tamilnadu

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

சீர்காழி, மே 26-நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இந்த காலத்தில் மீனவர்கள் படகு, வலைகளை சரி செய்யும்  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவியாக அவர்களின் குடும்பங்களுக்கு தற்பொழுது ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் 60 நாட்களுக்கு குடும்பச் செலவிற்கு ரூ.5 ஆயிரம் போதுமானதாக இல்லை. இந்த குறைந்தபட்ச நிதியை கொண்டே 60 நாட்களுக்கு குடும்பம் நடத்த வேண்டும். இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்கினால் குடும்பச் செலவிற்கு ஓரளவிற்கு பயனுள்ளதாக அமையும் என மீனவர்கள் கூறினர்.  இது குறித்து பழையாறு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்னையா கூறுகையில், பழையாறு கிராமத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1800 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் தடைக்காலம் ஆரம்பித்த ஒரு மாத காலத்திற்குள் நிவாரண நிதி வழங்கப்படும். ஆனால் தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருந்ததால் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் இந்த ரூ.5 ஆயிரம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. எனவே தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரத்தை உயர்த்தி ரூ.15 ஆயிரமாக வழங்கவும், இந்த நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

;