சிறுவத்தைகளில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென கடல் தொழிலாளர் சங்க இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கொரானா வைரஸ் பாதிப்பால் ஒட்டு மொத்தமாக மீனவர்கள் கடலுக்கே செல்லக் கூடாது என்பதோடு மீன் விற்பனைக்கு தடை விதிப்பது என்ற இராமநாதபுரம் மாவட் மீன்வளத்துறையின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முதல் ஏர்வாடி வரையிலான கடல் பகுதியில் சிறு வத்தைகளில் குறைந்தபட்சம் ஒருவர் அதிகபட்சம் இருவர் மட்டுமே செல்லக்கூடிய வத்தைகளில் கூட மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மீன் மார்க்கெட்டில் சிறுமீன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அந்தந்த பகுதி ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகமே மீன் விற்பனையை ஒழுங்குபடுத்தி விலை நிர்ணயம் செய்து சில்லறை விற்பனையை அனுமதிக்க வேண்டும். மீன்ஏலம் விடுவதை தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து மொத்தமாக கொள்முதல் செய்ய முயலும்போது தங்களுக்கு மீன் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றத்தில் மக்கள் முண்டியடித்து வாங்க முற்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் கூட்ட நெருக்கடியும் ஏற்படுகிறது. இது கொரானா வைரஸ் தடுப்புக்காக அரசு எடுத்து வரும் முயற்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஒட்டு மொத்தமாக மீனவர்கள் கடலுக்கே செல்ல கூடாது என்பதோடு மீன் விற்பனைக்கு தடை விதிப்பதும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
கொரோனா சம்மந்தமான அரசின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தில் மீன் விற்பனைக்கு தடையில்லை என அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாறாக இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு தொழில் மீனவர்கள் கூட கடலுக்கு செல்ல கூடாதென மாவட்ட மீன்வளத்துறை அனுமதிக்க மறுத்து வருகிறது.
இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு சிறு தொழில் மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மீனவர்களின் கஷ்டத்தைப் போக்க ஒவ்வொரு மீனவர் குடும்பத் திற்கும் குறைந்த பட்சம் 10 ஆயிரம் குடும்பப் பாதுகாப்பு நிதியாக வழங்கவேண்டும்.