tamilnadu

மதுக்கடைக்கு கான்கிரீட் கூரை அமைக்க ஊழியர்களை நிர்பந்திப்பதா சிஐடியு கண்டனம்

உதகை, மே 19-டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கான்கிரீட் கூரை அமைக்க ஊழியர்களை நிர்பந்திப்பதைக் கண்டித்து சிஐடியு சார்பில் நீலகிரி மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தனர்.தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் கட்டிடங்களில் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் வணிக கட்டிடங்களாக இல்லாமல், குடியிருப்பு கட்டிடங்களாகவே உள்ளாட்சி அமைப்புகளில் பதியப்பட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் வணிக கட்டிட அனுமதி பெறாமல் உள்ள கடைகளை மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் முறையாக கட்டிடஅனுமதி பெறாமல் மதுபான கடைகளை நடத்தி வருகிறது. கட்டிட உரிமையாளரிடம் வணிக கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்காமல் ஊழியர்களை நிர்பந்தம் செய்கிறது.நீலகிரி மாவட்டத்தில் தகரம் மற்றும் தகரத்துடன் கூடிய ஓடுகள் உள்ள கட்டிடங்களில் மதுபான கடைகளும் இயங்கி வருகின்றன. வாடகை ஒப்பந்தத்தில் கட்டிடத்தின் வரைபடம், வணிக அனுமதி உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு கல்நார், தகடு, தகரத்துடன் ஓடுகள் கொண்ட கட்டிடங்களில் மதுக்கடை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக நீலகிரியில் 133 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. தற்சமயம் 58 கடைகள் மட்டும் செயல்படுகிறது.இந்நிலையில் கடை ஊழியர்களிடம் கான்கிரீட் கூரைகள் உடனடியாக அமைக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அவசரம் காட்டுகிறது. வாடகை பெறும் கடை உரிமையாளர்களை பொறுப்பு ஆக்காமல், கடையை மூடி விடுவோம் என ஊழியர்களிடம் பணி பயத்தை உருவாக்கி மிரட்டி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடை ஊழியர்கள் கான்கிரீட் கூரைகள் அமைக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.ஆல்தொரை கொடுத்த மனுவில் கோரியுள்ளார்.