தஞ்சாவூர், ஜூலை 15- தஞ்சை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசைப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்ல முடியாததால், வெள்ளிக்கிழமை அன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜூதீன் தமிழக முதலமைச்சர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அம்மனுவில், “தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் சனி, திங்கள், புதன் ஆகிய மூன்று நாட்கள் கடலுக்குச் சென்று மறுநாள் காலை கரை திரும்ப வேண்டும். நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை கடலுக்குச் சென்று மறுநாள் கரை திரும்ப வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூலை மாதத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு அறிவித்துள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே தொழில் செய்ய முடிகிறது. எனவே விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை தொழிலுக்குச் சென்று சனிக்கிழமை காலை படகுகள் கரை திரும்புவதற்கு அனுமதி தர வேண்டும்” என கூறியுள்ளனர்.