tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 உயர்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

கல்லூரிகளை மூடி விட்டு உயர்கல்வி விரிவாக்கம்

image.png

உயர்கல்வி என்ற தலைப்பின்கீழ் இருக்கின்ற 9 முதல் 18 அத்தியாயங்கள் முழுமையும், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில் உயர்கல்வியின் விரிவாக்கம் குறித்த கவலை கொண்டதாகவே இருக்கின்றன. உயர்நிலைக் கல்வியில் தற்போது இருக்கின்ற மொத்த மாணவர் சேர்க்கையை 25.8 சதவீதத்தில் இருந்து 2035ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 50 சதவிகிதமாக இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களை உருவாக்க இந்த வரைவு முயல்கிறது. அணுகல் மற்றும் நிறுவன சேர்க்கை போன்றவற்றை அதிகரித்து “தற்போதைய மூன்றரை கோடி மாணவர்கள் என்பதில் இருந்து” மாணவர் எண்ணிக்கையை அதிக அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கமே இந்த முயற்சிக்குப் பின் இருப்பது தெரிய வருகிறது (அத்தியாயம் 9). எவ்வாறாயினும், இந்த இலக்கை அடைவதற்காக இந்த வரைவு பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் எதுவும், இதற்கு முன்பாக கொள்கைசார் சிந்தனைகளால் நிறுவப்பட்டிருக்கும் முன்மாதிரிகளுடன் எந்தவிதத்திலும் ஒத்திசைந்து போவதாக இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ‘உயர் கல்வி: விரிவாக்கம், உள்ளடக்கம், தரம் மற்றும் நிதி தொடர்பான சிக்கல்கள்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக் குழு 2008இல் வெளியிட்டதொரு அறிக்கையில், அதிகரிக்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கை குறித்த சவால்கள் இவ்வாறான முன்மாதிரிகளுடனான ஒத்திசைவுடனேயே விவாதிக்கப்பட்டிருந்தன. மாணவர் சேர்க்கையைப் பொறுத்த வரை, இரண்டு தனித்துவமான முறைகள் உள்ளதாக அப்போது முன்வைக்கப்பட்ட விவாதத்திற்குள், முதலாவதாக உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைத் தகுந்த அளவில் அதிகரிப்பது, இரண்டாவதாக உயர்கல்வி நிறுவனங்களுக்குள் வருகின்ற மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற இரண்டு கருத்துக்கள் இருந்தன. ஏற்கனவே சோதித்தறியப்பட்ட இந்த முறையை அடியோடு மறுத்து விட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை சரிபாதியாகக் குறைத்து விட்டு, ஒவ்வொரு நிறுவனத்திலும் அபத்தமான, அளவிற்கு அதிகமான மாணவர் சேர்க்கையை வலியுறுத்தும் வகையில் இப்போதைய தேசிய கல்விக் கொள்கை வரைவு எதிர்நிலை எடுக்கிறது.

image.png

2020க்குப் பிறகு பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்ட புதிய கல்லூரிகள் எதுவும் ஆரம்பிக்க அனுமதி தரப்படமாட்டாது. 2030க்குப் பிறகு பல்கலைக்கழகத்துடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகள் என்று எந்தக் கல்லூரியும் இருக்காது

image.png

2030ஆம் ஆண்டிற்குப் பிறகு அனைத்து கல்லூரிகளும் தன்னாட்சி பெற்றவையாகவே செயல்படும். 2032ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கல்லூரிகளுமே பட்டம் வழங்குகின்ற தகுதியுடன் செயல்படும் என்று பட்டம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அகற்றி விட்டு, கல்லூரிகளிடமே அதனைக் கொடுத்து விடுவதன் மூலம் மாணவர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற இந்தப் பரிந்துரை உயர்கல்வியின் ஒட்டுமொத்த சீரழிவிற்கே துணைபோவதாக இருக்கும்.

“நீண்ட காலப் போக்கில், அதாவது 2030ஆம் ஆண்டு வாக்கில், இந்திய உயர்கல்வி முறை என்பது மிகக் குறைந்த எண்ணிக்கையில் மூன்று வகையான உயர்கல்வி நிறுவனங்களாக ஒருங்கிணைக்கப்படும், இந்த நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் சராசரி அளவு இப்போதுள்ள சராசரியை விட மிக அதிக அளவில் இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், கல்வி நிறுவனங்களிடம் உள்ள வளங்களின் செயல்திறன், பலதரப்பட்ட தன்மை, தரம் மற்றும் மொத்த மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்” என்று பிரிவு 10.3 கூறுகிறது.

தற்போதைய புள்ளிவிவரங்கள் ஏறத்தாழ 40000 கல்லூரிகள், 800 பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஏறத்தாழ மூன்றரைக் கோடி மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருவதாகவும் தகவல்களைத் தருகின்றன. ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் சராசரி மாணவர் எண்ணிக்கை 750 முதல் 800 என்பதாக இருக்கிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை வரைவோ கல்லூரிகளில் சராசரியாக 2000 முதல் 5000 மாணவர்களும்,  பல்கலைக்கழகங்களில் சராசரியாக 5000 முதல் 25000 மாணவர்களும் பயிலலாம் என்று தெரிவிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயர்கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலிருந்து 50 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்த முடியும், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதே இந்த வரைவின் கருத்தில் இருக்கிறது. 

image.png

அறிக்கை சொல்லும் கணக்கின்படி பார்த்தால் ஒட்டு மொத்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 40800 என்பதிலிருந்து 7150 முதல் அதிகபட்சம் 12300 என்பதாகக் குறைக்கப்படுகிறது. சராசரி மாணவர் எண்ணிக்கையோ 750 முதல் 800 என்பதிலிருந்து 2000 முதல் 25000 வரை என்பதாக உயர்த்தப்படுகிறது.

2019 தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு

வகை

கல்வி நிறுவனம்

கல்வி நிறுவன எண்ணிக்கை

ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள்

ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

குறைந்த பட்சம்

அதிக பட்சம்

குறைந்த பட்சம்

அதிக பட்சம்

குறைந்த பட்சம்

அதிக பட்சம்

1

ஆய்வு பல்கலைக்கழகங்கள்

150

300

5 000

25 000

7 50 000

75 00 000

2

கற்பித்தல் பல்கலைக்கழகங்கள்

1 000

2000

5 000

25 000

50 00 000

5 00 00 000

3

கல்லூரிகள்

5 000

10 000

2 000

5 000

1 00 00 000

5 00 00 000

மொத்தம்

 

7150

12300

 

 

1 57 50 000

10 75 00 000

 

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மொத்த மாணவர் சேர்க்கையை உயர்த்தப் போவதாக மார்தட்டிக் கொள்ளும் இந்த வரைவறிக்கையில் உள்ள புள்ளி விவரங்கள், இந்த கணக்குகளை எழுதியவர்கள் பள்ளித் தேர்வில்கூட தேர்ச்சியடைய மாட்டார்கள் என்பதையே காட்டுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கையை மூன்றரைக் கோடியில் இருந்து ஏழு கோடி என்ற அளவிற்கு உயர்த்துவது என்ற ஒற்றை நோக்கத்துடன் தயாரிப்பு வேலைகளைச் செய்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த தகவல்களில் உயர்கல்வி பயிலப் போகும் குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி என்று வருகிறது. இப்போது பயின்று வரும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து போய் விடுகிறது. அதிகபட்சமாக மும்மடங்கு அதிகரிக்கிறது. எந்த கொள்கை மாற்றங்களும் அவை வெல்லப் போகின்றனவா என்பதை, அவற்றின் விளைவுகள் குறித்த குறைந்தபட்ச மதிப்பீடுகளே முன்னதாகச் சொல்லி விடும் தன்மை கொண்டவை. அந்த விதத்தில் பார்த்தால் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை அதலபாதாளம் சென்றடைகிறது. கல்வி இவ்வாறு மறுக்கப்படுமேயானால், அதனால் பாதிக்கபப்டப் போவது யார் என்பது அனைவரும் அறிந்ததாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீட்டில் உள்ள அதிகபட்ச மாணவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளலாம் என்றால், ஒவ்வொரு வகை கல்வி நிறுவனத்திலும் சேருகின்ற மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறைந்தபட்ச எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருப்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத எண்ணிக்கையாகவே இருக்கிறது.

image.png

மொத்த மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்டு, வாழ்நாள் முழுவதும் பயிலக் கூடிய வாய்ப்புகளை வழங்குவது போன்ற காரணங்களுக்காக, இந்த மூன்று வகையான உயர்கல்வி நிறுவனங்களும் திறந்த நிலை அல்லது தொலை நிலைக் கல்வியை வழங்கலாம் என்று வழங்குகின்ற பரிந்துரையின் அடிப்படையில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டும் எண்ணம் ஒருவேளை இந்தக் குழுவிடம் இருந்ததோ என்னவோ?

சுருக்கமாக மிகத் தெளிவாகச் சொல்வதென்றால், இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை நான்கில் ஒன்றாகக் குறைத்து விட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சொல்கிறது. இவ்வாறான வழியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை என்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது, நிலப்பகுதி சார்ந்த அணுகல் முறைகள், சமூக குறைபாடுகள், உள்ளூர் தேவை ஆகிய நடப்பில் உள்ள குறியீடுகளின் அடிப்படையிலான கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுச் சூழலை இது தவிர்த்து விடுகிறது. கல்லூரிகளை பெருமளவில் ஒன்றிணைப்பதன் மூலம் மிக அதிக அளவில் மாணவர்கள் எண்ணிக்கை விரிவாக்கம் என்ற இலக்கை அடைய முடியும் என்று கருதுவது - கல்விக் கொள்கையை வெறும் எண்கள் தொடர்பான விஷயமாகக் கற்பனை செய்வது கொள்வதாகவே இருக்கும்.  சிறிய உயர்கல்வி நிறுவனங்களை மொத்தமாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கே இது வழிவகுக்கும். தேசிய கல்விக் கொள்கை வரைவின் இந்த கணக்கை நம்பினாலும்கூட, ‘குறைவான கல்லூரிகள் - அதிகமான மாணவர்கள்’ எனும் இந்த முன்மாதிரி, எதிர்பார்த்திருக்கும் அளவைவிட பாதி அளவிற்கான விரிவாக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கக் கூடும்.

image.png

“சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பின்தங்கிய பின்னணி மற்றும் பகுதிகளிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் மற்றும் அணுகல்” (பக்கம் 204) தருவதன் மூலம், உயர்கல்வியை ஜனநாயகமயமாக்க முடியும் என்று கூறுகிற இந்த வரைவின் வாய்ஜாலம் ஒருபுறமிருக்க, உண்மையில் அதனை எவ்வாறு அடைவது என்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லாமல் அது குழம்பிப் போய் நிற்கிறது. அதிக மாணவர் சேர்க்கை, பன்முகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களை இணைப்பது என்பது, சமூக பாகுபாடுகளை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே இருக்கும். கல்லூரி வளாக அனுபவத்தையும், மக்கள் தொகையையும் பாதிக்கின்ற சமூக - உளவியல் காரணிகளைப் புறக்கணிக்கின்ற வகையில் இருக்கின்ற இந்த திட்டம், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை அவர்களின் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்திலிருந்து உடல் ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் அந்நியப்படுத்துவதாகவே இருக்கும். உயர்கல்வி நிறுவனங்களுக்குள் வெவ்வேறு விதமாக இருந்து வருகின்ற சாதி, வர்க்கம், பாலினம், மதம் சார்ந்த பாகுபாடுகள் குறித்து இந்த கொள்கை வரைவு வியக்கத்தக்க வகையில் அமைதியாக இருக்கின்றது. இவர்கள் அனைவரையும் கணிசமான அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் சேர்ப்பது குறித்து எந்தவொரு சாத்தியமான திட்டங்களும் இந்த வரைவில் இருக்கவில்லை. கல்வி நிறுவனங்களை அணுகுவதற்கான ஒரே அளவுகோலாக மொத்த மாணவர் சேர்க்கையைக் காட்டுகின்ற ஆர்வத்தில், எஸ்சி/எஸ்டி/ சிறுபான்மையினர், பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற இடைவிலகல் பிரச்சனை என்பது இந்த வரைவால் கண்டு கொள்ளப்படாமலேயே விடப்பட்டிருக்கிறது.  

image.png

உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூன்று வகை கல்வி நிறுவனங்களாக மட்டுமே இருக்குமாறு வகைப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு வகையான கல்வி நிறுவனம் தங்களுடைய செயல்பாடுகளின் திறனால் வேறு வகை கல்வி நிறுவனமாக மாறிக் கொள்ளலாம். ”அனைத்து பல்கலைக்கழகங்களும் வகை 1 அல்லது வகை 2 பல்கலைக்கழகங்களாக மாறலாம். இப்போது பல்கலைக்கழகங்களுடன் இணவிக்கப்பட்டிருக்கும் கல்லூரிகள், 2032ஆம் ஆண்டிற்குள் பட்டம் வழங்கக் கூடிய தன்னாட்சிக் கல்லூரிகளாகவோ அல்லது தாங்கள் இணவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்துடன் முழுமையாக தங்களை இணைத்துக் கொண்டோ அல்லது வகை 1 அல்லது வகை 2 பல்கலைக்கழகமாகவோ மாறிக் கொள்ளலாம்” என்று வரைவறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

image.png

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ”2032ஆம் ஆண்டிற்குள் மூன்றாவது வகை கல்வி நிறுவனங்களாக, அதாவது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாறி செயல்பட முடியாத கல்வி நிறுவனங்கள் பொது சேவை மையங்களாக மாற்றப்பட்டு பொது நூலகங்களாக அல்லது வயது வந்தோருக்கான கல்வி மையங்களாக அல்லது வாழ்க்கைத் தொழிற்கல்வி மையங்களாக மட்டுமே செயல்பட முடியும்” என்பதாக பத்து வருடங்களுக்கு முன்னராகவே பல கல்லூரிகள் மூடப்படப் போகின்ற அபாயத்தைக் காட்டி மிரட்டுகிறது நேர்நோக்கு கொண்டு கல்வியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதை விடுத்து, இந்த அளவிற்கு மிக மோசமாக எதிர்மறை நோக்குடனான பரிந்துரையை இந்த வரைவறிக்கை முன்வைப்பதன் மூலம் எந்தவிதமான மனப்பான்மையுடன் அதனை வடிவமைத்த குழு செயல்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதுமான அளவில் உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில், கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதில் படுதோல்வியுற்றிருக்கும் ஒரு நாட்டில், கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரம் என்பது மிகுந்த எச்சரிக்கையுடன், பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் என்று எளிதாக யாராலும் இனம் காணக்கூடிய கல்வி நிறுவனங்களால் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நடத்தப்படுகிற மோசடி சம்பவங்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைமையே இப்போது நிலவி வருகிறது. அவ்வாறான நிலையில், இது போன்ற மோசடி கல்வி நிறுவனங்களை நோக்கி அதிக பணம் செலவழித்து மாணவர்கள் படையெடுத்துச் செல்வதற்கு அரசு நிதி உதவி பெறுகின்ற கல்வி நிறுவனங்கள் போதுமான அளவில் இல்லாததே முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே போதிய காரணங்களின்றி, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக என்று கூறி கல்வி நிறுவனங்களை தன்னிச்சையாக மூடுவது என்பது மாணவர்கள் அணுகக்கூடிய வகையில் இருக்கின்ற கல்வியை அவர்களுக்கு கிடைக்காமல் செய்து விடுவது மட்டுமல்லாமல், இந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும், அலுவலர்களையும் இன்னல்களுக்குள்ளாக்குவதாகவே இருக்கும். இறுதியாகச் சொல்வதென்றால், கல்லூரிகளை மூடி விட்டு பொது நூலகம் ஆக்குவோம் என்ற பரிந்துரை வழங்குபவர்களே, வசதியான நூலகம் இல்லை என்ற அதே காரணத்திற்காக இப்போது உள்ள கல்லூரிகளை மூடி விடுவதற்கு துணை போனவர்களாகி விடுவார்கள் என்பதே நிச்சயம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்