tamilnadu

img

மோடி அரசை வீழ்த்துவது அவசர அவசியம் ஏன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

கடந்த ஐந்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் கொடூரமான பேரழிவினை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமானால், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலமே கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும். ஏனெனில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் நம் நாட்டின் மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பினையே அழித்து ஒழித்திடும் விதத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயை மிகவும் கூர்மையான முறையில் விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் கீழான அமைப்புகள் மீதான தாக்குதல்களையும் சற்றும் நாணமற்ற முறையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பாஜக மேலும் மத்தியில் ஆட்சியில் தொடர்வதென்பது, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களை அரித்து வீழ்த்திடும். எனவே, வாக்காளர்கள் முன் உள்ள பிரதான பணி என்பது, கேடுகெட்ட பாஜக அரசாங்கத்தைத் தூக்கி எறிவது என்பதேயாகும். இதற்குப் பதிலாக அந்த இடத்தில் நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கக்கூடிய விதத்தில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமர்த்திடுவதற்கு ஏற்ற விதத்தில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். இதற்கு ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் தற்போதையக் கொள்கைகளில் இருந்து மாறி, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றிடும் செயல்திட்டம் அவசியம். அத்தகைய கொள்கைகளைப் பின்பற்றுமாறு ஆட்சியாளர்களை நிர்ப்பந்தப்படுத்திட, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


 ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

நாடாளுமன்றம் 


மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல்பாடு மிகக் கடுமையாக குறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இவை செம்மையாக நடைபெறும்போதுதான், மக்கள், நம் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையின் துவக்கத்தில் சொல்லியிருப்பதைப்போல, ‘மக்களாகிய நாம்’ என்பதன்கீழ் மக்கள் தங்கள் இறையாண்மையை நிறைவேற்றிட முடியும். இது பாஜகவின் ஆட்சியின்கீழ் நாடாளுமன்றத்தை முறையாக நடத்தாததன் காரணமாக, அரித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது.


மாநிலங்களவையின் சுயேச்சையான செயல்பாடும் வீழ்த்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே, வழக்கமாக மாநிலங்களவையில் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டிய பல சட்டமுன்வடிவுகளையும்கூட, நிதிச் சட்டமுன்வடிவுகள் என்று கூறி, மக்களவையில் மட்டுமே வைத்து நிறைவேற்றிக் கொண்டது. அதேபோன்று சட்டமுன்வடிவுகளை மேற்பார்வை செய்து இறுதிப்படுத்தும் பொறுப்புகளைச் செய்து வந்த நாடாளுமன்றக் குழுக்களின் வேலைகளையும் முழுமையாக அரித்து வீழ்த்தியுள்ளது.


நீதித்துறை

நீதித்துறையின் செயல்பாடுகளிலும் அத்துமீறி தலையிடுவதன் மூலம் மக்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. இது அரசமைப்புச்சட்டத்தினை உயர்த்திப்பிடித்து மிகவும் நியாயமான முறையில் மக்களுக்கு நீதி வழங்கி வந்த நீதிபதிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


சிபிஐ 


நாட்டின் முதன்மையானப் புலனாய்வு நிறுவனமாக விளங்கும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தையும் (சிபிஐ) தரமற்ற ஒன்றாக மாற்றி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.


ஆர்பிஐ 


இந்தியாவின் பணப் புழக்கத்தை முறைப்படுத்தும் சுயேச்சையான அதிகாரக்குழுமமான இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டையும் அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனுடைய ரிசர்வ் தொகையை, அரசாங்கத்தின் செலவினங்களுக்காகப் பறித்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது.


அடிப்படை உரிமைகள் பறிப்பு


தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரும் தங்கள் குறைகளைக் களைந்திடக்கோரி போராடினால், அவர்கள் போராடுவதற்கான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்களின் அந்தரங்கம் தொடர்பான அடிப்படை உரிமைமீதும் தலையிட்டிருக்கிறது.


அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள பேச்சுரிமை மீது பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. அரசாங்கத்தை விமர்சித்திடும் ஊடகங்கள் மீதும், சமூக வலைத் தளங்களில் அரசாங்கத்தையும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை விமர்சித்திடும் விமர்சகர்கள் மீதும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி தாக்குதல் தொடுத்து வருகிறது. 


தலித்துகள், பழங்குடியினர் போன்றோருக்கு ஆதரவாக அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்திடும் அறிவுஜீவிகளை மிரட்டி, பணிய வைத்திட வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளை ஏவிக் கொண்டிருக்கிறது.


ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களை படுகொலை செய்யும் அளவிற்கு இவர்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, டாக்டர் எம்.எம். கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் போன்று பகுத்தறிவாளர்களும், அறிவுஜீவிகளும் கொல்லப்பட்டிருப்பது தேசத்தையே உலுக்கியது.  


மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள்


பாஜக ஆட்சியாளர்கள், கோவில் கட்டுதல், பொதுஇடங்களின் முஸ்லிம் பெயர்களை மாற்றி அமைத்தல் என மூர்க்கத்தனமான முறையில் மதவெறி நஞ்சைக்கக்குவதன் மூலமாக முஸ்லிம்கள் மற்றும் சிறு

பான்மையினரைக் குறிவைத்து வெறுப்பு மற்றும் வன்முறைச் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பசுப்பாதுகாப்பு என்ற பெயரிலும், கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரிலும் குண்டர்படைகளை ஊட்டி வளர்த்து வருகின்றார்கள். தலித்துகள் மற்றும் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பது, அவர்கள்மீது வன்முறை வெறியாட்டங்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை எவ்விதமான தங்குதடையுமின்றி இந்த கூலிப்படைகள் செயல்படுத்தி வருகின்றன. 


காவியின் பிடியில் இந்தியக் கல்வி

ஆர்எஸ்எஸ் பேர்வழிகள், இந்தியக் கல்வி அமைப்பு முறையை காவிமயப்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில், அனைத்துப் பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கலாச்சார அமைப்புகள் முதலானவற்றின் உயர்பதவிகளில் எவ்வித நாணமுமின்றி மூர்க்கத்தனமான முறையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


அவர்கள் பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களை அனைத்து மட்டங்களிலும் மாற்றி அமைத்திடும் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பள்ளி மாணவர்களின் மத்தியில் எடுத்துச்செல்லும் விதத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்து வருகின்றனர்.


நாசகரப் பொருளாதாரக் கொள்கைகள்


பாஜக ஆட்சியில் பொருளாதாரத்தின் மீதான ஒவ்வொரு நடவடிக்கையும் அந்நியக் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டக் கூடியவிதத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பிரதானமான பொதுச் சொத்துக்கள் தங்களுக்கு வேண்டிய அந்நிய மற்றும் இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் தாரைவார்க்கப்பட்டிருக்கின்றன.


ரபேல் ஊழலில் பிரதிபலிப்பதைப்போல, எவ்விதத் தயக்கமுமின்றி, தங்களுடையக் கூட்டுக்களவாணி முதலாளிகளை ஊட்டி வளர்த்து வருகின்றார்கள். நாட்டிலுள்ள விமான நிலையங்களையும், நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதல் மின்உற்பத்தித் துறையையும் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில்கூட தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளியான அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக முன்பிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டார்கள். இத்தகைய கூட்டுக் களவாணிகள் தாங்கள் கொள்ளையடித்த தொகையில் ஒருபகுதியைத் தாங்கள் அறுவடை செய்வதற்கு வழிசெய்யும் விதத்தில், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கும் விதமாக - (பாஜகவுக்கு) ‘தேர்தல் நிதி பத்திரங்கள்’ அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.


இவ்வாறு கூட்டுக் களவாணி முதலாளிகள் கொள்ளையடித்த தொகை 11 லட்சம் கோடி ரூபாய் மற்றும் வங்கிகளிடமிருந்து பெற்றுத் திருப்பிச் செலுத்தாத வராக் கடன்களும் ஆகும்.

பாஜக ஆட்சியாளர்கள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலமாக ரொக்கப் பரிவர்த்தனையை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்துவந்த கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்தனர்.

நடைமுறையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்துவந்த குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் காரணமாகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. 


முத்ரா கடன் திட்டத்தின்கீழ் கடன் வாங்கியவர்களில், வாங்கிய கடனைச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை, 2017-18இலிருந்து, 2018-19வரை முதல் ஒன்பது மாதங்களில் 53 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.  


மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு 


பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்த உணவு தானியங்கள் மறுக்கப்பட்டுள்ளன அல்லது மிகப்பெரிய அளவில் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் கிராமப்புற உழைப்பாளி மக்கள் மேற்கொண்டுவந்த வேலைநாட்களும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளன.


நாட்டில் விவசாய நெருக்கடி ஆழமாகியிருப்பதன் காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பதும் அதிகரித்திருக்கிறது.


கிராமப்புற மக்களின் வாழ்க்கை இந்த அளவிற்கு முன்னெப்போதும் மோசமாக இருந்ததில்லை. கிராமப்புற மக்களின் உண்மை ஊதியங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.


மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கையின்படி, 2018 அக்டோபர் – டிசம்பருக்கான காலாண்டில் விவசாய வருமான வளர்ச்சி என்பது வெறும் 2.67 சதவீதமாகும். இது கடந்த 14 ஆண்டுகாலத்தில் மிகமிகக் குறைந்த அளவாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி விவசாயத் துறையில் அளிக்கப்பட்டு திரும்பிவராத கடன்களின் அளவு 2017 செப்டம்பரில் 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2018 செப்டம்பரில் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. விவசாய நெருக்கடி மிகவும் ஆழமாக இருப்பதன் காரணமாகத்தான் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.


வேலையின்மை


கடந்த சில ஆண்டுகளாகவே வேலைவாய்ப்புகள் மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்திருப்பதன் காரணமாக, நம் இளைஞர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள். மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் ஒவ்வோராண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தார். அதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் பத்து கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், எதார்த்த நிலையோ, வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் (தேசிய மாதிரி சர்வே ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி) 6.1 சதவீத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. (இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் அறிக்கையின்படி,) 2018இல் 5.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2019 பிப்ரவரியில் 7.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கிராமப்புற இந்தியாவின் நிலைமையோ இதைவிட மோசமாகும். 


தேசிய மாதிரி சர்வேயின்படி, 2011-12இலிருந்து 2017-18 வரையிலும் வேலையிழந்துள்ள கேசுவல் (தினக்கூலி) தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.2 கோடியாகும். இவ்வாறு கேசுவல் தொழிலாளர்களையும் விவசாயத்தையும் சார்ந்திருந்தவர்களுக்கு வேலையில்லாததன் காரணமாக, 1.5 கோடி குடும்பங்களுக்கும் மேல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.


தலித் - பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு


நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக குஜராத் மற்றும் முந்தைய பாஜக ஆளும் மாநிலங்களாக இருந்த மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன.


பழங்குடியினரில் பெரும்பாலானவர்களுக்கு வன உரிமைச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிலப்பட்டாக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.


பாஜக ஆட்சியாளர்களால் ‘குஜராத் மாடல்‘ என்று பீற்றிக்கொள்ளப்படுகின்ற குஜராத் மாநிலத்தில்தான் இந்தக் கொடுமைகள் அதிகமாகும். (குஜராத் சட்டமன்ற அவைக்குறிப்புகளின்படி) கடந்த ஐந்தாண்டுகளில், இங்கே தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் முறையே 32 சதவீதமாகவும், 55 சதவீதமாகவும் அதிகரித்திருக்கின்றன.



பெண்களுக்கு எதிரான வன்முறை - வெறியாட்டங்கள் அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும் அதிகரித்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்தில் நான்கு பாலியல் வன்புணர்வுக் கொடுமைகள் நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை - வெறியாட்டங்கள் அதிகரித்து வந்ததன் காரணமாக ஆட்சியாளர்

கள் இது தொடர்பாக அரசின் தேசியக் குற்றப் பதிவேட்டு மையம் (National Crime Records Bureau) சார்பில் வெளியிடப்பட்டு வந்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகக் கொடூரமான முறையில் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் இளம் சிறுமிகள் கொலை செய்யப்படுதல் போன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பது என்பது நம் சமூகம் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் சீரழிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


பணம் படைத்தவர்களிடம் செல்வக் குவிப்பு

கடந்த ஐந்தாண்டுகளில், நம் நாட்டின் செல்வ வளத்தில் வெறும் 1 சதவீதப் பங்கு, 2014இல் நம் மக்கள்தொகையில் 49 சதவீதத்தினரிடம் இருந்தது. அது இப்போது 2018இல் 73 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், அரசாங்கம் வரிகளைக் குறைத்திட மறுப்பதன் காரணமாகவும் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.


கூட்டாட்சி கட்டமைப்பின் மீது தாக்குதல்கள்

மத்திய மாநில உறவுகள் மிகவும் கூர்மையானமுறையில் சீர்கேடு அடைந்திருக்கின்றன. ஜிஎஸ்டி அமலாக்கம் மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்கு இருந்த உரிமைகளை மறுதலித்திருக்கிறது.

திட்டக் கமிஷன் ஒழித்துக்கட்டப்பட்டதானது, மாநிலங்கள் தங்கள் பொருளாதாரத் திட்டங்களையும், குறிக்கோள்களையும் கூறுவதற்கு இருந்த வாய்ப்பினை இல்லாததாக்கிவிட்டது.

மோடி அரசாங்கம், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி பாஜக அல்லாத அரசாங்கங்கள் கவிழ்க்கப்படும் என்று தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சமச்சீரற்ற முறையில் வரி வருவாய்கள் பிரித்து ஒதுக்கப்பட்டுவந்ததையும் பார்த்தோம்.


தேசப் பாதுகாப்பு

மோடி அரசாங்கத்தின் ஜம்மு-காஷ்மீர் கொள்கை காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்தில் பேரழிவினை ஏற்படுத்தியி ருக்கிறது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. 2009-14க்கும் 2014-19க்கும் இடையே பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை 109இலிருந்து 626ஆக அதிகரித்திருக்கிறது. பாதுகாப்புப் படையினர் பலியாகியிருப்பதென்பதும் 139இலிருந்து 483ஆக அதிகரித்திருக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் 12இலிருந்து 210ஆக உயர்ந்திருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் 563-இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவது என்பது அச்சந்தரும் வகையில் உயர்ந்திருக்கிறது. அத்தகைய இளைஞர்களை வென்றெடுக்க எந்த முயற்சியும் செய்யாமல், கொல்வது என்பது 2014இல் 16ஆக இருந்தது, 2018இல் 191ஆக உயர்ந்திருக்கிறது.

பாஜக அரசாங்கம் காஷ்மீர் மக்களுக்கு, காஷ்மீரில் இயங்கும் அனைத்துத்தரப்பினருடனும் அரசியல் பேச்சுவார்த்தை நடத்திடுவோம் என்றும், நம்பிக்கை விதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது.

ஊரி என்னும் இடத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ‘துல்லியத் தாக்குதல்கள்’ எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று கூறப்பட்டது. ஆனால் அது படுதோல்வியடைந்து, புல்வாமா தாக்குதல் வரைக்கும் இட்டுச் சென்றுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப்பின்னர் பாகிஸ்தானின் உட்பகுதியில் பாலக்கோடு என்னுமிடத்தில் இந்திய விமானப் படையினர் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். எனினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. மேலும் அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதத்தினை எதிர்த்திட நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கையில், ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் மட்டும் இப்பிரச்சனையைத் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.  


அயல்துறைக் கொள்கை


இந்தியாவின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை கைவிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிகளுக்கு பொருந்தும் விதத்தில் இந்தியாவின் அயல்துறைக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளியாகத் தன்னை தாழ்த்திக் கொண்டிருக்கிறது.


நம் அண்டை நாட்டவர்கள் அனைவருடனும் இருந்த நட்புறவு மிகவும் மோசமான முறையில் சீர்கேடு அடைந்திருக்கிறது.


அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ராணுவரீதியான உறவுகள் ஆழமாகி இருக்கின்றன.


அணிசேரா இயக்கத்தின் தலைவனாக இருந்த இந்தியா இன்றையதினம் நடைமுறையில் அதனை முழுமையாகக் கைவிட்டுவிட்டது.


ராணுவத் தலையீடு உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா காலங்காலமாக ஒருமைப்பாட்டைத் தெரிவித்து வந்ததுடன் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அத்தகைய நிலை கைவிடப்பட்டுவிட்டது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு வெனிசுலாவாகும்.  

இந்தியாவின் ராணுவத்தளங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கு திறந்துவிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய ராணுவக் கூட்டாளியாகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, ஒட்டுமொத்த தேசத்திற்கும் துரோகம் இழைத்து விட்டதற்குக் கணக்குத் தீர்க்கக்கூடிய விதத்தில் வரவிருக்கும் பொதுத்தேர்தலின் முடிவுகள் அமைந்திட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் குடியரசைப் பாதுகாப்பதற்காக, அதனை மேலும் வலுப்படுத்தும் விதத்தில், மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான கொள்கைத் திசைவழியை உருவாக்கும் விதத்தில், தேர்தல் முடிவுகள் அமைந்திட வேண்டும். இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,


 (அ) பாஜக மற்றும் அதன் கூட்டணியை முறியடித்திட வேண்டும்,


(ஆ) மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை அதிகரித்திட வேண்டும்,


(இ) மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற அணி வேட்பாளர்களைத் தேர்வு செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.


தமிழில்: ச.வீரமணி













;