tamilnadu

கந்துவட்டி கடன் கொடுமை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி தந்தை, குழந்தை உயிரிழப்பு; உயிர் தப்பிய தாய்க்கு சிகிச்சை

திருப்பூர், ஏப். 25 -திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு அருகே கந்துவட்டிக் கடன் கொடுமை தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றசம்பவத்தில் தந்தையும், குழந்தையும் உயிரிழந்தனர். தாய் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி தவமணி. இவர்களது மகள் மோனிகா (3).இந்த குடும்பத்தார் அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தனர். சதீஷ்குமார் கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் இருந்தபோது கந்து வட்டிக்குப் பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனைத் திருப்பித் தர கந்துவட்டிகாரர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். வியாழனன்று தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை கணவன், மனைவி இருவரும் விழுங்கியுள்ளனர். அத்துடன் 3 வயது குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து, இவர்களும் தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளனர். இதில் மோனிகாவும், தந்தை சதீஷ்குமாரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமைமருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்தஅவிநாசிபாளையம் போலிசார் சதீஷ்குமார், மோனிகா சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சதீஷ்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.