tamilnadu

img

ஆண்டிபாடி கண்டறியும் ரேபிட் கருவி கண்டுபிடிப்பதில் ஐசிஎம்ஆர் வெற்றி

புதுதில்லி:
கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியான ஆண்டிபாடி உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ரேபிட் கிட்டை புனேவில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் இணைந்து வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன.

கொரோனா வைரஸைக் கண்டறிய சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் கருவிகள் குறித்து சர்ச்சை எழுந்ததால்  அந்தக் கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என ஐசிஎம்ஆர் கூறியதையடுத்து, லட்சக்கணக்கான ரேபிட் பரிசோதனைக் கருவிகள் சீனாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டில் ஆண்டிபாடியை கண்டறியும் கருவியை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய வைராலஜி நிறுவனமும்(என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து செயல்பட்டன.

இந்நிலையில், என்ஐவி மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து உள்நாட்டிலேயே முற்றிலும் ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியை (ஆண்டிபாடி கண்டறிதல்) கண்டுபிடித்துள்ளன என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 

 “புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம், கொரோனா தொற்றின் ஆண்டிபாடி கண்டறிதலுக்கான சார்ஸ்-கோவிட்-2 மனித ஐஜிஜி (IgG ELISA) சோதனைக் கருவியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
சார்ஸ்-கோவிட்-2 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மக்கள்தொகையின் விகிதத்தை கண்காணிப்பதில் இந்த வலுவான சோதனை முக்கியப் பங்கு வகிக்கும்”இந்த கிட் மும்பையில் இரண்டு தளங்களில் சரிபார்க்கப்பட்டது, அதிக உணர்திறன் மற்றும் துல்லியம் கொண்டது. இரண்டரை மணி நேரத்தில்  90 மாதிரிகளை ஒன்றாகச் சோதிக்கும் தன்மையை இது கொண்டுள்ளது. இதன் மூலம் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் விரைவாகச் செயல்பட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். மாவட்ட அளவில் கூட  எலிசா அடிப்படையிலான சோதனை சாத்தியமாகும்.  ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

;