tamilnadu

img

கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை முயற்சி நான்குபேர் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பறக்கை சுவிசேஷபுரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (45). கொத்தனார். இவரது மனைவி ஜேசு ரோஸ்லெட் (40). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சிம்சோன் தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் பழவூரில்  வசித்து வந்தார்.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சிம்சோன் சொந்த ஊருக்கு வந்தார். இவரது மகன்களும் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர். சிம்சோனுக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.\

இந்நிலையில் ஞாயிறன்று இரவு கணவன்-மனைவி ஒரு அறையிலும் மகன்கள் இருவரும் வீட்டின் மற்றொரு அறையிலும் தூங்கி கொண்டி ருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிம்சோன் அறையின் கதவை உடைத்து பார்த்த போது கட்டிலில் தம்பதியர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடியதை கண்டனர். பக்கத்தில் ஒரு கடிதமும் இருந்தது.

அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விசாரணையில் தம்பதியர் இருவரும் வாழைபழத்தில் விஷத்தை வைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இது சம்பவம் தொடர்பாக சிம்சோனின் மகன் அஜித் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,சுசீந்திரம் வண்டிகுடியிருப்பை சேர்ந்த சேகர் (30), சதீஷ் 
(38), நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ஜெயராஜ் (28), வடக்கன்குளத்தை சேர்ந்த அருள்ஜோதி (26) ஆகிய 4 பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிம்சோன் சீட்டு பணம் வாங்கிய வகையில் சேகர், சதீஷூக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும் ஜெயராஜூக்கு ரூபாய் 50 ஆயிரமும் அருள்ஜோதிக்கு ரூபாய் 2 லட்சமும் கடன் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் இந்த பணத்தை உடனே திருப்பி செலுத்த வேண்டும் என தினமும் தகராறு செய்த 4 பேரும் பணத்தை தராவிட்டால் மகன்களை கடத்துவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

;