tamilnadu

img

மார்க்சியம் குறித்த விவாதம்... துக்ளக் குருமூர்த்திக்கு சில கேள்விகள்?

ஒரு ஆணுக்கு பெண் என்ற திருமண உறவு இருப்பதாலேயே அது குழந்தை, குடும்பம் என்று தனியார் சொத்து சேர்ப்பதில் போய் முடிந்துவிடும். எனவே பெண்களையும் பொதுவுடமையாக்க வேண்டும் என்று காரல் மார்க்ஸ் கூறினார். துக்ளக் இதழில் ( 05/ 08/2020) இவ்வாறு எழுதியுள்ளார் குருமூர்த்தி. இது மட்டுமல்லாது பெண்கள் பொது வேசியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மார்க்ஸ் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆதாரம் காரல் மார்க்ஸ் 1844 ஆம் ஆண்டில் எழுதிய Economic and Philosopic manucripts என்னும் நூலில் இருப்பதாகவும் சொல்கிறார். 

 குருமூர்த்தி குறிப்பிடுவது மார்க்ஸ் எழுதிய ஒரு ஆய்வுரை. இதை மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்துப் பார்த்தேன். அதில் இவ்வாறான வார்த்தைகள் எதுவுமே இல்லை. பெண்களை பொதுவுடமையாக்க வேண்டும் என்றும் எங்கும்எப்பொழுதும் சொல்லவில்லை. அவர் வகுத்துக்கொண்ட கொள்கைக்கு அது விரோதமான ஒன்று.இது மார்க்ஸ் மீது கொண்ட குருமூர்த்தியின் வன்மமாக தான் தெரிகிறது. கொரோனா காலத்திலும் அவரது மூளைக்குள் இந்த வன்மம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

மார்க்ஸ் எழுதிய அடிப்படைகளை புரிந்து கொள்ள சில தகுதிகள் வேண்டும். பெண் அடிமையானதற்கான காரணங்களை ஆராய்ந்த முன்னோடிகளில் காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவரும் முன்வரிசையில் இருப்பவர்கள். பெண்எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டாள் என்பதற்கான கருதுகோளை வேறு யாரையும் விட ஆழமாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளவர்கள் இவர்கள் இருவரும் தான்.  குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றிய நூல் பெண் அடிமையாக்கப்பட்டதை  வரலாற்று ரீதியாக ஆய்வு செய்துள்ளது. சொத்துடமை மூலம் தான்பெண் அடிமையாக்கப்பட்டாள் என்பதை இது நிரூபிக்கிறது. காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலேயே இதைப்பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மனிதருக்கு மனிதர் - அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, தந்தை மகனாக இருந்தாலும் சரி, தந்தை மகளாக இருந்தாலும் சரி, ‘ரொக்கப் பட்டுவாடா’ என்ற உறவை தவிரவேறு எந்த உறவையும் இல்லாமல் செய்துவிட்டதுமுதலாளித்துவ சமூகம் என்பதை மார்க்ஸ் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். ஆணுக்கும் பெண்ணுக்கும் அமைந்த மேன்மையான உறவை வெறும் லாபம் சார்ந்த உறவாக மாற்றி, முதலாளித்துவம் பெண்ணை ஒரு வியாபாரப் பொருளாக கேவலப்படுத்தி விட்டது என்ற கருத்தில் உறுதி கொண்டிருந்தார் மார்க்ஸ். 

 ஆனால் பெண்கள் பொது வேசியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மார்க்ஸ் கொண்டிருந்தார் என்கிறார் குருமூர்த்தி. பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்திய சமூக அமைப்பு எது என்பதற்கு குருமூர்த்தி தான் பதில் சொல்ல வேண்டும். ஜார் மன்னனின் ஆட்சியில் முழு ரஷியாவும் பாலியல் பலாத்காரத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது. ரஷியப் புரட்சி தான் அவர்களை விடுதலை செய்து புதுமைப்பெண்களாகவும் புரட்சிப் பெண்களாகவும் மாற்றியது.புரட்சிக்குப் பின்னர் தான் சீனாவில் பெண்ணுக் கான கௌரவம் கிடைத்தது. இதற்கு வியட்நாம் மற்றும் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. குருமூர்த்தி அவர்களுக்கு சில கேள்விகள். பெண்களை விற்பனைப் பொருளாக பார்க்கக்கூடிய பார்வையை உருவாக்கி, பாலியல் விடுதிகளை திறந்தது யார்? முதலாளித்துவத்தில் உருவாக்கப்பட்டு இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளால் அது ஒரு லாபகரமான  தொழிலாகவே நடத்தப்பட்டு வருவதை உங்களால் மறுக்க முடியுமா? முதலாளித்துவம் பெண்ணை அடிமையாக்கு கிறது. அவமானப்படுத்துகிறது. மார்க்சீயம் பெண்விடுதலையை முன் வைக்கிறது இதை உங்களால் ஆதாரத்தோடு மறுக்க முடியுமா? . 

 இன்றைய காலத்தில் குருமூர்த்தி போன்றவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் இடைத்தரகர்களை போல செயல்பட்டு வருகிறார்கள். அதன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  கார்ப்பரேட் உலகமயத்தில் பெண்ணுக்கான இடம்எது? பெண்ணை எவ்வாறெல்லாம் பாலின அடிமையாக கார்ப்பரேட் வியாபாரம் செய்து வருகிறது என்பதை அறியாதவர் அல்ல குருமுர்த்தி. பாலியல் தொழிலை வளர்த்தெடுத்தது முதலாளித்துவ சமூகம் தான், சோசலிச சமூகம் அல்ல. பெண்ணுரிமை என்னும் கருத்து நிலையை குருமூர்த்தியால் ஏற்றுக் கொள்ள முடியாது, காரணம் குருமூர்த்தி அடிப்படையில் ஒரு சனாதனவாதி. இந்திய சனாதனம் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கிறது. உழைக்கும் பகுதியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் சரி, உயர் சாதியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் ஆண்களை வழிபட வேண்டியவர்களாகவே பெண்கள் இந்து சனாதன தருமத்தில் கருதப்படுகிறார்கள். பிராமண சமூகத்தில் பிராமணப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. முதியவருக்கு திருமணம் செய்து வைத்து, இளம்பெண்ணை உடன்கட்டை ஏற்றிய கொடுமையை இந்திய சனாதனம் உருவாக்கியது. நான் ஒரு தகவலை வாசித்த போது மிகவும் உறக்கமற்று போனேன். ஒரு இளம் பிராமண விதவை. இதை இளம்விதவை என்று கூட சொல்ல முடியாது. குழந்தை விதவை என்று தான் சொல்ல வேண்டும். குழந்தையின் கரிய அழகான கூந்தலை அகற்றுகிறார்கள். தரையில் விரிப்பு எதுவும் இல்லாமல் கல்லில் படுக்கச் சொல்லுகிறார்கள். உப்பில்லாமல் சாப்பிட நிர்பந்திக்கிறார்கள். பனம் பழத்தை நெருப்பில் சுட்டு வாய் பகுதியில் வைத்து, முத்து போன்ற பற்களை செயற்கையாக விழச் செய்கிறார்கள். அவள் அழகுடன் இருந்தால் ஆண்கள் அவள் மீது காதல் கொண்டு விடுவார்கள். சாதிக் கலப்பு வந்து விடும் என்று பயப்பட்டார்

கள் . காரல் மார்க்ஸ் அவர்களை பரிசோதனை க்கு உட்படுத்தும் குருமூர்த்தி அவர்களே, நீங்கள்என்றாவது ஒரு நாள் இதற்காக வருந்தியது  உண்டா? இதன் மீது விமர்சனம் கொண்டது உண்டா? இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்ட மிக மிக மோசமான அருவெறுப்பான ஒருமுறை தான் தேவதாசி முறை. குழந்தையை தேவதாசியாக்கி, இது எத்தனை பாலியல் தீண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த குழந்தைகள் சில நேரங்களில் மனக்கண்கள் முன் தோன்றிவிடுகின்றன. இவை இன்று வரை எந்த தத்துவத்தால் நியாயப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த சனாதன தத்துவம் பற்றி உங்கள் நிலைபாடு என்ன?

மார்க்ஸ் என்ற மாமனிதரின் வரலாறு, உலகமாற்றத்திற்கான வரலாறாக இன்று வெளிச்சத் திற்கு வந்துவிட்டது. காலமெல்லாம் அவரை எதிர்த்தவர்கள் அவர்தான் சமுதாய மாற்றத்தை, அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லக் கூடியவர்என்கிறார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் காரல் மார்க்சை தாடியும் மீசையும் வைத்த பூதத்தை உருவாக்கிய மந்திரவாதிஎன்றார்கள். இன்றைய கார்ப்பரேட் உலகமய த்தில் இந்த மந்திரவாதி தான் இளைஞர்களுக்கு களம் அமைத்து போராடும் வலிமையைத் தந்து வருகின்றார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நேரத்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி காரல் மார்க்சை களங்கப்படுத்தும் தீவிரசதியில்  ஈடுபட்டிருக்கிறார். மார்க்ஸின் கருத்து வலிமை உலகத்தை மாற்றுகிறது என்ற பதற்றத்தில்இவர் இந்த கருத்தை வெளியிட்டு இருக்க வேண்டும். இதை விடுத்து பெண்களை பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் தவறாக  எழுதியுள்ளதாக இவர் கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் அருவெறுக்கத் தக்க புரட்டு.
எந்த ஒரு மனிதரும் வலதுசாரி கருத்து உடையவராக இருக்கலாம். இடதுசாரி கருத்துக்கு ஆதரவாக இருக்கலாம். அது அவர்களின் கருத்துக்கு தரப்பட்ட  சுதந்திரம். ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். எதையும் திசை திருப்பி வேறுஒரு பொருளில் சொல்லக்கூடாது. குருமூர்த்தி அவர்களிடம் அறிவு நேர்மை என்பது கொஞ்சம்கூட இல்லை. இதுதான் அவருடைய பிரச்சனை.காரல் மார்க்ஸ் பற்றி எதையும் படிக்காமல் தன்னை சிந்தனையாளராக காட்டிக் கொள்வதற்காகவே பொய் சொல்கிறார் குருமூர்த்தி.

===சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி===