tamilnadu

img

காவலரை கொன்ற நபருக்கு ஆதரவாக முகநூல் பகிர்வு... நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே வனப் பகுதியில் கடந்த 18-ம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்து என்பவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்ற போது, அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ் நோக்கி வீசி எறிந்தார். அதில் காவலர் சுப்பிரமணியம் மீது வெடிகுண்டு விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குண்டுகளை எறிந்தபோது கைகளில் படுகாயம் ஏற் பட்ட நிலையில் துரைமுத்துவும் இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து துரைமுத்துவின் சகோதரர்கள் 3 பேரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.இதனிடையே காவலர் சுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. துரைமுத்துவின் உடலை உறவினர், நண்பர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பெரிய அளவிலான அரிவாள் ஒன்றையும் துரைமுத்துவின் உடலுடன் சேர்த்து புதைத்தனர். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில், துரைமுத்துவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வெள்ளப் பாண்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நெல்லை ஆயுதப்படை காவலரான சுடலைமுத்து என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சக காவலரை கொன்ற நபரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவலர் சுடலைமுத்துவை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் தீபக் டாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

;