tamilnadu

img

போராடிய மருத்துவர்களை மிரட்டும் மத்திய அரசு

புதுதில்லி,ஆக.4- மருத்துவக்கல்வியை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தினர்  கடந்த வியாழக்கிழமையன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத் துறை உத்தரவின் பேரில், மேற்குறிப்பிட்ட இரு மருத்துவமனை நிர்வாகங்களும் மருத்துவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தங்களது துறை சார்ந்த பணிகளுக்கு உடனடியாக திரும்ப வேண்டும். இல்லையெனில் பணியிடை நீக்கம், விடுதியிலிருந்து வெளியேற்றம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளது.

சப்தர்ஜங் மருத்துவமனை இயக்குநர் சுனில் குப்தா கூறுகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்குத் திரும்பவில்லையெனில்  அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த மிரட்டலுக்கு பணியாமல், போராட்டம் தொடரும் என்றும், இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.