tamilnadu

img

மறுப்பவர்களாலும், வெறுப்பவர்களாலும் கூட மறக்கப்பட முடியாதவர் தந்தை பெரியார் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

துக்ளக் பொன்விழாவில் நண்பர் ரஜினிகாந்த் பேசி யதைத் தொடர்ந்து தமிழகத்தில் தந்தை பெரியார் குறித்த சர்ச்சை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர்தான் பெரியார். ஆனால் தற்போது 1971 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு நண்பர் ரஜினிகாந்த் பேசியுள்ளதன் மூலம், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை குறித்த விவாதம் முன்னுக்கு வந்துள்ளது. இந்த பேச்சு மூலம் நண்பர் ரஜினிகாந்த் யாருக்கு உதவி செய்ய விரும்புகிறார் அல்லது தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை முன்மொழிகிறார், இதன் பின்னால் இருந்து அவரை இயக்குவது யார்?  என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.  தந்தை பெரியார் குறித்த மதிப்பீட்டை அவர் ஒரு நாத்திகர் என்ற அளவுகோலை மட்டும் வைத்துக் கொண்டு செய்வது பொருத்தமல்ல. ஒருவர் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பது அல்லது கடவுள் மறுப்பாளராக இருப்பது என்பது அவரவருடைய சொந்த விருப்பம். ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்புகிறவர் அல்லது மதத்தைச் சார்ந்த வர் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை கடவுளை நம்பாதவர் தன்னுடைய கருத்தை முன்வைக்க வும் உண்டு. நம்முடைய இந்திய அரசியல் சாசனம் இதற்கான உரிமையை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது. 

பெரியார் -  கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல!

தந்தை பெரியார்தான் தமிழகத்தின் முதல் கடவுள் மறுப்பாளர் என்று கூற முடியாது. கடவுள் இருக்கிறார் என்ற கருத்து, எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கடவுள் இல்லை என்ற கருத்தும் உருவாகிவிட்டது. இந்த இரு சாராருக்குமான கருத்து மோதல்கள் காலம் காலமாக நடந்து வருகிறது. தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் ஒரு நாத்திகர் மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் தொண்டை முழுமை யாக ஆய்வு செய்யும் போதுதான் அவர் குறித்த ஒரு முழு மையான புரிதலுக்கு வர முடியும். 

பெரியார் ஈ.வெ.ரா. ஈரோட்டில் ஒரு வசதிமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையார் வெங்கட்ட நாயக்கர் புகழ்மிக்க வணிகராக திகழ்ந்தவர். இந்தக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ரா.வும் துவக்கத்தில் தந்தையின் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்.  இளம்வயதிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அன்றைக்கு விடுதலைப் போராட்டத் திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறார். 1919 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த அவர், பிரிட்டிஷ் ஆட்சி யால் கொண்டு வரப்பட்ட கொடூரமான ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றவை விடுதலைப் போராட்டத்தில் தாம் ஈடுபடுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என்கிறார். ராஜாஜி, டாக்டர் வரதராஜூலு நாயுடு ஆகியோரின் தொடர்பால், காங்கிரஸ் மீது எனக்கு ஒருவிதமான கவர்ச்சி இருந்து வந்தது என்கிறார்.

தீவிர காங்கிரஸ் ஊழியர்

காங்கிரசில் சேருவதற்கு முன்பே ஈரோடு நகர சபை தலைவராக பெரியார் பணியாற்றியுள்ளார். அவரது பத விக்காலத்தில்தான் முதன் முதலாக ஈரோட்டில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அந்தப் பதவியை தூக்கி எறிந்து விட்டு, ஆங்கிலேய அரசு தரவிருந்த ராவ்பகதூர் பட்டத்தை யும் புறக்கணித்துவிட்டுத்தான் காங்கிரசில் பெரியார் சேர்ந்தார்.  கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்திலிருந்து விலகி, தீவிர காங்கிரஸ் ஊழியரானார். தலையிலே கதர் துணியை சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றார். காந்தியடிகள் மது ஒழிப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தபோது, தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கள்ளுக்கடை மறியலில் பங்கேற்று சிறை சென்றார். தன்னுடைய மனைவி மற்றும் சகோதரியையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். கள்ளுக்கடை மறியலை கைவிடுமாறு கேட்டபோது, காந்தியடிகள் ‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களை கேட்க வேண்டும்’ என்று பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோரைக் குறிப்பிட்டு கூறினார். 

1924 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில்தான் இன்றைய கேரளத்தில் உள்ள வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஈழவர் போன்ற பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் எதிராக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொடு மையான தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். பெரியாரின் இந்தப் போராட்டத்தை காந்தி யடிகள், ராஜாஜி போன்றவர்கள் கூட ஆதரிக்க மறுத்தபோ தும் அவர் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக, அடுத்த டுத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.  பெரியார் நடத்திய இந்தப் போராட்டம் சவுதார் பொதுக்குளப் போராட்டத்தை நடத்துவதற்கு தனக்கு உத்வேகமாக இருந்தது என்று பின்னாளில் அம்பேத்கர் குறிப்பிட்டார். 

சேரன்மாதேவி  குருகுலப் பிரச்சனை

1924 ஆம் ஆண்டு சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியோடு தேசபக்தர் வ.வே.சு. அய்யர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் நடத்தி வந்த குருகுலத்தில் பிராமண பிள்ளைகளுக்கு தனிப் பந்தியும், பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு தனிப் பந்தியும் நடத்தப்பட்டு வந்தது. இந்த குருகுலத்தில் படித்து வந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனுக்கும் தனிப்  பந்தியில் சாப்பாடு போடப்பட்டது. பிராமணப் பிள்ளைக ளுக்கும் மற்றவர்களுக்கும் தண்ணீர் அருந்த தனிப் பானை இருந்தது. காந்திய முறைப்படி நடத்தப்பட்டு வரும் குரு குலத்தில் இரண்டு தனிப் பானை, தனிப் பந்தி இருப்பதை ஏற்க முடியாது என்று பெரியார் போர்க் கொடி உயர்த்தினார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. அதிலும், பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. காந்தி வரை இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்ட போது, காந்தியடிகள் பாரபட்சத்திற்கு எதிராக உறுதியான நிலையை எடுக்க மறுத்தார். இந்தப் பிரச்சனையில் காந்தியடிகளின் நிலையை எதிர்க்கவும் பெரியார் துணிந்தார். 

காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணர், பிராமணர் அல்லா தார் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்தப் பின்னணி யில்தான் பெரியார் குடியரசு பத்திரிகையை துவக்கினார். அந்த ஏட்டின் முதல் இதழில் எல்லோரும் ஓர் குலம் என்ற பாரதியாரின் பாடலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளும் இடம்பெற்றன. காங்கிரஸ் கட்சி உயர் சாதியினரின் பிடியிலேயே இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம், ஆலயப் பிரவேசம் உள்ளிட்ட தீர்மானங்களை பெரியார் போன்ற பிராமணர் அல்லாத தலைவர்கள் கொண்டு வந்தபோது, பலமுறை தோற்கடிக்கப்பட்டது.  மறுபுறத்தில், பிராமணர் அல்லாதார் உரிமைக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி போன்ற அமைப்புகள் உருவாகி, நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியையும் பிடித்தது. 

பெரியாரும், நீதிக்கட்சியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டதற்கான சமூகப் பொருளாதார பின்புலம் அன்றைக்கு இருந்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசுப் பணிகளில் பிராமணர்களின் ஆதிக்கமே இருந்தது. மறு புறத்தில், பிற்படுத்தப்பட்டோர் மிகக் குறைந்த அளவி லேயே கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்ட நிலை இருந்தது.

இடஒதுக்கீட்டுக்காக  இடைவிடாத போராட்டம்

1925 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் 31வது மாகாண அரசியல் மாநாடு நடைபெற்றபோது, பிராமணர் அல்லாதார் மாநாட்டை பெரியார் நடத்தினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்து பெரியார் உள்ளிட்டவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ள மறுத்த நிலையில், பெரியார் அந்த மாநாட்டிலி ருந்து வெளியேறினார். மாநாட்டின் தலைவரான திரு.வி.க., ராஜாஜி ஆகியோர் வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டபோதும், அதை மறுத்து வெளியேறினார். பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரச்சனை குறித்து காந்தியடிகளுடன் பெரியார் நேரடியாக விவாதம் நடத்தி னார். இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. 

1928 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை பெரியார் ஆதரித்து பொதுக் கூட்டங்கள் நடத்தியதோடு, நிதியும் வசூலித்துக் கொடுத்தார். ஆங்கிலேய அரசு பெரியார் மீது வழக்கு தொடுத்து சிறை யில் அடைத்தது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முகுந்த் லால்சர்க்கார், கிருஷ்ணசாமி பிள்ளை மற்றும் 11 பேருக்கு திருச்சி நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.  காங்கிரசில் இருந்தபோது பெரியாருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அவரால் உருவாக்கப்பட்டது தான் சுயமரியாதை இயக்கம். காங்கிரஸ் கட்சியின் மாநாடு களிலேயே பிராமணர்களான காங்கிரஸ் தலைவர்கள் தனியாக சமைக்க ஏற்பாடு செய்து சாப்பிட்ட நிலையில், அவர் செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை மாநாட்டில், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை சமைக்க வைத்து சமபந்தி போஜனம் நடத்தியது இன்றைய நிலை யில் சாதாரணமாக தெரியலாம். ஆனால் அன்றைக்கு அது மிகப்பெரிய விஷயம்.

பெண்ணுரிமைப் போராளி

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில், தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அனைவரும் தங்கள் சாதிப் பட்டத்தை விட்டொ ழிக்க வேண்டுமென்றும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும், விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சிக்கன செலவில் திருமணம், கல்வி நிலையங்களில் தாய்மொழிக் கல்வி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளில் இலவச புத்தகம், உணவு, உடை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஆசிரியர் பணியில் பெண்களுக்கு அதிக இடம், துவக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை முற்றாக பெண்க ளுக்கே ஒதுக்க வேண்டும், உணவக பெயர்களில் சாதிய அடையாளம் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  1931 ஆம் ஆண்டு ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலை மையில் விருதுநகரில் நடைபெற்ற 3 வது மாநாட்டில், குழந்தைத் திருமணத்திற்கு தடை, தேவதாசி முறையை ஒழித்தல், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களில் பெண்க ளுக்கு பிரதிநிதித்துவம், 30 வயது வரை பெண்களை படிக்க வைக்க வேண்டும், காவல்துறை, ராணுவத்திலும் பெண்க ளுக்குப் பணி, விதவைகளுக்கு திருமணம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியார் குறித்து ஆதரிக்கிற அல்லது எதிர்க்கிற பலரும் பேச மறுக்கும் விஷயமாக பெண்ணுரிமை குறித்த அவரது கருத்துக்கள் உள்ளன. தாம் நடத்திய சுயமரியாதை மாநாடு களில் தனித்து வாழும் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். குழந்தை திருமணத் திற்கு தடை, தேவதாசி முறை ஒழிப்பு, விதவைகளுக்கு மறுமணம் போன்றவற்றிற்காக பெரியாரும் அவரது இயக்கமும் நடத்திய பிரச்சாரங்களும் போராட்டங்களும் அவரை கடுமையாக எதிர்த்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க ளுக்கும் கூட உதவியது என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் சமூக சீர்திருத்தத்தை ஒரு இயக்கமாக மாற்றி யதில் பெரியாரின் பெரும் பங்கை யாரும் நிராகரிக்க முடியாது.

சோவியத் பயணமும், திருப்பமும்

1931 ஆம் ஆண்டில் தன்னுடைய நண்பர் எஸ்.ராமநாத னுடன் சேர்ந்து பெரியார் மேற்கொண்ட சோவியத் பயணம் அவரது இயக்க வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.  முன்னதாக, லண்டன் சென்ற அவர், பிரபல கம்யூ னிஸ்ட் தலைவரான சாபூர் சக்லத்வாலாவை சந்தித்து உரையாடினார். அவர் கொடுத்த அறிமுகக் கடிதத்துடன் சோவியத் சென்ற பெரியாரும், எஸ்.ராமநாதனும் அரசு விருந்தினர்களாக மூன்று மாதங்கள் தங்கியிருந்தனர்.  நாடு திரும்பிய பின், பெரியார் தீவிர பொதுவுடமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் தோழர் என சேர்த்துக் கொள்ள வேண்டுமென பெரியார் அறிவிப்பு வெளியிட்டார். சோசலிசம் குறித்தும் பொதுவுடைமை கருத்துகள் குறித்தும் பெரியார் எழுதியும் பேசியும் வந்தார். 

கம்யூனிஸ்டு அறிக்கை நாகை டி.என்.ராமச்சந்திர னால் மொழி பெயர்க்கப்பட்டு, குடியரசு ஏட்டில் வெளியா னது. சிங்காரவேலர், ஜீவா போன்றவர்களுடன் இணைந்து பெரியாரும் பொதுவுடமை கருத்துக்களை பேசி வந்தார். சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை எழு தித் தருமாறு சிங்காரவேலரிடம் கேட்டுக் கொண்டதற்கேற்ப, ‘ஈரோடு திட்டம்’ எனும் செயல்திட்டம் உருவானது.  ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளியான தலையங்கத்தைத் தொடர்ந்து பெரியார், அவரது சகோதரி கண்ணம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெரியாரும் கண்ணம்மா வும் அபராதத்தை செலுத்த மறுத்து சிறை சென்றனர். 

1934 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ எனும் பகத்சிங்கின் நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவாவும், வெளியிட்டதற்காக பெரியாரின் சகோதரர் வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்தப் பின்னணியில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கெடுபிடி காரணமாக சோசலிசப் பிரச்சாரத்தை பெரியார் கைவிட்டார். சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, அவர் சிறையிலிருந்ததால், மாநாட்டு தலைவருக்கான இருக்கையில் பெரியாரின் படம் வைக்கப்பட்டது. சீமான்கள் கோமான்களின் கட்சியாக இருந்த நீதிக்கட்சி, பெரியார், அண்ணா போன்றவர்களின் முயற்சியால் திராவிடர் கழகமாகி வெகுமக்களை ஈர்த்தது.

பெரியாரோடு கம்யூனிஸ்டு இயக்கம் உடன்பட்டதும் உண்டு, முரண்பட்டதும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி குறித்த பெரியாரின் மதிப்பீடு மற்றும் அணுகுமுறை கம்யூனிஸ்டு களுக்கு ஏற்புடையது அல்ல. பின்னாளில், வெண்மணி கொடுமை குறித்த அவருடைய நிலைபாடும் ஏற்கத்தக்க ஒன்றல்ல. கம்யூனிஸ்டு இயக்கம் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார். கம்யூனிஸ்டு இயக்கமும் அவரது சில பொருத்தமற்ற நிலைபாடுகள் குறித்து விமர்சித்துள்ளது.  சேலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப் பட்டபோது, கடுமையாக எதிர்த்தவர் பெரியார். கம்யூனிஸ்டு களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகளையும் அவர் கண்டித்துள்ளார். பொதுவுடமை என்பதை விட பொது உரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அவருடைய நிலைபாடு குறித்தும் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. 

1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது அவர் பெரு மதிப்பு கொண்டிருந்தார். தோழர் பி.ராமமூர்த்தியின் திருமண வரவேற்பு பெரியார் தலைமையில்தான் நடைபெற்றது.   அவர் முன்வைத்த திராவிட நாடு கோரிக்கை காரிய சாத்தியம் இல்லாதது என்பதையும் நாடு சுதந்திரம் பெற்றது குறித்த அவரது எதிர்மறையான நிலைபாட்டை யும் கம்யூனிஸ்டுகள் விமர்சித்துள்ளனர். 

முழுமையான மதிப்பீடு தேவை

நாடு விடுதலைப் பெற்ற பிறகு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, பெரியார் நடத்திய பெரும் போராட்டம் காரண மாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது என்பதையும் அதனால் லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்டவர்கள் பலன் பெற்றனர், பலன் பெறுகின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது.  இந்தித் திணிப்புக்கு எதிராக கடவுள் நம்பிக்கை கொண்ட வர்களையும், சமயப் பற்று கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டு பெரியார் உள்ளிட்டவர்கள் நடத்திய போராட்டம் முன்னுதாரணமான ஒன்றாகும். பெண்ணுரிமைக்கு ஆதர வாகவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பெரியாரும், அவரது இயக்கமும் மேற்கொண்ட அயர்வற்ற போராட்டங்கள் தமிழகத்தை முற்போக்கான குணாம்சம் கொண்டதாக மாற்றியுள்ளது என்பதை யாரும் நிராகரித்து விட முடியாது.

தமிழ்மொழி எழுத்து சீர்திருத்தத்திற்கும் அவர் அரும் பணியாற்றியுள்ளார். துக்ளக் பத்திரிகை படித்தால், அறிவாளி என்று நண்பர் ரஜினிகாந்த் கூறுகிறார். பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ், ஆங்கிலம் என ஏராளமான பத்திரிகைகளை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக தலைகீழாக நின்று முயன்று பார்த்து விட்டது. அவர்க ளால் முடியவில்லை. இந்த நிலையில்தான், மகாபாரதப் போரில் பீஷ்மரை எதிர்க்க சிகண்டியை முன்னிறுத்தியது போல திரைத்துறை மூலம் ரஜினி பெற்ற செல்வாக்கை பயன்படுத்தி தங்களது சித்தாந்த செல்வாக்கை பெருக்கிக் கொள்ள முடியுமா என ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரம் முயன்று பார்க்கிறது. பெரி யார் குறித்த சர்ச்சையை ஏற்படுத்துவதன் மூலம் தங்களது நோக் கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர். நண்பர் ரஜினியே கூறி யிருப்பது போல, மறக்கப்பட வேண்டிய ஒன்றை அவர் மூலமே நினைவுபடுத்தி ஆதாயம் பெற முடியுமா என பார்க்கின்றனர்.  வரலாற்றுக் காலம் தொட்டு தனித்த பண்பாட்டு அடையா ளங்களும் ஆழமான சமூக நீதி பின்னணியும் அழுத்தமான பகுத்தறிவு பின்புலமும் கொண்ட தமிழ்நாட்டில் பாஜகவின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. நண்பர் ரஜினிகாந்த் பாஜக பரிவாரத்திடமிருந்து விலகி நிற்பதே அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நல்லது.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்



 

;