கென்றும் விசில்கள் இருந்தன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனி தர்களால் உயிரினங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை புரிந்து கொள்ளலாம். கடலில் உண்டாகும் இரைச்சல் மாசு ஒரு முக்கியமான பிரச்சினை. வாழ்நாள் முழுவதும் முகபாவனைகள் இல்லாம லிருந்தால் நண்பர்களை சேர்த்துக் கொள்வது, தீய தொடர்புகளிலிருந்து விலகி இருத்தல், சமூக ரீதியாக பயனுள்ளவராக இருப்பது என்று எப்படி வாழ முடியும் என்று கற்பனை செய்து பார்த்தால் டால்பின்களின் விசில் ஒலியை அவற்றின் பார்வையிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.