காக்கிச் சட்டைக்குள்
காலை ஒன்பது மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு ஈசிசேரில் அமர்ந்து அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தார் மாணிக்கம். எதிர்பாராதவிதமாக ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்னிக்குத்தான் ‘கிரிங்... கிரிங்’ என்று சிணுங்கியது தொலைபேசி. என்னமோ ஏதோவென்று பதறிய மாணிக்கம் தொலைபேசியை எடுத்து ‘ஹலோ!’ சொன்னார். “ஹலோ! அண்ணே! நான்தான், தங்கச்சி செல்லத்தாய் பேசுறேன். ‘அண்ணே! இன்னிக்கு உங்க மருமக மாலதி வயசுக்கு வந்துட்டா! அவள உக்கார வைக்கணும். நீங்க வந்தப்புறம் தான் எது ஒண்ணும் பண்ணணும் , நீங்க உடனே புறப்பட்டு வாங்க!? என்றாள் செல்லத்தாய்.
செல்லத்தாய்க்கு அண்ணன் மாணிக்கம்னா உயிர். சின்ன வயசிலேர்ந்தே அவளைத் தூக்கி வளர்த்தவராயிற்றே. வயசுக்கு வந்த மருமகள் மாலதி, அசப்பில அண்ணன் மாணிக்கம் மாதிரியே இருப்பாள்னு அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள் செல்லத்தாய். மாணிக்கம் கருப்புமில்லாமல் சிவப்புமில்லாமல் புதுநிறமாயிருப்பார். அடர்த்தியான முறுக்கிவிட்ட மீசை இருந்தாலும் இவர் ஒரு அப்பாவி. ஒரு சின்ன விசயமாக இருந்தாலும் ஒருவர்க்கு இரண்டு பேர்கிட்ட சந்தேகம் கேட்காமல் இருக்க மாட்டார். மாலதிக்கு மாமா மாணிக்கம்னா கொள்ளப்பிரியம். எப்போ போனாலும் மாணிக்கம் அவளுக்குனு தனியா தின்பண்டம் வாங்கிட்டுப் போவார். மாணிக்கம் உடனே புறப்பட்டார். நூறு நூறாக ஐநூறு ரூபாய் எடுத்துக்கொண்டார். கோமதிமுத்துபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூர் வழியாக சங்கரன்கோவில் பஸ் வரவேண்டிய நேரம். நான்காம் நம்பர் டவுன்பஸ் இதோ வந்துவிட்டது. 4 ஆம் நம்பர் டவுண் பஸ்ஸில் நெரிசலோட நெரிசலா ஏறிவிட்டார் மாணிக்கம். சரியாக ஆறு ரூபாய் மட்டும் சில்லரையாக இருந்தது. கரிவலம்வந்தநல்லூருக்கு ஐந்து ரூபாய் மட்டும் தான் டிக்கெட். நூறு ரூபாய மாத்தாம கரிவலம்வந்தநல்லூர் வந்து இறங்கி விட்டார். தங்கச்சி செல்லத்தாய் ஊர் மானூர் பக்கத்தில பார்வதியாபுரம். இராஜபாளையம் டூ திருநெல்வேலி பஸ்ஸில் மாணிக்கம் ஏற வேண்டும். 4 ஆம் நம்பர் டவுன் பஸ்ஸிலிருந்து கீழே தான் இறங்கி இருப்பார் மாணிக்கம் . உடனே அரசு பஸ் வந்தது. “ஏறுங்க!... ஏறுங்கய்யா! என்ன? கடைசில நிக்கிற ஆளு... உங்களுக்கு வேற தனியா சொல்லணுமாக்கும்!” என்று மாணிக்கத்தைப் பார்த்தார். கடைசி வரிசையில கடைசியா சீட்டு ஒண்ணு காலியா இருந்துச்சு. அந்த சீட்ல மாணிக்கம் ஐக்கியமானார். “பெருசு! எங்க போகணும்?” கண்டக்டர். “மானூர்!” நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தார் மாணிக்கம். மானூருக்கு இருபத்தஞ்சு ரூபாய். “இந்தாங்க டிக்கெட்!” “ஐயா! மீதி...?” “என்ன கொண்டுக்கிட்டு ஓடிரவா செய்வோம்?” மற்ற ஆளுகளுக்கு டிக்கெட் குடுத்திட்டு வர்றேன்”. “அப்படி வேணும்னா, கரெக்ட் சில்லரையைக் கொடுத்திருங்க! இந்தாங்க உங்க ரூபாய்” “இல்லையா! நீங்க குடுக்கும்போது குடுங்க.” “பெரிய வம்பாப் போச்சே! அடிக்க வர்றது மாதிரில்ல பேசுறார். மீதியும் குடுக்கல. டிக்கெட்டுக்குப் பின்னால் எழுதியும் தரல. மீதி கொடுத்துருவாரா?” மருகினார் மாணிக்கம். சிலர் மீதி சில்லரை கொடுக்காமலேயே இருந்துருவாங்களாம்ல. அப்பிடி இப்படி தேத்தி டிரைவரும் கண்டக்டரும் பிரிச்சுக்கிருவாங்கன்னு சொல்லிக்கிறாங்க! அதனால தான் டிக்கெட்ல பின்பக்கம் எழுதுறதில்லயோ” என்ற தப்பான கற்பிதங்கள். “என்னமோ நம்ம போதாத காலம்” மீதி எழுபத்தஞ்சு ரூபாய் ஞாபகம் வந்தவராக மாணிக்கம் கண் அயர்ந்து விட்டார். “மானூர் ! மானூர்!” மாணிக்கம் முழிக்கிறாப்ல இல்ல. கண்டக்டர் பக்கத்தில போயி தட்டி எழுப்பி, ‘பெரியவரே! மானூர் வந்திரிச்சு! எந்திரிங்க! இந்தாங்க மீதிச் சில்லரை எழுபத்தஞ்சு ரூபாய் . சரியா இருக்குதான்னு பாருங்க.” புன்முறுவலுடன் பார்த்தார் கண்டக்டர். “பெரியவரே! நீங்க நூறு ரூபாயக் கொடுக்கும் போது என்னன்ட சில்லரை இல்ல”. “மீதிச் சில்லரையை உங்ககிட்ட கொடுக்க வந்தப்போ, நீங்க நல்ல தூக்கத்தில இருந்தீங்க! தூக்கத்தை கெடுக்க வேண்டாமேன்னு தான் மானூர் வரையில விட்டுட்டேன்! மெதுவா எறங்குங்க!” கைத்தாங்கலாகப் பிடித்து இறங்க உதவினார் கண்டக்டர். இறங்கிப் போகும்போது நன்றிப்பெருக்கோடு கையெடுத்துக் கும்பிட்டார் மாணிக்கம். தொழிலாளியா இருக்குறவங்க, இந்த மாதிரி நேரத்தில மனிதநேயம் உள்ளவங்களா இருக்கனும். அப்போதான் தொழிலாளிகளுக்கும் , பொதுமக்களுக்கும் ஒரு உணர்வு வரும். அது உறவாவும் வளரும்”. மானூரில் இறங்கிய மாணிக்கம் மீண்டும் கண்டக்டரைப் பார்த்தார். காக்கிச் சட்டைக்குள் இப்படியும் ஒரு ‘மனித நேயமா?’ என்று எண்ணியவராக கால்கள் நடையைக் கட்டினாலும் மனசெல்லாம் கண்டக்டர் முகமே வந்து போனது.